பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சமீபத்தில் நடித்து வெளி வந்த லால்சிங் சத்தா எதிர்பார்த்த அளவுக்கு வசூலை கொடுக்கவில்லை. சமூக வலைத்தளத்தில் இப்படத்தை புறக்கணிக்கவேண்டும் என்ற பிரசாரமும் முன்வைக்கப்பட்டது. இதனால் அமிர் கான் மனதளவில் உடைந்துவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அதோடு நடிப்பில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாகவும் செய்தி வெளியானது. ஆமிர் கானும் தான் தனது வாழ்க்கையில் குடும்பத்தினருக்கு போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். அடுத்ததாக சாம்பியன்ஸ் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார். இது குறித்து ஆமிர் கான் அளித்திருந்த பேட்டியில், சாம்பியன்ஸ் படத்தை நான் தயாரிக்க மட்டுமே செய்கிறேன்.
அப்படத்தில் நடிக்கத் தகுதியான நடிகர்களைத் தேர்வு செய்வேன். நான் நடிப்பில் இருந்து சில காலம் விலகி இருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் படத்தில் நடிகனாக மட்டும் நடிக்கும் போது வாழ்க்கையில் இதற்கு முன்பு நடக்காத அளவுக்கு கடுமையான இழப்பை சந்திக்கிறேன். சான்பியன்ஸ் படக்கதை அழகான அருமையான கதை. ஆனால் நான் எனது குடும்பம், அம்மா, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். இதற்காக படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். 35 ஆண்டுகால நடிப்பு வாழ்க்கையில் இப்போதுதான் நடிப்புக்கு ஓய்வு கொடுக்கிறேன். நடிப்பில் மட்டுமே 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகபடவில்லை என்று நினைக்கிறேன்.
இந்த நேரத்தில் நான் அவர்களுடன் இருக்க சிறிது நேரம் ஒதுக்க இதுவே சரியான நேரம் என்று கருதுகிறேன். அடுத்த வருடத்தில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்புக்கு ஓய்வு கொடுக்க இருக்கிறேன். நடிக்காத அடுத்த ஆண்டை நான் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆமிர் கான் ரேவதியின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் சலாம் வெங்கி படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க ஆமிர் கான் முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். இதற்கு முன்பு நடிகர் ஷாருக்கான் 2018ம் ஆண்டு ஜீரோ படத்தில் நடித்தார். அப்படம் தோல்வியை சந்தித்தது. இதனால் ஷாருக்கான் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் படங்களில் நடித்து வருகிறார்.
source https://cinema.vikatan.com/bollywood/actor-aamir-khan-has-announced-that-he-will-take-a-break-from-acting-for-a-year-and-a-half
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக