Ad

ஞாயிறு, 13 நவம்பர், 2022

தைவானுடன் போருக்குத் தயாராகிறதா சீனா?... அதிபர் ஜி ஜின்பிங் அதிரடியின் பின்னணி என்ன?!

பல ஆண்டுகளாகவே, தைவான் நாட்டுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருகிறது சீனா. விரைவில் அந்நாட்டின் மீது போர் தொடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் தொடக்கம் எப்போது என்பதைப் பார்க்கலாம்.

சீனாவில் 1890-களில் நடத்தப்பட்ட போராட்டங்களில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. பிறகு, சீன தேசியக் கட்சி 1911-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கிடையில் 1927-ல் ஆளுங்கட்சிக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட் கட்சிகள் கலகத்தில் ஈடுபட்டனர். சுமார் 22 ஆண்டுகளாக இரு கட்சிகளுக்கும் இடையில் போர் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது. தேசியக் கட்சியில் இருக்கும் முக்கியத் தலைவர்களும், அதன் ஆதரவாளர்களும் உயிருக்கு அஞ்சி தென் சீனக் கடலில் உள்ள தீவுப் பகுதியான தைவானுக்குக் குடியேறினர். அப்போது தைவனை அவர்களாகவே சுதந்திர நாடாகவும் அறிவித்துக்கொண்டனர். இதைத் தொடக்கம் முதலே ஏற்காத சீனா, தைவானைத் தன்னுடன் சேர்க்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து எடுத்துவந்தது.

சீனா - தைவான் போர்

 தைவானை சீனாவுடன் சேர்க்க அந்நாட்டுடன் மோதல் போக்கைக் கையாண்ட சீனாவை மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துவந்தன. மேலும் தைவானுக்கு ஆதரவாகவும் பேசிவந்தன. இதனால் அந்த நாடுகளை எதிர்த்து சீனாவால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையை இருந்தது. ஆனால் சமீபகாலமாக சீனாவுடன் தைவனை இணைத்தே ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்.

ரஷ்யா - உக்ரைன் போர்

அதற்குக் காரணம் என்ன?

அதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது உக்ரைன் - ரஷ்யாவின் போர்தான். உக்ரைன் நேட்டோவில் இணைவதைத் தடுப்பதற்கும், உக்ரைனைத் தங்கள் நாட்டுடன் இணைப்பதற்கும், ரஷ்யா, உக்ரைன்மீது போர் தொடுத்திருப்பதை முன்னுதாரணமாகக்கொண்டு சீன அரசும் தைவான் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவை தைவானுக்குத் துணையாக இருக்கும் நிலையில் சீனா போரை எப்படித் தொடங்கும் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

அமெரிக்க சபாநாயகரின் வருகை!

கடந்தமுறை இணைய வழியாக நடந்த பேச்சுவார்த்தையின்போது, தைவானுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கஅதிபரிடம், `நெருப்புடன் விளையாட வேண்டாம்’ எனக் கூறினார் சீன அதிபர். அந்தச் சூழலில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்குப் பயணம் செய்தது இரு தரப்பு உறவை மேலும் சீர்குலைத்ததாகக் குற்றம்சாட்டினார்.

பெலோசியின் வருகைக்கு பதிலடியாக, பீஜிங் தைவானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், தீவைச் சுற்றி நேரடி துப்பாக்கிச்சூடு மற்றும் ராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியது. இதை தைவான் பாதுகாப்பு அதிகாரிகள் ஆத்திரமூட்டும் செயல் என விமர்சித்தனர்.

நான்சி பெலோசி

மேலும் கோபத்தில் ஜி ஜின்பிங்!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானில் அண்மையில் மேற்கொண்ட பயணம் சீனாவைச் சீண்டிப் பார்க்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.  இதற்கு ஜி ஜின்பிங் உடனே எதிர்வினையும் ஆற்றினார். “சிங்கத்தின் அமைதியை அலட்சியப்படுத்த வேண்டாம்” என்றார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க, புதிதாக இங்கிலாந்தின் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் ரிஷி சுனக்கும் தைவானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகிறார். இது சீனாவின் பொறுமையை மீண்டும் சோதித்தது. இந்த நிலையில்தான், சீன ராணுவத் தலைமையகத்துக்கு அதிரடியாக வந்த ஜி ஜின்பின், போருக்கு முழுவீச்சில் தயாராகுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். ஒட்டுமொத்த ராணுவமும், முழு ஆற்றலுடனும், அர்ப்பணிப்போடும் போருக்குத் தயாராக வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

சீன ராணுவம்

குறிப்பாக அதிபர் ஜி ஜின்பிங் இந்த உத்தரவைப் பிறப்பிக்கும்போது எந்த நாட்டுக்கு எதிராகப் போர் தொடுக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிடவில்லை. ஆனாலும், தைவான்மீதுதான் சீனா போர் தொடுக்கவிருப்பதாக அந்நாட்டிலிருந்து தொடர்ந்து தகவல் வெளியாகிவருகிறது.

ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை!

இந்தோனேசியாவில், பாலி நகரில் ஜி20 மாநாடு நடக்கவிருக்கிறது. இதில் பங்கேற்பதற்கு முன்னதாக, வரும்  திங்கள்கிழமை  சீன அதிபர் ஜி ஜின்பிங் - அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் சந்தித்து பேசவிவிருக்கின்றனர். ஆனால், இது இன்னமும் சீனத் தரப்பிலிருந்து உறுதிசெய்யப்படவில்லை. ஆனால், இந்தச் சந்திப்பை வெள்ளை மாளிகை உறுதிசெய்திருக்கிறது. தைவான்மீது கடைப்பிடிக்கும் பொருளாதார நடைமுறைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா பேசவிருப்பதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பைடன் - ஜி ஜின்பிங்

தைவானின் எதிர்ப்பார்ப்பு என்ன?

தைவான் வெளியுறவு மந்திரி ஜோசப் வூ, கடந்த வியாழன் அன்று அளித்த பேட்டி ஒன்றில், சீன- அமெரிக்கத் தலைவர்களின் சந்திப்பை வரவேற்பதாகக் கூறினார். இது தொடர்பாகப் பேசிய அவர், "சீனா, தைவானை ராணுவரீதியாக அச்சுறுத்துகிறது. மேலும், சர்வதேச அளவில் தைவானைத் தனிமைப்படுத்த முயல்கிறது. சீனா, தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது. எனவே, தைவானுக்கும் சீனாஉக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தீர்ப்பது மற்றும் அமைதிக்கான சூழலை உருவாக்க  சர்வதேசத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்" என்றார்.

தைவான்

அமைதி  மட்டுமே தைவானின் வேண்டுகோளாக இருக்கும் நிலையில், சீனாவின் மோதல் போக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. இந்த மோதல் போக்கை கைவிடவும், போர் ஏற்படாமல் இருக்கவும் இந்த இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. எனவே, பேச்சுவார்த்தை உறுதியாகி, அதில் நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/is-war-going-to-explode-between-china-and-taiwan-what-is-the-status-now

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக