Ad

ஞாயிறு, 20 நவம்பர், 2022

மாணவர்களுக்கு கழிவறை முன்பு செல்ஃபி போட்டி: எதிர்ப்பால் உத்தரவை திரும்பப்பெற்ற நாசிக் கல்வி அதிகாரி

உலக கழிவறை தினம் நவ.19ல் கடைபிடிக்கப்பட்டது. உலகில் ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகளில் இன்னும் போதிய கழிவறை வசதிகள் இல்லாத சூழல் உள்ளது. கிராமங்களில் கூட போதிய கழிவறை வசதி இல்லாமல் இருக்கிறது.

அந்த வகையில் மும்பையில், குடிசைப்பகுதியில் போதிய அளவு கழிப்பறை வசதி இல்லை. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் பொதுக்கழிவறைக்கு பொதுமக்கள் வாளியில் தண்ணீரை எடுத்துச்செல்வதை காணமுடிந்தது. இப்போது மும்பையில் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்திருக்கிறது. இந்நிலையில், உலக கழிப்பறை தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்திம் கல்வி அதிகாரி, மாணவர்களுக்கு வித்தியாசமான ஒரு போட்டியை அறிவித்தார்.

அதாவது, மாணவர்கள் அனைவரும் கழிவறை முன்பு நின்று செல்ஃபி எடுத்து அனுப்பவேண்டும் என்றும், `நான் விரும்பும் கனவு கழிவறை', `எனது பள்ளி, எனது பாதுகாப்பான கழிவறை' என்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் வரைபடப்போட்டியும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர்களுக்கும் இதே கருத்தை வழியுறுத்தி ஸ்லோகன் சொற்களை உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. அனைத்துப் போட்டிகளும் ஆன்லைனில் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தனர்.

சுத்தமான கழிவறை பிரசாரத்தை மையப்படுத்தி உலக கழிவறை தினத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாகவே 4 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்படுவதாக இருந்தன.

ஆனால், கல்வி அதிகாரி அறிவித்த இந்த போட்டி மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. மாணவர்களை கழிவறை முன்பு நின்று செல்ஃபி எடுக்கச் சொல்லவேண்டியதன் அவசியம் என்ன என்று, நாசிக் பள்ளி ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார். பள்ளிகளில் அரசு சுத்தமான கழிவறை வசதியை செய்து கொடுக்கவேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் 65,639 அரசு பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் 65,581 கழிவறைகள் மட்டுமே இருக்கின்றன. இதிலும் 62 ஆயிரம் கழிவறைகள் மட்டும்தான் செயல்பாட்டில் உள்ளன. இதற்கிடையே கழிவறை போட்டிக்கு எதிர்ப்புக் கிளம்பியதால், மாவட்ட நிர்வாகம் அப்போட்டியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு இருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/controversy-over-selfie-contest-before-toilet-competition-for-students

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக