Ad

வியாழன், 24 நவம்பர், 2022

``மத்திய அரசு அனுப்பிய `பார்சலை’ திரும்ப பெறவில்லையெனில்..." - யாரை குறிப்பிடுகிறார் தாக்கரே?!

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கொஷாரி சமீபத்தில் சத்திரபதி சிவாஜிக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முதல்வர் ஏக்‌நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜகவினர் கூட இக்கோரிக்கையை முன் வைத்தனர். இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளித்துள்ள பேட்டியில், ``மத்திய அரசு அனுப்பிய அமேஸான் பார்சல் ஆளுநர் கொஷாரி. அந்த பார்சல் மகாராஷ்டிராவிற்கு தேவையில்லை. எங்களுக்கு அந்த பார்சல் தேவையில்லை என்பதால் அதனை மத்திய அரசு உடனே திரும்ப பெறவேண்டும். இதற்கு முன்பு சமூக சீர்திருத்தவாதிகள் சோதிபா புலே, சாவித்ரிபாய் புலே ஆகியோரை அவமதித்தார். அதோடு மும்பை, தானேயில் இருக்கும் மராத்தியர்களையும் அவமதித்து பேசினார்.

கொஷாரி

இப்போது சத்ரபதி சிவாஜியை ஆளுநர் அவமதித்துள்ளார். எனவே அடுத்த சில நாள்களில் ஆளுநரை திரும்ப பெறவில்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். ஆளுநர் கொஷாரியா எப்போதும் மகாராஷ்டிரா தலைவர்களை அவமதித்துக்கொண்டிருக்கிறார். மத்திய அரசு நினைப்பதைத்தான் கொஷாரி சொல்கிறாரா? ஆளுநருக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேரவேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆளுநரை திரும்ப பெற மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும். நான் 3 முதல் 5 நாள்கள் காத்திருப்பேன். இந்த நாள்களில் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்ப்பேன்.

கொஷாரிக்கு எதிராக மாநிலம் தழுவிய அமைதிப்போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆளுநர் பதவி முதியோர் இல்லம் போலாகிவிட்டது. மத்தியில் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வரும் போது தாங்கள் விரும்பும் நபர்களை ஆளுநராக நியமிக்கின்றன. அந்த ஆளுநர்கள் நடுநிலையோடு செயல்படவேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், பாஜக எம்.பி. உதயன்ராஜே போஸ்லே ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மொகலாய மன்னர் அவுரங்கசீப்பிடம் சத்ரபதி சிவாஜி மன்னிப்பு கேட்டார் என்று பாஜக பிரமுகர் சுதன்சு திரிவேதி சொன்னதற்கும் போஸ்லே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநகர் கொஷாரியா அனைத்து எல்லைகளையும் தாண்டி செயல்படுவதாக சரத் பவாரும் குற்றம் சாட்டி இருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/withdraw-maharashtra-governor-uddhav-thackerays-request-to-central-govt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக