பின்னலாடை மூலம் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் நகரமாகத் திருப்பூர் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடைகள் மற்றும் ஓவன் ஆடைகள் தயாரிப்பில் இந்திய அளவில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவிதமாக உள்ளது. திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அதுசார்ந்த சாயமிடுதல், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள், ஜாப் வொர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவிகித ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருப்பூரில் கொரோனாவுக்குப் பிறகான பின்னலாடை ஏற்றுமதி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. நூல் விலை உயர்வு, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர், உலக அளவில் பொருளாதார மந்தநிலை இதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த 2021-22-ம் ஆண்டு செப்டம்பரில் 130 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இந்த செப்டம்பரில் 106.6 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் 18.06 சதவிகித சரிவும், கடந்த ஆண்டு அக்டோபரில் ஆடை ஏற்றுமதி 125.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி, கடந்த மாதம் அக்டோபரில் மிகவும் சரிந்து 98.9 பில்லியன் அமெரிக்க டாலர் என, கடந்த ஆண்டு அக்டோபரைக் காட்டிலும் இந்த அக்டோபரில் 34 சதவிதம் சரிவைக் கண்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்ரமணியன் கூறுகையில், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரால், உலக அளவிலான பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு அதிக அளவில் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், மக்களிடையே வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதனால், திருப்பூருக்கு வரும் ஆயத்த ஆடை ஆர்டரும் குறைந்துள்ளது. திருப்பூரில் தற்போது, 60 சதவிகித நிறுவனங்கள் மட்டும் இயங்கி வருவதால், தொழிலாளர் களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்றுமதி 18 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாதத்திலும் ஏற்றுமதி 21 சதவிகிதம் குறைந்துள்ளது.
திருப்பூரில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ரூ.20,250 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பின்னரும் நடப்பு ஆண்டில் பெரிய அளவில் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கவில்லை. இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாத ஏற்றுமதி என்பது அதற்கு முன்பு 4 மாத ஆர்டர்களைப் பொறுத்ததாகும். திருப்பூரில் பின்னலாடை வர்த்தக விசாரணை கடந்த 4 மாதங்களாக முழு வீச்சில் நடைபெறவில்லை.
பின்னலாடை நிறுவனங்கள் கைவசம் உள்ள ஆர்டர்களை மட்டுமே செய்து கொடுத்து வருகின்றன. தீபாவளிக்குப் பிறகு புதிய ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம். தற்போது வெளிநாடுகளில் இருந்து வர்த்தக விசாரணை மட்டுமே நடந்து வருகிறது.
இந்த வர்த்தக விசாரணை ஆர்டராக மாறி ஆடைகளைத் தயாரித்து அனுப்பும்போது, வரும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கத் தொடங்கும் என நம்பலாம். ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஏஇபிசி, இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு பியோ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து புதிய ஆர்டர்களை ஈர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
பின்னலாடை தொழிலைப் பாதுகாக்க பேக்கிங் கிரெட்டிட் மீதான வட்டி மானியத்தை 5 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு வழங்குவதுடன், தொழில் நிறுவனங்களுக்கு அரசு கடன் சலுகை வழங்க வேண்டும். நூல் விலை சற்றுக் குறைந்துள்ள நிலையில், மின் கட்டணம் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. தற்போதுள்ள ஏற்றுமதி நிலையைக் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தைக் குறைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்றார்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ``அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய மந்த நிலை தொடங்கிவிட்டது. அது இந்தியாவுக்கும் வந்துவிட்டதை ஆயத்த ஆடை ஏற்றுமதி காண்பிக்கிறது.
இதற்கு முன்பு ஜிஎஸ்டி, கொரோனா, பஞ்சு, நூல் விலையேற்றம், தொடர்ந்து மூலப்பொருள் விலையேற்றம் என பல்வேறு பிரச்னைகளை பின்னலாடை நிறுவனங்கள் சந்தித்தன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தையும், நடப்பாண்டு செப்டம்பரையும் ஒப்பிட்டால் ரூ.1,014 கோடியும், கடந்த ஆண்டு அக்டோபரையும், இந்த ஆண்டு அக்டோபரையும் ஒப்பிட்டால் ரூ.1,257 கோடியும் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஆயத்த ஆடை தொழிலையும் தொழிலாளர்களையும், உற்பத்தியாளர்களையும் இதை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டிலிருந்தே இந்த நெருக்கடி நிலை பின்னலாடைத் தொழிலுக்கு தொடங்கிவிட்டது. அதன் உச்சகட்டநிலை இப்போது தெரிகிறது" என்றார்.
source https://www.vikatan.com/business/tirupur-textile-export-fallen-34-percentage
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக