Ad

புதன், 30 நவம்பர், 2022

ஈரோடு: விசைத்தறி தொழிலாளி கொலை வழக்கு... 4 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை!

ஈரோடு, பெரியசேமூர், கல்லாங்கரடு, ஸ்ரீராம் நகர் 8 -வது வீதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் ( 25). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு நீலாவதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
செல்வகுமாரின் சித்தப்பா மகனும், செல்வகுமாரின் அண்ணனுமான மணிகண்டன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரின் மனைவி லட்சுமிக்கும் (27), பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததாகத் தெரிகிறது. இதனை  கண்டித்ததால் லட்சுமிக்கும், மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

கொலை

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி லட்சுமி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். லட்சுமியை அவரின் கணவர் மணிகண்டனும், செல்வகுமாரும் பல இடங்களில் தேடிய நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அடேரி கிராமத்தில் லட்சுமி, பக்கத்து வீட்டுக்காரருடன் வசித்து வந்தது தெரிய வந்தது.  
இதையடுத்து மணிகண்டன், செல்வகுமார், நீலாவதி, செல்வகுமாரின் அக்காள் ஆனந்தி ஆகியோர் ஆத்தூருக்குச் சென்று லட்சுமியை ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது குடும்ப மானத்தை வாங்குகிறாயே என்று கூறி கோபத்தில் லட்சுமியை, செல்வகுமார் தாக்கியதாகத் தெரிகிறது. பின்னர், லட்சுமிக்கு அறிவுரை கூறி கணவருடன் மீண்டும் சேர்த்து வைத்தனர்.

தன்னை தாக்கியதுடன், தனது ஆண் நண்பருடன் இருந்து பிரித்து வைத்ததால் செல்வகுமார் மீது லட்சுமி கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதுகுறித்து லட்சுமி, தன்னுடைய மூத்த சகோதரியான பெரியசேமூர், கல்லாங்கரடு பகுதியைச் சோ்ந்த ஜோதிமணியிடம் (35) கூறியுள்ளார். மேலும், மணிகண்டனுடன் வாழ பிடிக்கவில்லை என்றும், தன்னை செல்வகுமார் தாக்கியதை அவமானமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஜோதிமணி, செல்வகுமாரின் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்து மிரட்டினார். இதனால் செல்வகுமாருக்கும், ஜோதிமணிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.

ஆயுள் தண்டனை பெற்றவர்கள்

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி மதியம் செல்வகுமார் தனது மகனையும், அக்காள் மகனையும் அழைத்து கொண்டு ஜோதிமணியின் வீடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஜோதிமணி, அவரின் தங்கை பரமேஸ்வரி (32), தாய் பாப்பம்மாள் (70), தந்தை கண்ணையன் (74) ஆகியோர் செல்வகுமாரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இந்த தகராறு கைகலப்பாக மாறியது. 

சத்தம் கேட்டு மணிகண்டனின் மனைவி லட்சுமி, அருகில் உள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மேஸ்திரி குமரேசன் (40), ஜோதிமணியின் தம்பி மூர்த்தி (30), மூர்த்தியின் மாம அண்ணாதுரை (40) ஆகியோரும் அங்கு ஓடி வந்து செல்வகுமாரை தாக்கினர்.

ஆயுள் தண்டனை பெற்ற 3 ஆண்கள்

ஜோதிமணி உள்பட 8 பேரும் சேர்ந்து கத்திரிக்கோல், இரும்பு குழாய், கட்டை, கம்பு, செங்கல், கருங்கல் ஆகியவற்றை கொண்டு செல்வகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வகுமார் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, பாப்பம்மாள், கண்ணையன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து ஈரோடு முதலாம் எண் குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

தீர்ப்பு

இந்த கொலை வழக்கு விசாரணை நடைபெற்ற போது, குற்றம்சாட்டப்பட்ட கண்ணையன் இறந்துவிட்டார்.
இந்தநிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி புதன்கிழமை தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, பாப்பம்மாள் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்டத் தவறினால் கூடுதல் நாள்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.



source https://www.vikatan.com/news/crime/erode-murder-case7-people-including-4-women-were-sentenced-to-life-imprisonment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக