பீகாரில் இதற்கு முன்பு இரும்பு பாலத்தை அரசு ஊழியர்கள் என்று சொல்லி கேஸ்கட்டர் வைத்து வெட்டி எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதே போன்று கடந்த சில நாள்களுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைத்து ரயில் எஞ்சினையே திருடிச்சென்றனர். தற்போது செல்போன் கம்பெனி அதிகாரிகள் என்று கூறி செல்போன் டவரையே திருடிச்சென்றுவிட்டனர். பாட்னாவில் உள்ள ராஜ்புதன காலனியில் வசிக்கும் லாலன் சிங் என்பவரின் வீட்டில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு இருந்தது. லாலன் சிங் வீட்டிற்கு சிலர் வந்து, நாங்கள் செல்போன் கம்பெனியிலிருந்து வந்திருப்பதாகவும், இந்த செல்போன் டவரால் கம்பெனிக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். அதோடு இந்த செல்போன் டவரை நாங்கள் பிரித்து எடுத்துச் செல்லப்போவதாகவும் தெரிவித்தனர்.
லாலல் சிங்கும் எந்தக்கேள்வியும் கேட்காமல் பிரித்து எடுத்துச்செல்லும்படி கூறிவிட்டார்.
25 பேர் கொண்ட கும்பல் மூன்று நாள்கள் வேலை செய்து கேஸ் கட்டர் மூலம் ஒவ்வொரு பகுதியாக வெட்டி எடுத்தனர். பின்னர் லாரியில் அனைத்தையும் ஏற்றிச்சென்றுவிட்டனர். திருடப்பட்ட செல்போன் டவரின் மதிப்பு ரூ.19 லட்சமாகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு லாலன் சிங் வீட்டில் இந்த செல்போன் டவர் வைக்கப்பட்டது. செல்போன் டவர் திருடப்பட்டதால் அப்பகுதியில் மொபைல் போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து செல்போன் டவர் பராமரிப்பு பணிகளுக்காக கம்பெனி ஊழியர்கள் வந்து பார்த்தபோதுதான் டவரையே காணவில்லை என்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
source https://www.vikatan.com/news/crime/a-gang-stole-a-cell-phone-tower-in-patna-claiming-to-be-officials
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக