Ad

செவ்வாய், 15 நவம்பர், 2022

`திறமைக்கு ஏது தடை!' அர்ஜுனா விருது பெறும் மதுரையின் மகள் ஜெர்லின் அனிகா

அடுத்த டெப்லிம்பிக்கில் இன்னும் அதிக தங்க பதக்கங்களைப் பெற பயிற்சி எடுத்து வரும் மதுரையை சேர்ந்த ஜெர்லின் அனிகாவுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது அறிவித்துள்ளதை மதுரை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மதுரை மேயர் பாராட்டியபோது

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த செவித்திறன் குறைபாடுள்ள ஜெர்லின் அனிகா, சிறு வயதிலிருந்தே பேட்மிட்டன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்தவர் சில மாதங்களுக்கு முன் பிரேசிலில் நடைபெற்ற 24-வது செவித்திறன் குறைந்தவர்களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று அதில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

ஜெர்லின் அனிகா

தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அபினவ் சர்மாவுடன் இணைந்து மலேசியாவின் பூன் - டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றார்.

குழு பேட்மிட்டன் போட்டியிலும் வென்று மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை நாட்டிற்காக பெற்றுத் தந்தார். இந்த நிலையில்தான் ஜெர்லின் அனிகா தற்போது அர்ஜுனா விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.

குழந்தைகளின் திறமையைக் கண்டறிந்து அதை ஊக்குவித்தால் அந்தக் குழந்தை சர்வதேச அளவில் சாதனை படைக்கும் என்பதற்கு ஜெர்லின் அனிகாவே உதாரணம்.

மாற்றுத்திறனாளிகள் சர்வதேச அளவில் விருதுகளை குவிப்பது சாதாரண விஷயம் அல்ல. அவ்வகையில் இளம் வயதிலேயே விளையாட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார்.

ஜெர்லின் அனிகா

சர்வதேச போட்டிகளில் பங்கேற்று மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ள ஜெர்லின் அனிகா, அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் தங்க பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நாட்டின் உயரிய அர்ஜுனா விருது கிடைத்திருப்பது மேலும் ஊக்கம் அளித்துள்ளது. இந்த விருதுக்கு ஜெர்லின் அனிகாவை தேர்வு செய்த மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் என்றென்றும் நன்றி என பெற்றோர்களும், பயிற்சியாளரும் தெரிவித்து வருகிறார்கள்.

வாழ்த்துகள் ஜெர்லின் அனிகா.



source https://www.vikatan.com/news/sports-news/arjuna-award-announced-for-berlin-anika

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக