சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. ஆரம்ப முதலே காரசாரமான விவாதங்களுடன் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் மாநகராட்சியின் பல பகுதிகளிலும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது, டெண்டர் தொடர்பான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது எழுந்து பேசிய மாநகராட்சியின் 5-வது வார்டு திமுக உறுப்பினர் இந்திராதேவி, ``வீட்டுத்தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்கு எனது வார்டைச் சேர்ந்தப்பகுதி மக்கள் 11 பேர் மாநகராட்சியில் மனு அளித்துள்ளார்கள். ஆனால் அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் எனது வார்டு மக்கள் கேட்டப்போது, `ஒரு மனுவை நிறைவேற்றுவதற்கு 10ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
மக்கள் சேவை செய்வதற்கு எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். ஒருவேளை லஞ்சம் கொடுத்தால் தான் மாநகராட்சிப் பணி நடக்கும் என்றால், அந்த லஞ்சப் பணம் மொத்தம் 1 லட்சத்து 10ஆயிரம் நானே கொடுத்து விடுகிறேன்” என்று கூறினார். அதோடு மட்டுமில்லாமல், தனது பையிலிருந்து 500 ரூபாய்கட்டாக ஒருலட்சத்து 10 ஆயிரம் பணத்தை எடுத்து மேசை மீது வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, அதை கையிலெடுத்து வந்த மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி, ``இந்த பணத்தை யாரிடம் நான் கொடுக்க என்று சொன்னாலும் கொடுத்துவிடுகிறேன்” என மேயர் சங்கீதா அருகில் நின்ற வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி என்பவரை பார்த்து கேள்வியை முன்வைத்ததால் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கை மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி வாதத்தை கைவிட்டு அமர்ந்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/sivakasi-corporation-councilor-raising-question-against-the-officials
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக