Ad

சனி, 19 நவம்பர், 2022

SUV கார், ரூ.2.11 கோடி ரொக்கம் அன்பளிப்பு: தேர்தலில் தோல்வியடைந்தவரை மனம் நெகிழ வைத்த கிராம மக்கள்!

ஹரியானா மாநிலத்தின் சிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்பால். இவர் லக்கன் மஜ்ராவிலுள்ள சமிதி பிளாக்கின் தலைவராக இருந்து வருகிறார். இவர் தாயார், தாத்தா சிரி கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருந்தவர்கள். இந்த நிலையில், தரம்பால் சிரி கிராமத்தில் நடந்த பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்து விட்டார். 66 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் தரம்பாலுக்கு சிரி கிராமத்தினர் பெரும் விழாவையே ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இந்த விழாவில் பஞ்சாயத்து பிரதிநிதிகள் உட்பட லகான் மஜ்ரா தொகுதிக்குட்பட்ட கிராமவாசிகள் பலர் கலந்துகொண்டனர். லகான் மஜ்ரா தொகுதிக்குட்டப்பட்ட 485 கிராமங்களுக்கும் தலைவர் பொறுப்பை வகிக்கும் பலே ராம் என்பவர் இந்த விழாவுக்குத் தலைமை தாங்கினார். இந்த விழா குறித்துப் பேசிய அவர், ``தரம்பால் கிராமவாசிகளுக்குத் துணையாக நிற்பவர். ஆனால், தேர்தலில் தோல்வியடைந்துவிட்டார்.

நாங்கள் இன்னும் அவருடன் இருக்கிறோம் என்பதை அவருக்குத் தெரிவிக்க விரும்பினோம். தோல்வியால் அவர் மனம் தளர்ந்து விடக்கூடாது என்பதே இந்த விழாவின் பின்னணியில் உள்ள யோசனை" என்றார்.

இது குறித்து தரம்பால் கூறுகையில், "குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என எல்லாரும் எனக்கு அளித்த அன்பையும் மரியாதையையும் கண்டு நான் வியப்படைகிறேன். நான் எப்போதும் என் சகோதர சகோதரிகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். அவர்களின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிப்பேன்" என்றார்.

விழாவில் தரம்பாலுக்கு தலைப்பாகை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டது. அதோடு, கிராம மக்கள் அனைவரும் இணைந்து ரூ.2.11 கோடியையும், Scorpio SUV காரையும் அன்பளிப்பாக வழங்கினர்.



source https://www.vikatan.com/news/india/rohtak-villagers-gift-rs-211-crore-suv-to-man-who-lost-sarpanchs-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக