Doctor Vikatan: எனக்குத் தெரிந்து என் தோழிகள் பலரும் அதிக ப்ளீடிங்கால் அவதிப்படுகிறார்கள். என் பிரச்னையோ வேறு. எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல்நாள் ப்ளீடிங் ஆவதோடு சரி... பிறகு லேசான திட்டுத்திட்டாக ப்ளீடிங் ஆகுமே தவிர, முழு நாப்கினும் நனையும் அளவுக்கு ஆவதில்லை. என் வயது 38. குறைவான ப்ளீடிங் ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
பீரியட்ஸ் நாள்களில் ரத்தப்போக்கு குறைவாக இருப்பதென்பது நீங்கள் பயப்படுகிற அளவுக்கு பெரிய விஷயமே இல்லை. பீரியட்ஸின்போதான ரத்தப்போக்கு குறைய பல காரணங்கள் இருக்கலாம்.
உதாரணத்துக்கு திடீரென அதிக அளவில் எடையைக் குறைத்திருந்தாலோ, ஸ்ட்ரெஸ் காரணமாகவோ கூட பீரியட்ஸின் போதான ப்ளீடிங் குறையலாம். திடீரென ஜிம்மில் சேர்ந்து வொர்க் அவுட் செய்து, எடையைக் குறைப்பவர்களுக்கு ரத்தப்போக்கின் அளவு குறையலாம்.
ஆனால் சிலருக்கு எப்போதுமே ப்ளீடிங் அளவு குறைவாகவே இருக்கும். அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால் திடீரென ப்ளீடிங் அளவு குறைவதற்கு மேற்குறிப்பிட்டவை தவிர, ஹார்மோன் காரணங்கள், தைராய்டு, பிசிஓடி போன்றவையும் காரணமாகலாம்.
வழக்கமாக வயது ஆக ஆக ப்ளீடிங் அளவு குறைந்துகொண்டே வரும். உதாரணத்துக்கு 20-30 வயதில் ஒரு பெண்ணுக்கு 3 முதல் 5 நாள்கள் வரை ப்ளீடிங் இருக்கும். அதுவே 30-40 வயதில் அது 3 நாள்களாகக் குறையலாம். அதன் தொடர்ச்சியாக நாப்கின் பயன்பாட்டின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வரும்.
அதேபோல 'பெரிமெனோபாஸ்' காலகட்டத்தில், அதாவது பீரியட்ஸ் நின்றுபோவதற்கு முந்தைய காலத்திலும் ப்ளீடிங்கின் அளவு குறைந்துகொண்டே வரும். திடீரென்றுதான் இப்படி இருக்கிறது, ஸ்பாட்டிங் போல திட்டுத்திட்டாகத்தான் ப்ளீடிங் வருகிறது என்றால் ஒருவேளை நீங்கள் கர்ப்பம் தரித்திருக்கலாம். அதையும் உறுதிசெய்து கொள்ளவும்.
எனவே நீங்கள் உங்கள் பீரியட்ஸ் சுழற்சியைத் தொடர்ந்து கண்காணியுங்கள். கடந்த மாதங்களில் உங்களுக்கு இருந்த அளவு இல்லாமல் அடுத்தடுத்த மாதங்களில் லேசான ரத்தப்போக்குதான் இருக்கிறது என்றால் மேற்குறிப்பிட்டவற்றில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதை மருத்துவ ஆலோசனையுடன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவோருக்கும் லேசான ரத்தப்போக்கு இருக்கலாம். அதேபோல தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் ப்ளீடிங் குறைவாக இருக்கலாம்.
திடீரென பீரியட்ஸ் வரவில்லை அல்லது திடீரென அது குறைந்துவிட்டது என்றால்தான் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். மற்றபடி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பாப் ஸ்மியர் டெஸ்ட், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், ஹார்மோன் பரிசோதனைகளைச் செய்து பார்க்கலாம். இவை எல்லாமே நார்மல் என்கிற பட்சத்தில் குறைவான ப்ளீடிங் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-bleeding-only-one-day-in-periodsis-it-a-sign-of-a-problem
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக