திருச்சி நீதிமன்றம் அருகே தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல தீயணைப்பு நிலையத்தில் வேலைகள் நடைபெற்று வந்தபோது, தீயணைப்பு வீரர்களான பிரசாந்த் (27), சரவணன் (44) ஆகிய இருவரும் பெரிய மெயின் சிலிண்டரில் இருந்து, 3 கிலோ சிலிண்டரில் ஆக்ஸிஜனை நிரப்பிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது 3 கிலோ ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்துச் சிதறியிருக்கிறது. இதில் தீயணைப்பு வீரர் பிரசாந்த் படுகாயமடைய, சரவணக்குமாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
அதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீதிமன்ற போலீஸார் காயமடைந்த பிரசாத் மற்றும் சரவணக்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரசாத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், பெரிய சிலிண்டரில் இருந்து 3 கிலோ சிலிண்டரில் கொள்ளளவை மீறி ஆக்ஸிஜனை நிரப்பியதே சிலிண்டர் வெடித்ததற்கு காரணம் என தெரியவந்திருக்கிறது. இந்த ஆக்ஸிஜன் சிலிண்டரானது, தீ விபத்து மீட்புப் பணிகளின் போது தீயணைப்பு வீரர்கள் சுவாசிப்பதற்காக பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தீயணைப்பு நிலையத்திலேயே சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/accident/cylinder-burst-at-fire-station-in-trichy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக