Ad

திங்கள், 14 நவம்பர், 2022

நெல்லை: கொலையானவர் உடலை வாங்க மறுத்து 5-வது நாளாக தொடரும் போராட்டம்... பதற்றத்தில் மக்கள்!

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் கடந்த 10-ம் தேதி மர்ம நபர்களால் வழிமறித்து கொலை செய்யப்பட்டார். அங்குள்ள சுடலைமாடசாமி கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக மற்றொரு சமூகத்தினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயில் பூசாரி சிதம்பரம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது எனக் கூறப்படுகிறது. அதனால் மாயாண்டி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

பூசாரி சிதம்பரம் கொலை வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் ஆர்வம் காட்டியதன் காரணமாக மாயாண்டி கொல்லப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால் கோயில் விவகாரம் தொடர்பாக தொடந்து நடந்துவரும் கொலைச் சம்பவங்களைத் தடுக்க போலீஸார் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கை.

கொலையான பூசாரி சிதம்பரம் மற்றும் மாயாண்டி ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் நிவாரண உதவிகளும் அரசு சார்பில் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக கடந்த 5 நாள்களாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அத்துடன், மாயாண்டி உடலை வாங்கவும் உறவினர்கள் மறுத்து வருகிறார்கள்.

ஆட்சியர் அலுவலக வாயிலில் மாயாண்டி உறவினர்கள்

இது தொடர்பாக ஆர்.டி.ஓ சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாயாண்டி குடும்பத்தினரும் அவர் சார்ந்த சமூகத்தினரும் முற்றுகையிட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உயிரிழந்த மாயாண்டியின் உறவினர்கள் மற்றும் சமுதாய அமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு குடும்பத்திலும் தலா ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்க ஒப்புதல் அளித்தார். ஆனால், சிதம்பரம் மற்றும் மாயாண்டி குடும்பத்தினர் நிரந்தர வேலை கேட்டதால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை,.

போராட்டத்தில் ஈடுபட்ட சமுதாய அமைப்பினர்

இந்த நிலையில், இன்றும் மாவட்ட ஆட்சியத் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக சமுதாய அமைப்பினர் அறிவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. அதனால் காலையிலேயே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், இளைஞர்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் அவர்கள் அரசு மற்றும் தனியார் வேலைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் போராட்டம் நடத்தவோ அதில் பங்கேற்கவோ வேண்டாம் என மாநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாயாண்டி கொலையில் தொடர்புடைய 13 பேர் இதுவரை கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/general-news/agitated-people-blocked-public-transport-in-nellai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக