ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு நிரந்தரமாகத் தடைவிதிக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட தடை சட்ட மசோதா இன்றுடன் (நவம்பர் 27-ம் தேதி) காலாவதியாகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ``அவசர சட்டத்துக்கான ஒப்புதலை அன்றே அளித்த ஆளுநர், நிரந்தர சட்டமாக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநருக்கு சந்தேகம் இருந்தால், அதை தெளிவுபடுத்துவோம். அவரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம்" எனக் கூறினார். இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தண்டனை விதிப்பது குறித்த அதிகாரம், அளவீடு குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுத, தமிழ்நாடு அரசின் சட்டத்துறையும் உரிய விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மசோதாக்களை கிடப்பில்போடும் ஆளுநர்:
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் காலதாமதமாக முடிவெடுக்கிறார் அல்லது முடிவெடுக்காமலே கிடப்பில் போடுகிறார் என தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, ``கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசர சட்டத்தை, நிரந்தர சட்டமாக்கும் மசோதா கடந்த அக்டோபர் 19-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 28-ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால், ஒரு மாதத்தைக் கடந்தும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். நவம்பர் 27-ம் தேதியுடன் சட்ட மசோதா காலாவதியாகிறது. இந்த நிலையில் இதேபோல, தமிழ்நாடு அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்" என குற்றசாட்டுகின்றன.
குடியரசுத் தலைவரிடம் மனுகொடுத்த தி.மு.க-கூட்டணிக் கட்சிகள்:
ஏற்கெனவே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் தொடர் சர்ச்சைப் பேச்சுகள், தொடர்ந்து மாநில அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதக்களுக்கு ஒப்புதல் வழங்காதது உள்ளிட்டக் காரணங்களால் கொதித்தெழுந்த தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் ஒன்றுசேர்ந்து, கடந்த நவம்பர் 9-ம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, ``தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும்" என மனு கொடுத்தன.
மனுவில் குறிப்பிடப்பட்ட `சட்டமசோதா நிலுவை':
தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து குடியரசுத் தலைவரிடம் வழங்கிய மனுவில், ஆளுநர் ரவி மீது முன்வைத்த மிக முக்கியமான குற்றச்சாட்டு, `மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களில் கையெழுத்திடாமல் காலம்தாழ்த்தி வருகிறார்' என்பதுதான். குறிப்பாக அந்த மனுவில், ``மாநில சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் தேவையின்றிக் காலம் தாழ்த்துகிறார். இது மாநில நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை அலுவல்களில் தலையிடுவதாகும். தமிழக ஆளுநர் தமது முதன்மையான பணியைச் செய்வதில்லை.
கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான திருத்தச் சட்டம், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு 10 மாதங்களாக, பரிசீலிக்கப்படாமல் உள்ளது. நீட் விலக்கு சட்ட மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ல் அவருக்கு அனுப்பப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் பல மாதங்கள் காலம் தாழ்த்தினார். இது குறித்து அப்போதைய குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னரும் ஆளுநர், அந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார். இது ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறிய செயலாகும். இதனால் சிறப்புக் கூட்டத்தை கூட்டும் சூழல் உருவாகி, மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதுபோன்ற செயல்பாடுகள் ஆளுநருக்கு அழகல்ல!" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/the-dmk-government-is-waiting-for-governor-ravis-response-regarding-various-bills
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக