Ad

வெள்ளி, 18 நவம்பர், 2022

ஒன் பை டூ

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``நாட்டு நடப்பை அப்படியே சொல்லியிருக்கிறார். இதுவரை பா.ஜ.க இந்தியா முழுவதுமுள்ள 270 சட்டமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கியிருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாற்றுக் கட்சி உறுப்பினர்களைப் பல கோடி ரூபாய் பணம் கொடுத்து, மிரட்டி, தங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்கின்றனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்கூட, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-களை பிள்ளை பிடிப்பதைப்போலத் தூக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் அண்ணன்

ஆர்.எஸ்.பாரதியும் சொல்லியிருக்கிறார். தற்போது குஜராத்தில் தேர்தல் அறிவித்த பிறகுகூட சில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க-வில் இணைத்திருக்கிறார்கள். ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில் இதைவிடக் கேவலமான அரசியல்கூத்து நடக்க முடியுமா... சமீபத்தில், தெலங்கானாவில் எம்.எல்.ஏ-க்களை 100 கோடி ரூபாய் கொடுத்து பா.ஜ.க-வில் இணையச் சொல்லும் வீடியோ வெளியானது. பா.ஜ.க-வின் பேரம் செல்லுபடியாகாதது தமிழ்நாடு, கேரளாவில் மட்டுமே. பா.ஜ.க.வு-க்கு மக்கள்நலக் கொள்கை கிடையாது என்பதால் இப்படி ஏதாவது செய்துதான், மக்கள் விரோத ஆட்சியை அமைத்துக்கொண்டிருக்கிறது.’’

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. சொந்தக் கட்சிக்காரர்களிடம் காசு வாங்கிக்கொண்டு சீட் கொடுப்பவர்கள், எங்களைக் குறைசொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க-வினர் வேறு கட்சியினரிடம் விலை பேசி, தங்கள் கட்சிச் சின்னத்தில் போட்டியிடவைப்பவர்கள் என்பதை அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் மறந்துவிட்டாரா... செந்தில் பாலாஜி, சேகர் பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் இவர்களெல்லாம் யார்... அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை ஆர்.எஸ்.பாரதி சற்று நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். பல உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியிலிருந்து எங்கள் கட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சி, ஊழலற்ற நிர்வாகத்தைப் பார்த்து உறுப்பினர்களாக எங்கள் கட்சிப் பணியில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்தோம் என்பதற்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமே... அதை ஏன் யாரும் செய்யவில்லை... போலியான வீடியோக்களைக்கொண்டு மக்கள் மத்தியில் பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மை கிடையாது.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-rs-bharathi-comments-on-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக