Ad

வெள்ளி, 18 நவம்பர், 2022

மத்திய அரசின் சீராய்வு மனுவால் 6 பேர் விடுதலை மாற்றி எழுதப்படுமா?! - வழக்கறிஞர் சொல்வதென்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்  என தொடர்ச்சியாகத் தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வந்தது. இந்தநிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இந்தச்சூழலில், பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த மே 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பேரறிவாளன்

அப்போது, சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த  பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மற்ற 6 பேரும் விடுதலை செய்ய முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் பேரறிவாளன் விடுதலை வழக்கைச் சுட்டிக் காட்டி நளினி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்தநிலையில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான நீதிபதி பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

குறிப்பாக, பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும். நீண்ட நாள்கள் சிறையிலிருந்தது, சிறையில் 6 பேரின் நடத்தையும் திருப்திகரமாக இருந்தது, நன்னடத்தை, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறை, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 6 பேரின் விடுதலைக்குப் பலர் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். 

நளினி

இந்தநிலையில், 6 பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 17-ம் தேதி மத்திய அரசு தரப்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "இந்த வழக்கை வாதாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சட்டப்பூர்வ  குறைபாட்டைக் கொண்டது. மனுதாரர்களின் தரப்பில் காணப்பட்ட நடைமுறைக் குறைபாடு காரணமாக வழக்கின் அடுத்தடுத்த விசாரணைகளில் மத்திய அரசால் பங்கேற்க முடியாமல் போனது.

நளினி, முருகன்

இந்த விவகாரம் தொடர்பாக தமது தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவைப் புதிதாகப் பரிசீலித்து மாற்றியமைக்க வேண்டும்." என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதேபோல், மன்னிப்பு வழங்கப்பட்ட 6 பேரில் நான்கு பேர் இலங்கை பிரஜைகள் என்பது முக்கியமானது என்பதையும் மத்திய அரசு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு செய்துள்ளது கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியிருக்கிறது. இது 6 பேரின் விடுதலையை  பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதுகுறித்து, வழக்கறிஞர் சீனிவாச ராவிடம் கேட்டபோது, "இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு. பேரறிவாளனை எப்படி விடுதலை செய்தார்களோ அதை அடிப்படையாக வைத்தே முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்திருக்கிறார்கள். இதேபோல், சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங்களை ஆளுநர் ஒன்று ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

சீனிவாசராவ்

இல்லை ரத்து செய்திருக்க வேண்டும். அதற்குப்  பதிலாக நீண்ட நாட்கள் கிடப்பில் போட்டு வைத்தார். ஆளுநர்  கோப்புகளைக்  கிடப்பில் போட்டது தான் விடுதலைக்கு முகாந்திரமாக அமைந்தது. சொல்லப்போனால் விடுதலையாவதற்கு முக்கிய காரணமே மத்திய அரசு தான். மத்திய அரசின் நேரடி ஏஜென்டாக செயல்படுபவர் ஆளுநர். இதை  சுட்டிக்காட்டித் தான் உச்ச நீதிமன்றம் 6 பேரையும் விடுதலை செய்துள்ளது. இந்த சூழலில் சீராய்வு மனு செய்வது சட்டத்திற்குப்  புறம்பானது. இதுபோன்ற காரணங்களால் மத்திய அரசு அளித்துள்ள சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படவே வாய்ப்புகள் அதிகம்" என்றார்.  



source https://www.vikatan.com/government-and-politics/politics/central-government-appeal-to-supreme-court-regarding-6-person-release-will-work

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக