Ad

வெள்ளி, 25 நவம்பர், 2022

கலப்பட மருந்துகளால் ஏற்பட்ட 11 மரணங்கள்! - அனுபவம் பகிரும் குழந்தைகள் நல மருத்துவர் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில்  66 குழந்தைகள், ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் லிமிடட்  மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்துகளை உட்கொண்டதால்  கடுமையான சிறுநீரக  பாதிப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக உலக சுகாதார  நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மருந்து நிறுவனத்தின் நான்கு இருமல் மருந்து ப்ராண்டுகளில் அளவுக்கதிகமாக டைஎத்திலீன் க்ளைகால் (Diethylene Glycol) என்னும் நச்சு, கலப்படமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இதைப்போல், இந்தியாவில் இரண்டு வருடங்களுக்கு முன் கலப்பட இருமல் மருந்துகளால் ஏற்பட்ட 11 அப்பாவி குழந்தைகளின் மரணங்கள் பற்றி இந்த சமயத்தில் நினைவுக்கூற வேண்டும்.

இந்த சம்பவம் குறித்தும், கலப்பட மருந்துகளின் உயிர்க்கொல்லி அபாயத்தைப் பற்றியும் குழந்தை நல மருத்துவர் ஜெயராஜ் நம்மிடையே விரிவாக பகிர்ந்து கொண்டார்.

Representational Image

ஜனவரி 2020ல் கலப்பட இருமல் மருந்துகளால் ஏற்பட்ட 11 அப்பாவி குழந்தைகளின் மரணங்கள் பற்றி ..

நான் அப்போது குழந்தை நல மருத்துவத்தில் தலைசிறந்த  மத்திய கல்வி நிறுவனமான PGIMER, Chandigarh-இல்  MD இறுதி செமஸ்டர் பயின்று கொண்டிருந்தேன்.  2020 ஜனவரி, சிறுநீரக துறையிலிருந்தபோது, ஒரேவிதமான அறிகுறிகளோடு  இரு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.  ஜம்மு, உதம்பூர் மாவட்டம் ராம்நகரைச் சேர்ந்த அவ்விரு குழந்தைகளுக்கும் காய்ச்சல், சளி, இருமலை தொடர்ந்து, சிறுநீரின் வெளியேற்றம் குறைந்திருந்தது.  பரிசோதனைகளில் இருவருக்கும் கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து கொண்டு, பெரிட்டோனியல் டயாலிசிஸை தொடங்கினோம்.  முதல் குழந்தையின் உணர்திறன் பாதிப்படையவே, வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளித்தோம்.

ராம்நகரைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு குழந்தைகளும், அதே பாதிப்புகளுடன் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்ததும், ராம்நகர் பகுதியில் தீவிர வைரஸ் தொற்று பரவுகிறதா அல்லது குடிநீரில் நச்சுகள் கலந்துள்ளதாவென விரிவான விசாரணையை மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளை நாங்கள் எச்சரித்தோம்.

காரணங்களை கண்டறிய விரிவான பரிசோதனைகள் செய்தோம். எனினும் அனைத்து முடிவுகளும் எதிர்மறையாக வந்ததால் காரணத்தை கண்டறிவது மிக கடினமாக இருந்தது. இரத்த பரிசோதனையில் எவ்வித நச்சுகளும் உடலில் இல்லையெனவும், PCR பரிசோதனை முடிவுகளில் வைரஸ்கள் இல்லையெனவும் வந்தன. ஒரு வாரம் டயாலிசிஸ் மற்றும்  வெண்டிலேட்டர் செயற்கை சுவாசம் கிடைத்த பிறகும் தன் மகனின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால்,  அவரின் தந்தை வறுமை காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு எதிராக தன் குழந்தையுடன் வெளியேற விரும்பினார். சிறுநீரக பாதிப்பு எதனால் ஏற்பட்டது என்பதை கண்டறிந்தால், அனைத்து குழந்தைகளையும் காப்பாற்ற முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். அவரின் பெற்றோரை சமாதானப்படுத்தி, அவர்களுக்காக NGOக்கள் மூலம் உதவிகளைப் பெற்றோம்.

Representational Image

பரிசோதனை முடிவுகள் அனைத்தும் எதிர்மறையாக வரவும், இரு குழந்தைகளுக்கும் சிறுநீரக பயாப்ஸி எடுத்தோம். பயாப்ஸியில் இருவருக்கும் நச்சினாலே சிறுநீரக பாதிப்பு வந்துள்ளதென முடிவுகள் வர, நாங்கள் காரணத்தை கண்டறிந்திடுவோம் என்ற நம்பிக்கை கீற்று எழுந்தது. அவர்களின் பெற்றோரை வீட்டிற்கு அனுப்பி, அவ்விரு குழந்தைகள் உட்கொண்ட அனைத்தையும் கொண்டுவர செய்து, நச்சுயியல் துறைக்கு பரிசோதனைக்கு அனுப்பினோம்.

பரிசோதனை முடிவில், ColdBest-PC என்னும் இருமல் மருந்தில், டைஎத்திலீன் க்ளைகால் (Diethylene Glycol) என்னும் நச்சு கலப்படமாக உள்ளதை அறிந்ததும் பேரதிர்ச்சிக்குள்ளானோம். மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  உடனடியாக PGIMER மருத்துவ குழு, சண்டிகரிலிருந்து 400 கீமி பயணித்து ராம்நகர் சென்றடைந்து பாதிப்புகள் ஏற்பட்ட வேறு குழந்தைகளும் உட்கொண்ட மருந்து மாதிரிகளை சேகரித்தனர். அனைத்திலும் டைஎத்திலீன் க்ளைகால் (Diethylene Glycol) நச்சு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Pediatric nephrology team

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையினரின் ஆய்வு முடிவுகளில், தொகுதி எண் DL5201-இல் இருந்த அனைத்து ColdBest-PC  இருமல் மருந்து பாட்டில்களிலும் டைஎத்திலீன் க்ளைகால் (Diethylene Glycol) நச்சு கலப்படம் இருந்ததை உறுதி செய்தனர். இந்தியாவின் வெவ்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்த அந்த தொகுதியின் 3400 இருமல் மருந்து பாட்டில்கள் கண்டறியப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன. அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதிப்படையாமல் காப்பாற்றப்பட்டன. ராம்நகரைச் சேர்ந்த 11 அப்பாவி குழந்தைகளின் மரணத்திற்கும், 17 குழந்தைகளின் தீவிர பாதிப்புகளுக்கும் இந்த கலப்பட இருமல் மருந்து காரணமாய் இருந்துள்ளது. அதனை உற்பத்தி செய்த ஹிமாச்சல் பிரதேச மருத்துவ நிறுவனம் டிஜிட்டல் விஷன் பார்மா சீல் வைக்கப்பட்டது.  அதற்கெதிரான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

சிகிச்சையளிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கும் என்னானது?

மூன்று வார தீவிர சிகிச்சை, செயற்கை சுவாசம் மற்றும் டயாலிசிஸிற்கு பிறகு, முதல் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. டைஎத்திலீன் க்ளைகால் தீவிர சிறுநீரக பாதிப்பு, தீவிர நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் மரணம் ஏற்படுத்தக்கூடிய கொடிய நச்சாகும்.  இரு குழந்தைகளின் சிறுநீரக பாதிப்பும் முன்னேற்றமடைந்து, எவ்வித நரம்பு மண்டல பாதிப்புகளும் இல்லாமல் முற்றிலும் குணமடைந்தனர். நான், MD முடித்து புதுச்சேரி திரும்பிய பிறகும் அந்த பெற்றோர்களிடம் தொடர்பிலிருக்கிறேன். ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவ நிறுவனத்தின் இருமல் மருந்தில் அதே டைஎத்திலீன் க்ளைகால் நச்சு கலப்படத்தால், 66 அப்பாவி காம்பியா குழந்தைகள் மரணித்த செய்தியை நான் தெரிவித்ததும், அவர்கள் பேரதிர்ச்சியாகினர்.  உயிர்க்கொல்லி கலப்பட மருந்தினால் தங்கள் பகுதியின் அப்பாவி குழந்தைகளின் மரணத்திற்கு பிறகாது, அரசானது அனைத்து கலப்பட போலி நிறுவவனங்களையும் கண்டறிந்து  மூடுமென்ற அவர்களின் நம்பிக்கை பொய்த்ததாய் கூறினார்.

குழந்தை நல மருத்துவர் ஜெயராஜ்

இவ்வாறு கலப்பட மருந்துகள் அதிகரிப்பை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

இந்தியா, மருந்து உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் விளைவாக, மருந்து உற்பத்தி நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகிவிட்டன. குறிப்பாக, கொரோனா தொற்று ஆரம்பித்த பிறகு, இவற்றின எண்ணிக்கை மேலும் பெருகிவிட்டது. ஜெனரிக் மருந்துகள், பிரபல ப்ராண்ட் மருந்துகளை விடவும் பல மடங்கு விலை மலிவாய் கிடைப்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ செலவுகளை குறைக்கவல்லன; மேலும் வெளிநாடுகளில் ஏற்றுமதி மூலம் வருடாவருடம் சுமார் 24 பில்லியன் டாலர் அந்நிய செலவாணியை ஈட்டுகிறது.

எனினும், மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியினால், தரங்குறைந்த மருத்துவ நிறுவனங்கள் அதிகரிப்பதை அனுமதிக்கவே முடியாது.  உரிமம் வழங்குவதற்கு அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும். இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையர் (DCGI), மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை (CDSCO) மற்றும் மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையினரின் தார்மீக கடமையிது. கலப்பட மருந்தினால் அப்பாவி உயிர்கள் பலியானால், இந்த அமைப்புகளின் தோல்வியாகவே கருத வேண்டும்.

Representational Image

உதாரணமாக, 66 காம்பியா குழந்தைகள் மரணம் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் லிமிடட் நிறுவனத்தின் மருந்துகள் முன்னதாக வியட்நாமிலும், பீகார் அரசாலும் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்ததும், கேரளா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அதன் மருந்துகள், பரிசோதனையில் தரங்குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதும், இப்போது தெரியவந்துள்ளன. இவ்வாறு, தொடர்ந்து தர பரிசோதனைகளில் தோல்வியடைந்த ஒரு மருத்துவ நிறுவனத்திற்கு வெளிநாடு ஏற்றுமதி எவ்வாறு கொடுத்தனர்? ஏன் அதன்மேல் முன்னரே தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையினர் அனைத்து மருந்து நிறுவனங்களையும் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். மருந்து மாதிரிகளை சேகரித்து அவற்றின் தரம், தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய பகுப்பாய்வு செய்ய வேண்டும். கலப்படமிருந்தாலோ, தரம் குறைவாய் இருந்தாலோ, மருந்து நிறுவனங்களுக்கு சீல் வைத்து, அவற்றின் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காய்ச்சல் மற்றும் இருமல் மருந்துகளை ‘ஓவர் த கவுன்ட்டர் (Over the counter) மருந்துகள் என்பர்; அதாவது இந்த மருந்துகளை மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமலே மருந்து கடைகளில் பெற முடியும். இந்த மருந்துகளிலேயே கலப்படம் செய்யப்பட்டு, உயிர்க்கொல்லி மருந்துகளாய் மாறுவதை காணும்போது, மிகப்பெரிய அச்சம் எழுகிறது. இதை மிக முக்கிய தேசிய பிரச்சனையாக கருத வேண்டும். ஊடகங்கள் இதை விவாதத்திற்கு உட்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவர்களும், தாங்கள் எழுதும் மருந்துகள்தான் தங்கள் நோயாளிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டே மருத்துவர்கள்  மருந்துகளை எழுத வேண்டும். நான்கு வயது கீழிருக்கும் குழந்தைகளுக்கு டெக்ஸ்ட்ரோமெத்தார்ஃபன் (Dextromethorphan) இருமல் மருந்தை தரக்கூடாதென விதிமுறை இருந்தும், சென்ற வருடம் டெல்லி அரசு மொஹல்லா கிளினிக்கில், சிறு குழந்தைகளுக்கும் டெக்ஸ்ட்ரோமெத்தார்ஃபன் இருமல் மருந்தை தந்துவிட, 16 குழந்தைகள் பாதிப்படைந்து, மூன்று குழந்தைகள் இறந்தது இந்தியா முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Representational Image

மருந்து கடைகளும் பொறுப்புணர்வுடன், மருந்துகளின் தரத்தில் கேள்வி எழுந்தாலோ, புதிய மருந்துகள் பிரபல மருந்து நிறுவனத்தின் மருந்துகள் போன்று பெயர் தோற்றத்துடன் போலியாய் இருக்கக்கூடிய சாத்தியமிருந்தாலோ, மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையினருக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும்.  ‘மக்களுக்கு கிடைக்கும் மருந்துகள், தரம் வாய்ந்த மருந்துகளே! உயிர்க்கொல்லிகள் அல்ல!’ என்பதை இனியேனும் அரசு உறுதி செய்ய வேண்டும்!

இங்கு பதிவிட்டுள்ள புகைப்படங்கள், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரின் அனுமதியுடன் தான் பகிரப்பட்டுள்ளது.

-குழந்தை நல மருத்துவர் ஜெயராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vkatan-article-about-contaminated-indian-drugs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக