Doctor Vikatan: எனக்கு இன்னும் 6 மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது. என்னுடைய தொடைப்பகுதியும் அந்தரங்கப் பகுதியும் மிகவும் கருத்துப் போயிருக்கின்றன. இந்தப் பகுதி சருமத்தை நிறம் மாற்ற பிரத்யேக சிகிச்சைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது குறித்து விளக்க முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.
இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை பலருக்கும் தொடைப்பகுதி சற்று பெரிதாக இருப்பதைப் பார்க்கலாம். அதன் காரணமாகத் தொடைகள் ஒன்றோடு ஒன்று உரசும். பருமனான பெண்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். தொடைகள் உரசி, உரசி அந்த இடம் கருத்துப்போகும்.
இதைத் தவிர்க்க முதல் வேலையாக காற்றோட்டமான, தளர்வான உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான உள்ளாடைகள், லெக்கிங்ஸ், ஜீன்ஸ் போன்றவற்றை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
உள்ளாடைகளை நன்கு துவைத்து, கொஞ்சம்கூட ஈரமின்றி காயவைத்து, முடிந்தால் அயர்ன் செய்து அணிவது சிறப்பு. ஆன்டிஃபங்கல் பவுடர் போட்டுக்கொண்டு அதன் பிறகு உள்ளாடை அணிவதன் மூலம் அந்தப் பகுதியில் வியர்வை தங்குவது தவிர்க்கப்படும். வியர்வை தங்கினால்தான் இன்ஃபெக்ஷன் வரும்.
பிறப்புறுப்புப் பகுதியின் கருமையைப் போக்க முடியுமா என்ற கேள்வியோடு நிறைய இளம்பெண்கள் வருகிறார்கள். தென்னிந்தியர்களின் சருமத்தில் அந்த நிறத்துக்கு காரணமான மெலனின் செல்கள் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அதனால் நம் சரும நிறம் மாநிறத்திலும் அந்தரங்க உறுப்புகளின் சருமமானது அதைவிட ஒன்றிரண்டு ஷேடு இன்னும் டார்க்காகவோ இருக்கக்கூடும்.
இந்தக் கருமையைப் போக்குவதற்காக க்ரீமோ, ப்ளீச்சோ, சிகிச்சையோ செய்வதன் மூலம் அந்தப் பகுதி சருமத்துக்கு மேலும் பாதிப்பையே நாம் ஏற்படுத்துகிறோம். அந்தரங்க உறுப்புகளில் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வராமல் பார்த்துக் கொள்வதும், அந்த இடத்து ரோமங்களை ட்ரிம் செய்துவிடுவதும், சுத்தமான உள்ளாடைகளை அணிவதும்தான் ஆரோக்கியத்துக்கு அடிப்படை.
எனவே, தேவையற்ற தகவல்களை நம்பி அந்தரங்கப் பகுதியின் சரும நிறத்தை மாற்ற நினைப்பது தேவையற்றது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-is-it-possible-to-get-rid-of-dark-spots-on-thighs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக