Ad

புதன், 30 நவம்பர், 2022

Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் கேன்சர்... குழந்தையைக் காப்பாற்ற முடியுமா?

Doctor Vikatan: என் தோழிக்கு வயது 38. திருமணமாகி 10 வருடங்கள் கழித்து இப்போதுதான் கர்ப்பமாகியிருக்கிறாள். அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதபடி அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சினைப்பையில் புற்றுநோய் அறிகுறி தெரிவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சினைப்பையை எடுக்க வேண்டி வரலாம் என்றும் சொல்கிறார்களாம். இந்நிலையில் அவள் பல வருடங்கள் கழித்து உருவான கருவை காப்பாற்றுவதா, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறாள். இதற்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா...

டெல்பின் சுப்ரியா

கர்ப்பத்தை உறுதி செய்யும் முதல் ஸ்கேனிலோ, அல்லது பத்து வாரங்களில் எடுக்கப்படும் என்டி ஸ்கேனிலோ சிலருக்கு கர்ப்பப்பையின் அருகிலுள்ள சினைப்பையில் (ஓவரீஸ்) கட்டிகள் போன்று இருப்பது சகஜம்தான். அவை சாதாரண நீர்க்கட்டிகளாக இல்லாமல் சந்தேகத்துக்குரியவையாகவும் இருக்கலாம்.

ஒருவேளை அவை புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கும்பட்சத்தில், அதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். கர்ப்பமா, புற்றுநோய் பாதுகாப்பா என்றால் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

முதல் வேலையாக டியூமர் மார்க்கர்ஸ் எனப்படும் ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளப்படும். அடுத்தகட்டமாக அந்தக் கட்டியின் தன்மையைக் கண்டறிய எம்ஆர்ஐ செய்ய வேண்டியது அவசியம். இந்த டெஸ்ட்டை கர்ப்பத்தின் 12 முதல் 14 வாரங்கள் முடிந்த நிலையில் செய்வதுதான் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பானது.

ஒருவேளை எம்ஆர்ஐயில் அது புற்றுநோய்க் கட்டிதான் என்பது உறுதியானால், பிரசவம்வரை காத்திருப்பது ஆகாது. கர்ப்பத்தின் இரண்டாவது ட்ரைமெஸ்ட்டரான 14 முதல் 28 வார காலத்தை அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு பாதுகாப்பான காலம் என்று சொல்வோம். அந்தக் காலகட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து சினைப்பையை அகற்றலாம். அதன் பிறகு அதை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

சினைப்பையிலும் புற்றுநோய் இருப்பது உறுதியானால், கர்ப்பப்பை, இன்னொரு சினைப்பை, நெறிக்கட்டிகள் உள்ளிட்ட வேறு சிலவற்றையும் சேர்த்து அகற்ற வேண்டியிருக்கும். இதுதான் சரியான சிகிச்சையாக இருக்கும்.

ஆனால் உங்கள் தோழி விஷயத்தில் அவருடையது மிகவும் பொக்கிஷமான கர்ப்பம் என்பதால், அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியதும் மிக முக்கியம். எனவே அறுவை சிகிச்சையின் போது புற்றுநோய் பாதித்துள்ள சினைமுட்டைப் பையை மட்டும் அகற்றிவிட்டு, குழந்தை வளர வளர, கூடவே கீமோதெரபி கொடுக்கும் ஆப்ஷனும் உண்டு.

புற்றுநோய்

கர்ப்ப காலத்தில் கொடுக்கும்படியான பாதுகாப்பான கீமோதெரபி மருந்துகள் உள்ளன. அவற்றை மீதமிருக்கும் கர்ப்ப காலத்தைப் பொறுத்துக் கொடுத்துவிட்டு, 37-38 வாரங்களில் குழந்தையையும் பாதுகாப்பாக டெலிவரி செய்துவிட முடியும்.

இப்படியெல்லாம் செய்வதால் குழந்தைக்கு பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா என்றால் அப்படி நிகழ்ந்ததற்கான விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் இதுவரை இல்லை. வளர்ச்சி தொடர்பான சின்னச் சின்ன பிரச்னைகள் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, குழந்தை பிறவிக்குறைபாடுகளுடன் பிறப்பதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை.

பிரசவமானதும் தாய்க்கு ஏற்கெனவே குறிப்பிட்டபடி கர்ப்பப்பை, சினைப்பை, நெறிக்கட்டிகள் உள்ளிட்ட பாகங்களை அகற்ற வேண்டியிருக்கும். குழந்தையையும் காப்பாற்றிவிட முடியும். பாதுகாப்பான சிகிச்சையையும் கொடுக்க முடியும். பிரசவத்துக்குப் பிறகு மறுபடி தாய்க்கு ஸ்கேன் செய்து, புற்றுநோய்ப் பரவலின் தீவிரம் எப்படியிருக்கிறது என்று பார்த்து, தேவைப்பட்டால் மறுபடி கீமோதெரபி கொடுக்க வேண்டியிருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-cancer-during-pregnancy-can-we-save-the-baby

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக