Ad

சனி, 19 நவம்பர், 2022

மதுரை: தவறான சிசிச்சையால் இறந்தாரா குழந்தை பெற்றெடுத்த பெண்? - உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசு உடனே தலையிட்டு சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தது மட்டுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்கியுள்ளது.

மரணமடைந்த கனிமொழியின் தாய், கணவர்

இதேபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண், மரணமடைந்த சம்பவத்தில் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் 3 குழந்தைகளுடன் நிர்கதியான கணவரும்... உறவினர்களும், சமூக செயற்பாட்டளர்களும்.

இந்தச் சம்பவத்துக்கு நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் முறையிடும் அந்தக் குடும்பத்துக்கு சட்ட உதவி செய்து வரும் மதுரை சமூகநீதி அமைப்பைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் பேசினோம். "தேனி மாவட்டம், கண்டமானுரைச் சேர்ந்தவர்கள் சுரேஷ், அவர் மனைவி கனிமொழி. இவர்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கனிமொழி 3-வது குழந்தையை பிரசவிக்க தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அப்படியே கருத்தடையும் செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில்தான், திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜூன் 16-ம் தேதி இறந்துவிட்டார்.

தவறான சிகிச்சையால்தான், தன் மகள் கனிமொழி இறந்துவிட்டாள் என்று தாயார் பூங்கொடி அங்குள்ள மருத்துவர்களிடம் அழுது முறையிட்டும், அவர்களோ போலீஸை வைத்து மிரட்டி வெளியேற்றியுள்ளனர்.

கனிமொழி குடும்பத்தினருடன் ஆறுமுகம்

'நல்லா இருந்த பிள்ளையை தப்பான ஊசி போட்டு கொன்னுட்டாங்க' என்று போலீஸிடமும் சொல்லிக் கதற, 'மத்த நோயாளிங்க பயந்துருவாங்க, சத்தம்போட்டு அழாதே' என்று அவர்கள் பங்குக்கு அதட்டியிருக்கிறார்கள். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த கணவன் சுரேஷிடம், 'நடந்தது நடந்து போச்சு. உன் மனைவிக்கு ஏற்கெனவே காச நோய் இருந்ததால இப்படி ஆயிருச்சு' என்று சமாதனம் செய்து அடக்கம் செய்ய அனுப்பிவிட்டார்கள்.

ஆனால், கனிமொழி திருமணத்துக்கு முன்பும், பின்பும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். ஏற்கெனவே நடந்த பிரசவங்கள், சிறு வயதில் எடுத்த காசநோய்க் சிகிச்சைக்கான விவரங்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். 3-வது குழந்தைக்கான டிஸ்சார்ஜ் சம்மரியும் கொடுக்கவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து எங்கள் அமைப்புக்குத் தெரியவந்தது. பயிற்சி டாக்டர் மூலம் தவறான ஊசி செலுத்தப்பட்டதால்தான் கனிமொழியின் உடல்நிலை மோசமாகி மரணம் நேர்ந்துள்ளதை, படிப்பறிவு இல்லாவிட்டாலும் தாயார் பூங்கொடி நடந்த சம்பவத்தையும், அதை மறைக்க டாக்டர்கள் நடத்திய நாடகத்தையும், போலீஸை வைத்து மிரட்டியதையும் தெளிவாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பூங்கொடி மூலம் முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆறுமுகம்

அதன் பின்புதான் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தோம். ஆகஸ்ட் 26-ம் தேதி சிகிச்சை அளித்த ஆவணங்களை மனுதாரர் பூங்கொடிக்கு கொடுக்க உத்தரவிட்டார் நீதிபதி.

செப்டம்பர் 9-ம் தேதி சுகாதாரதுறை முதன்மை செயலர், மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர், துறைத் தலைவர்கள்/மருத்துவர்களைக் கொண்ட குழு அமைத்து சம்பவத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

நவம்பர் 1-ம் தேதி நீதிமன்றத்தில் மருத்துவர் குழு அறிக்கை தாக்கல்செய்திருக்கிறது. ஆனால், அந்த அறிக்கை மனுதாரர் பூங்கொடியிடம் தருவதற்கு அரசு தரப்பில் மறுக்கப்பட்டு சீலிட்டு நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

மனுதாரர் பூங்கொடி கோரிக்கை வைத்ததன் காரணமாகவே நீதிமன்றம் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட்டது. அப்படியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பூங்கொடிக்கு மருத்துவக்குழுவின் அறிக்கை கிடைக்கவில்லை.

ஆனால், ஏற்கெனவே பெறப்பட்ட இறப்பு அறிக்கையில் பிபேரஸிலின் ஊசி செலுத்தப்பட்டதால் கனிமொழிக்கு அனாபிளாடிக்ஸ் ஷாக் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. ஏழை பட்டியலினப் பெண், அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் மரணமடைந்திருக்கிறார். அதை மறைக்கப் பார்க்கிறார்கள். நீதிமன்றத்தைதான் நம்பியிருக்கிறோம். முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் கனிமொழி வழக்கிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/a-young-woman-died-due-to-wrong-treatment-at-govt-hospital-relatives-alleging

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக