Ad

செவ்வாய், 22 நவம்பர், 2022

குர்ஆன் ஒப்புவிக்கும் போட்டி; வெற்றி பெற்ற 4-ம் வகுப்பு இந்து சிறுமி... குவியும் பாராட்டுகள்!

இஸ்லாமியர்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது குர்ஆன். இந்த நிலையில், குர்ஆன் ஒப்புவிக்கும் போட்டியில், (Quran Recitation Competition) நான்காம் வகுப்பு படிக்கும் இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி வெற்றி பெற்ற சம்பவம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் கோழிக்கோடு தோடனூர் துணை மாவட்ட கலை விழாவில், குரான் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. அதில் பலரும் கலந்து கொண்ட நிலையில், இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் பார்வதி என்ற சிறுமி வெற்றி பெற்றிருக்கிறார்.

இச்சிறுமியின் தந்தை நலீஷ் பாபி, ஒரு ஐ.டி ஊழியர், தாய் தினா பிரபா அரசுப்பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு பார்வதி மற்றும் பர்வனா என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரையும் வேறு மொழியைக் கற்க பெற்றோர் ஊக்கப்படுத்தி உள்ளனர்.

அதன் அடிப்படையில் பார்வதி மற்றும் பர்வானாவை முதலாம் வகுப்பில் இருந்தே, அரபி மொழியைக் கற்க உற்சாகப்படுத்தி இருக்கின்றனர்.

தற்போது செம்மரத்தூர் வெஸ்ட் எல்.பி பள்ளியில் பார்வதி நான்காம் வகுப்பு படித்து வரும் நிலையில், தோடனூர் துணை மாவட்ட கலை விழாவில் நடைபெற்ற போட்டியில், மிகவும் சரளமாக அரபு மொழியில் குர்ஆனை ஒப்பித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

யூடியூபில் சுமார் இரண்டரை நிமிடம் இச்சிறுமி குர்ஆன் வாசிக்கும் வீடியோ வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும், கவனத்தையும் பெற்றுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/education/4th-class-hindu-girl-won-quran-recitation-competition

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக