Ad

செவ்வாய், 29 நவம்பர், 2022

ஒன் பை டூ

சு.ரவி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

``உண்மையை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வில் இருந்த சமயத்தில், இன்றைய முதல்வரே அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். இப்போது அவரே தி.மு.க-வுக்கு வந்ததும் புத்தர் ஆகிவிட்டாரா என்ன... செந்தில் பாலாஜி வெளிப்படையாகவும், நேரடியாகவும் லஞ்ச லாவண்யத்திலும் ஊழலிலும் ஈடுபட்டுவருகிறார். அரசு டாஸ்மாக் காலை 12 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கிவருகிறது என்றால், செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் இரவு 10 மணி முதல் காலை 12 மணி வரை இயங்கி தனியாக கல்லாகட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்த குற்றச்சாட்டுகள் வெளியில் வந்தும் செந்தில் பாலாஜியின் மீது எந்த விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு. வரம்பை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவர், விரைவில் சட்டத்தின் பிடியில் சிக்குவார் என்பதைத்தான் சி.வி.சண்முகம் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். மின் கட்டண உயர்வு, மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து மானியத்தை வெட்டும் முயற்சி போன்றவற்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கின்றன இந்த அரசும் மின்வாரியமும். இந்தத் திறனற்ற தி.மு.க ஆட்சியைத் தூக்கியெறிய மக்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.’’

சு.ரவி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா

ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

``பொறாமையில் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அ.தி.மு.க-விலிருந்து வந்த ஒருவர் தி.மு.க அமைச்சரவையில் சிறப்பாகப் பணியாற்றிக்கொண்டிருப்பதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சி.வி.சண்முகம் எப்படிப் பேசுவார், உளறுவார் என்பதெல்லாம் மக்களுக்கே நன்றாகத் தெரியும் என்பதால் அவர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. தொகுதிக்காக எந்த நேரத்தில், என்ன கோரிக்கை வைத்தாலும் அதை உடனே நிறைவேற்றிக் கொடுப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த ஆட்சியில் செய்த தவறுகளால்தான், இன்று மத்திய அரசுக்கு பயந்து பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். அந்த அ.தி.மு.க-வினர் ஊழலைப் பற்றிப் பேசுவதைப்போல ஒரு காமெடி உலகத்திலேயே இல்லை. முதல்வர் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கிறார். தி.மு.க ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக, செல்லும் இடமெல்லாம் மக்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. எனவே, தி.மு.க-வைக் களங்கப்படுத்த எதிர்க்கட்சியினர் என்ன முயற்சி எடுத்தாலும் அது தோல்வியிலேயே முடிகிறது.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-cv-shanmugam-statement-about-senthil-balaji

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக