வணக்கம். வாழிய நலம்!இயங்கிக் கொண்டேயிருக்கும் மனதை ஈசனின் திருவடிகள் நோக்கித் திருப்புங்கள். `மனமெனும் மகாசக்தியை கட்டுப்படுத்தவில்லை என்றால், தாங்கொணா துயரத்தில் சிக்கிப் பிறவிகள் நீண்டுகொண்டே போகும்' என்பதே சைவம் கூறும் நீதி.
மனதோடு பேசுங்கள். அதுவே மனதை ஆளும் எளிய வழி. மனம் உங்கள் வசமானால் சிவமும் வசமாகும். இதையே திருமூல நாயனார்,
`சிவ பெருமான் என்றுநான் அழைத்து ஏத்தத்
தவ பெருமான் என்றுதான் வந்து நின்றான்
அவ பெருமான் என்னை ஆள் உடைநாதன்
பவ பெருமானைப் பணிந்து நின்றேனே!' - என்கிறார்.
`திருமுறைகளைப் படிக்கவோ, கேட்கவோ, அதைப் புரிந்து கொள்ளவோ, தினமும் பாராயணம் செய்யவோ எனக்கு நேரமில்லை... என்ன செய்யலாம்' என்று ஒரு கேள்வி.
மற்ற எது எதற்கோ நேரம் இருக்கும்போது, இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா? மனம் இருந்தால் எதையும் செய்ய முடியும். ஆக, உங்களுக்கு விருப்பம் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது! மூச்சுவிட என்று தனியாக நேரம் ஒதுக்கு கிறோமா என்ன? மூச்சைப் போல எந்நேரமும் ஐந்தெழுத்து ஓதி வாருங்கள். நிச்சயம் நிறைய நேரம் கிடைத்து மனம் அமைதியாகித் தினமும் ஒவ்வொரு பாடலாகப் படிக்க ஆரம்பிப்பீர்கள். படிக்கப் படிக்கப் பொருளையும் உணர்ந்து அதில் லயித்து, பதிகங்களை வாய்விட்டுப் பாடவும் ஆரம்பிப்பீர்கள். இது சத்தியம். இப்படித்தான் பலரும் இன்று முற்றோதல் செய்யும் அளவுக்கு தேறியுள்ளார்கள்.
நிற்க, திருமுறைகள் படிப்பது மட்டுமே அடியார்களின் அடையாளம் கிடையாது. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் சிவனருள் பெற முடியாதா என்ன! ஒரு கதை.
எந்நேரமும் செல்வம் தேடி அலைந்துகொண்டிருக்கும் செல்வந்தன் ஒருவனுக்குத் திடீரென ஒரு ஞானோதயம். ஒரு குருவிடம் வந்தான். ``சாமி எனக்குத் திருமுறைகளைக் கற்க ஆசை. ஆனால் பாருங்கள் அதற்கான நேரம் என்னிடம் இருப்பதில்லை. எனவே, நான் கரம் தூக்கி வணங்குகிறேன்... கரங்கள் வலித்து நான் அவற்றைக் கீழே இறக்குவதற்குள், எனக்கு எளிமையாக திருமுறைகளை விளக்கிவிடுங்கள்!'' என்றான்.
குருவுக்கு வந்ததே கோபம். ``மண்டூகமே, 18,303 பாடல்கள் கொண்ட திருமுறைகளைப் படிக்கவும் பொருள் உணர்ந்து கொள்ளவுமே ஓர் ஆயுள் போதாதே. நான் 60 ஆண்டுகளாகப் படித்தும் முழுவதும் உணர முடியாத அருமறைகளை உனக்குக் கை வலிப்பதற்குள் நான் சொல்லித் தர வேண்டுமா, ஓடிப்போ'' என்று விரட்டிவிட்டார்.
செல்வந்தன் சோகத்தோடு திரும்பினான். உண்மையில் அவனுக்குத் திருமுறைகளைப் படிக்க ஆசைதான். ஆனால் அவனுக்குப் பொருள் விளக்கிச் சொல்ல குருவும், அதற்கான நேரமும் இல்லை என்பதே உண்மை. என்ன செய்ய ஆசையெனும் சூழலில் சிக்கிக் கொண்டால் அவ்வளவு சீக்கிரம் மீளவா முடியும்.
மீண்டும் வேறொரு குருவிடம் சென்றான். அதே விஷயத்தைச் சொல்லி, திருமுறைகளை விளக்கக் கேட்டான். அந்தக் குரு சிரித்தவாறே, ``அத்தனை நேரம் எல்லாம் தேவையில்லை. நீ கரம் தூக்குவதற்குள் உனக்கு சைவத்தின் அத்தனை விஷயங் களையும் விளக்கிவிட முடியும்'' என்றார். அவன் ஆச்சர்யத் தோடு கரங்களைக் குவிக்க முற்பட, ``அன்பே சிவம்'' என்றார் குரு. அவன் வியந்தான்; உண்மையை உணர்ந்து மகிழ்ந்தான்.
ஆம்! சைவத்தின் அடிப்படையே சகலரையும் அன்பு செய்வதுதான். அன்போடு வாழுங்கள். அதில் ஆண்டவனை உணரலாம் என்று விரித்து உரைக்கவே திருமுறைகளும் சைவ சித்தாந்தங்களும் தோன்றின. வாழ்வின் இறுதியில் செல்வம், அதிகாரம், கல்வி, பதவி, உறவு என அனைத்தும் விலகி விட்டா லும், நீங்கள் உயிர்கள்மீது வைத்த அன்பு, உங்களை எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள உதவும். `அன்பினில் விளைந்த ஆரமுதே!' என்றுதானே மாணிக்கவாசகர் இறைவனை அழைக்கிறார்.
.இறைவனிடமும் சகல உயிர்களிடமும் அன்பு கொள்ளுங்கள். அன்பைத் தடுக்கும் ஆணவத்தை ஒழியுங்கள். அன்பாலே நிறைந்து இருங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும்!கார்த்திகை விரதம்!
இந்தப் பூமியில் சகல ஜீவராசிகளும் நிலைபெற்று இருக்க புவி ஈர்ப்பு சக்தி உதவுகிறது என்றால், எல்லா உயிர்களும் அமைதி யோடு வாழ அன்பு எனும் ஈர்ப்பு சக்தியே உதவுகிறது. அதுவும் ஈசனோடு நீங்கள் கொள்ளும் அன்பு முக்திக்கும் மேலான பேரின்பத்தை அளிக்கும். அன்பு கொண்ட கண்ணப்பனை நோக்கி ஈசன் ஓடோடி வரவில்லையா?! பிரம்மனும் மாலவனும் காண முடியாத திருவடிகள், இளையான்குடி மாறநாயனார் வீட்டை நோக்கி வரவில்லையா? இதெல்லாம் எதற்காக, அவர்களின் அன்புக்காகத்தானே!
நீங்கள் உண்ட உணவை வேறொருவர் செரிமானம் செய்ய முடியுமா? அதைப் போன்றதே வினைப்பயன். நீங்கள் விதைத்ததை நீங்களே அறுக்க வேண்டும். வினைப் பயன் நன்மையாக அமைந்திட, அன்பாகவே மாறுங்கள். இறைவனும் வசப்படுவான்.
`சித்தமும் செல்லா சேட்சியன் காண்க; பத்தி வலையில் படுவோன் காண்க!' என்கிறது திருவாசகம். `சித்தத்தாலும் எட்ட முடியாத ஈசன், உங்களின் பக்தி என்ற அன்பு வலையில் தானே வந்து சிக்கிக்கொள்வான்' என்ற மாணிக்கவாசகரின் வாக்கு பொய்க்குமா என்ன!
`காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய
ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய
ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு
மூல பண்டாரம் வழங்குகின்றான், வந்து முந்துமினே!'
- என்கிறார் மாணிக்கவாசகர்.
`காலம் உள்ளபோதே இறைவனிடம் அன்பு கொள்ளுங் கள். நாம் எல்லோரும் சிறப்பாக வாழும் பொருட்டு தான் நஞ்சை உண்டு அருளிய தியாகேசனிடம் அன்பு கொள்ளுங்கள். அதற்கு ஈடாக இறை இன்பம் எனும் மூலப்பண்டாரத்தை நமக்கு வழங்கிவிடுவான். அன்பில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது. இதோ உங்கள் அன்புக்கு ஈடாக மூல பண்டாரம் வழங்குகிறான் வந்து முந்துமினே' என்று எல்லோரையும் அழைக்கிறார் மணிவாசகர்.
இறைவன் மீது மட்டுமல்ல, எல்லா உயிர்களின் மீதும் அன்பு வையுங்கள் என்று உரக்கச் சொல்வதே சைவத்தின் நோக்கம். `நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே' இல்லையா! பக்கத் தில் பசித்தவன் இருக்க நீ ஆண்டவனுக்குப் படைப் பது நியாயமா?
அன்றும், இன்றும், என்றும் இந்த உலகத்தை அழகாகவும் அமைதியாகவும் வைத்திருப்பது அன்பு ஒன்றே. தேன் கூட்டில் எல்லா பக்கமும் இனிப்பு இருப்பதைப் போல திருமுறைகளின் எல்லா பாடல்களிலும் அன்பே நிறைந்துள்ளது. தனியாகப் பிறந்தோம்; தனியாகப் போகப் போகிறோம்; இடையில் இருக்கும் வாழ்வில் அன்பானத் திருக்கூட்டத்தில் இணைந்து இன்பமாக வாழுங்கள்.
அன்பைத் தடுக்கும் ஆணவத்தை ஒழியுங்கள். அன்பாலே நிறைந்து இருங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும். பிறகென்ன தானாகவே திருமுறைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துவிடும். சிவாயநம!
- பேசுவோம்..
கார்த்திகை விரதம்
திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதற்கான பலன்கள் குறித்து தேவி புராணம் விவரிக்கிறது. மகிஷாசுரனுடன் போர் புரிந்தபோது, தவறுதலாக சிவ லிங்கம் ஒன்றை உடைத்து விட்டாள் அம்பிகை. இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, கார்த்திகை தீபம் ஏற்றி, விரதம் இருந்து வழிபட்டு பலன் அடைந்தாளாம்.
விரதம் இருப்பவர்கள் முதல் நாள் - பரணி அன்று இரவு தொடங்கி மறுநாள் முழுக்க உண்ணாநோன்பு இருந்து இறை வழிபாடு செய்யவேண்டும். மாலையில் மகாதீபம் ஏற்றிய பிறகு வீட்டிலும் விளக்கேற்றி வழிபட்டு, தானங்கள் செய்வது விசேஷம். கார்த்திகை விரதத்தைப் பன்னிரண்டு வருடங்கள் தவறாமல் கடைப்பிடித்த நாரதர், சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றாராம்.
அதேபோல், கார்த்திகை மாதம் சுத்த பஞ்சமி திருநாள்... மகா விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் சேர்ந்த புண்ணிய நாளாகும். இந்தத் திருநாளில் காவிரியிலும் புனித தீர்த்தங்களிலும் நீராடி, திருமாலையும் திருமகளையும் வழிபட்டால் அஷ்ட ஐஸ்வரியங்களும் சேரும்.
-வி.சீனிவாசன், திருச்சி-13
source https://www.vikatan.com/spiritual/gods/sivamayam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக