Ad

செவ்வாய், 1 நவம்பர், 2022

`மூன்று நாள்களுக்கு மழை தொடரும்’ - வானிலை ஆய்வு மையம்; சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், "அடுத்த மூன்று தினங்களுக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ள அநேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மழை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ் பகுதியில் 13 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

நவம்பர் 02-ம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேகமான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

மழை

தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். சென்னையைப் பொறுத்தவரை, நவம்பர் 1-ம் தேதி 8 செ.மீ. மழைப் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கடந்த 72 ஆண்டுகளில் இது மூன்றாவது அதிகபட்சம் ஆகும். கடந்த 30 ஆண்டுகளைப் பொறுத்தவரை இது முதல் அதிகபட்சம். 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13 செ.மீ. மழையும். 1964-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 செ.மீ. மழையும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது" என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக, இதுவரை சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/disaster/rain-will-continue-for-the-next-three-days-information-from-meteorological-department

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக