Ad

திங்கள், 28 நவம்பர், 2022

How To: வீட்டுத்தோட்டச் செடிகளை பராமரிப்பது எப்படி? I How To Take Care Of Home Garden?

வீட்டுத்தோட்ட விவசாயத்தில் நீர் மேலாண்மை, வேர் அழுகல் தவிர்ப்பது, செடிகளுக்கு ரீசார்ஜ் செய்வது எனப் பராமரிப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்கிறார் நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோராஜ்...

நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோராஜ்

* பிளாஸ்டிக் பைப் மூலமாக நீர் விடுவது சரியான முறையல்ல. அதை மாற்ற வேண்டும்.

* பூவாளியின் மூலம் நீர் விடும்போது தொட்டி நிறைய நீர் விடுவோம், அதையும் தவிர்க்க வேண்டும்.

* ஒவ்வொரு செடிக்கும், தேவையான நீர் அளவு என்று உள்ளது. அதைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப நீர் விடுவது நல்லது. ஒரு செடி பைக்கு 100 மில்லி நீர் இருந்தால் போதுமானது. பெரிய செடி என்றால் 200 மில்லி நீர் போதும்.

* பைகளில் ஈரப்பதம் இருக்கும்போது நீர் விடக்கூடாது; செடிகளின் வேர் நனையும் வரை நீர் விட்டால் போதுமானது.

* வீட்டுத் தோட்டத்தில் இயற்கை இடுபொருள்களையே இட வேண்டும்.

* தோட்டத்தில் உள்ள பயிர் வளர்கிற பைகளில் மண், தென்னைநார் கழிவுகள் சேர்த்திருப்போம். மழை பெய்யும் நேரங்களில் இந்தத் தொட்டி முழுவதும் நீர் நிரம்பி, கீழ்ப்பகுதி வழியாக அது வெளியேறும்போது, பையில் இருக்கும் சத்துகளும் சேர்த்து வெளியேறும். குறிப்பாக, சாம்பல் சத்து வெளியேறும்போது செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதைத் தவிர்க்க, செடிகளை செறிவூட்ட (recharge) வேண்டும்.

எப்படி?

ஜனவரி 15-க்குப் பிறகு, மழை குறையும் நேரத்தில், 10 லிட்டர் நீரில் 100 மில்லி மீன் அமிலம் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதை நூறு செடிகளுக்குப் பயன்படுத்தலாம். இதில் 100 மில்லி எடுத்து ஒவ்வொரு செடியிலும் வேர்ப் பகுதியில் படுமாறு விடவும்.

வீட்டுத் தோட்டம்

* அதேபோல 100 கிராம் வேகவைக்காத நிலக்கடலை பருப்பை 2 லிட்டர் நீரில் 2 மணி நேரம் ஊறவைத்து பின் கடலையை நசுக்கி ஊறின நீரில் கலக்கவும். இதனுடன் 1 லிட்டர் அரிசி வடிகட்டின நீர் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதில் 250 மில்லி எடுத்து 1 லிட்டர் நீரில் சேர்க்கவும். அதில் 100 மில்லி எடுத்து ஒவ்வொரு செடிக்கும் தெளிக்கவும்.

* அடுப்புச் சாம்பலை இரண்டு இலந்தைப்பழ அளவுக்குச் செடிகள் மீது தூவிவிடவும். தோராயமாக 30 கிராம் அளவுக்கு. சாம்பல் கிடைக்காதவர்கள் பொட்டாஷ் பாக்டீரியாவை வாங்கி, 100 கிராம் எடுத்து 10 லிட்டர் நீரில் கரைத்து 100 மில்லி அளவுக்கு ஒவ்வொரு செடிக்கும் தெளிக்கலாம்.

* இவற்றை எல்லாம் மழை நின்ற பின் செய்ய வேண்டும். இதையும் மீறி வேர் அழுகல் நோய் வந்துவிட்டால், 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு தூளை, வேர்ப்பகுதியில் தூவிவிடவும்.

* சில இடங்களில் வேர்ப்புழு தாக்குதல் இருக்கும். இதற்கு 10 லிட்டர் நீரில் 50 மில்லி பேச்சிலோ மைசிஸ் திரவத்தைச் சேர்த்துக் கலந்து தெளிக்கலாம்.

* விதைத் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். பழைய விதைகளை வாங்காமல், புதிய விதைகளைப் பயன்படுத்த வேண்டும். 6 மாதத்துக்கு மேலான விதைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். விதைக்கும் முன்பு, விதை நேர்த்தி செய்வது மிக முக்கியம். சூடோமோனாஸ், அசோஸ் பைரில்லம் போன்றவற்றை சேர்த்து விதைத்தால், வேர் சம்பந்தமான நோய்களில் இருந்து செடிகள் தாக்குப்பிடிக்கும்.

* ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் மஞ்சள்தூள் சேர்த்து, ஒன்றரை மணி நேரம் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் அதில் 10 பல் பூண்டை நசுக்கி சேர்த்து, நன்றாக ஆறவைத்து, அதில் ஒரு லிட்டர் நீரை சேர்த்துக் கரைத்து, 100 மில்லி அளவுக்கு செடிக்கு விடவும். வேர் அழுகல் மாறும்.

* செடிகளின் வளர்ச்சிக்கு தேமோர் கரைசலைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு, தேமோர் கரைசலில் 5 கிராம் பால் பெருங்கடம் கலந்து தெளிக்க, பூக்களின் வளர்ச்சி, செடியின் வளர்ச்சி அதிகமாகும்.

மாடித்தோட்டம்

* இவை எதுவுமே இல்லாதவர்கள், 50 மில்லி பசும்பாலில் 1 லிட்டர் நீர் கலந்து செடிகளுக்குத் தெளிக்கலாம்.

* பெரியா பேசியானா, வெர்டிசீனிய லகனியா ஆகியவற்றை 1 லிட்டர் நீருக்கு 50 மில்லி கலந்து தெளிக்க, மாவுப்பூச்சி மட்டுப்படும்.

இந்த இயற்கை முறைகளைப் பயன்படுத்தி மாடித் தோட்டத்தில் விவசாயம் செய்ய... செடிகள் செழிப்பாக இருக்கும்.



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/how-to-take-care-of-home-garden

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக