உலகின் பல இடங்களில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. மனித சமத்துவத்தை பின்பற்ற வேண்டிய காலத்திற்கு நகர்ந்து விட்டோம். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று பாரதி பாடியே பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஜனநாயகமும் மக்கள் ஆட்சியும் நடைமுறைக்கு வருவதற்குப் பின்னால் எத்தனையோ போராட்டங்கள் நடந்துள்ளன. நீண்ட வரலாறே உள்ளது.
ஆனால் பிக் பாஸ் வீடு இன்னமும் பழமைவாதக் காலத்தில் உறைந்து ராஜ குடும்பம், சேவகர் குடும்பம் என்று விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை நூற்றாண்டுகள் போனாலும் ‘முதலாளிகள்’ வெவ்வேறு நவீன வடிவங்களில் உருமாறிக் கொண்டே இருப்பார்கள் என்பதன் குறியீடு போல.
நாள் 37-ல் நடந்தது என்ன?
கோச்சடையான் படத்திலிருந்து ‘எங்கோ போகுதோ வானம்..’ என்கிற எஸ்.பி.பி பாடிய அருமையான பாடலைப் போட்டார் பிக் பாஸ். இந்தப் படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் தமிழ் சினிமாவில் அனிமேஷன் படங்களுக்கு ஒரு புதிய திறப்பு கிடைத்திருக்கும்.
‘விளையாட்டா சொல்ற மாதிரி குத்தலான விஷயங்களை அசிம் சொல்லிடறாரு” என்பதை இன்னமும் ஏடிகே மற்றவர்களிடம் அனத்திக் கொண்டிருந்தார். இதைப் பற்றி அசிடமே நேரில் பேசி விட ஏன் அவர் தயங்குகிறார்? ஒருவிதமான இரட்டை மனநிலையில் ஏடிகே அல்லாடிக் கொண்டிருப்பது நன்கு தெரிகிறது.
கருத்துவாதி அசிம்?!
‘குயின்சி ஒத்தகருத்துவாதி.. நிவா தாழ்வுமனப்பான்மைவாதி’ என்று இதர போட்டியாளர்களைப் பற்றி விக்ரமனிடம் அலசிக் கொண்டிருந்தார் அசிம். இது போல் பல விஷயங்களில் அபிப்ராயம் சொல்வதில் அசிம் ஒரு ‘கருத்துவாதியாக’ இருக்கிறார் என்பதையும் அவரே உணர்ந்தால் நல்லது.
‘விக்ரமனை கண்ட்ரோல் பண்ற ஒரே சுவிட்ச் ஷிவின்தான்’ என்று ராம் சொல்ல ‘அவர் கிட்ட பேச பாயிண்ட்டே இருக்காது. ஆனா பேசற முறைல சமாளிப்பாரு’ என்று மணி சொல்ல ‘அதுதான் மக்கள் கிட்ட போய் சேரும்’ என்று புலம்பினார் அமுதவாணன். இப்படி ஆங்காங்கே புறணி பேசும் வைபவம் உற்சாகமாக நடந்து கொண்டிருந்தது.
புலம்பும் ஆசாமிகளை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து அவர்களை குழப்பி பிறகு தெளிவுப்படுத்தி அனுப்புவது பிக் பாஸின் வழக்கம். அந்த வகையில் ஏடிகேவை அழைத்தார்.
“நான் ரிசர்வ்ட் டைப் கிடையாது. ஆனா இங்க பழக கஷ்டமா இருக்கு. மோட்டிவேட் பண்ற மாதிரி அசிம் நிறைய சர்காஸம் பண்றாரு.. இனி நேரடியா சொல்லிடப் போறேன். என் மகனை ரொம்ப மிஸ் பண்றேன். அவனோட இரண்டு வயசுல பிரிஞ்சு வந்தேன். என் திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்பட நான்தான் காரணம். ஒரு தகப்பனா நான் மன்னிப்பு கேட்கறேன்” என்று கலங்கிய ஏடிகே அதற்குப் பிறகு தன் மகனுக்கு சொன்ன ஒரு உபதேசம் முக்கியமானது. ‘எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்க அம்மாவை அவமரியாதையா பேசாதே’ என்று சொன்னது, ஆண் குழந்தைகளின் வளர்ப்பில் ஒரு முக்கியமான அம்சம். “ரொம்ப யோசிக்காதீங்க. ஃப்ரீயா இருங்க” என்று சொல்லி ஏடிகேவை வழியனுப்பி வைத்தார் பிக் பாஸ்.
நகைச்சுவைப் பொறியலாக மாறிய பிக் பாஸ் வறுவல்
லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் பற்றிய விவரத்தை அறிவித்தார் பிக் பாஸ். ‘பிபி ரோஸ்ட்’ என்கிற தலைப்பில் ஒருவரையொருவர் வறுத்தெடுக்க வேண்டுமாம். வெல்பவருக்கு 400 பாயிண்ட்டுகள் பரிசு என்று லம்ப்பாக அள்ளிக் கொடுத்தார். இது வறுவலாக அல்லாமல் காமெடி பொறியலாக மட்டுமே இருந்தது.
முதலில் வந்த கதிரவன், ஷிவினின் உடல்மொழியை நையாண்டியாக செய்து காண்பித்தார். நள்ளிரவு தாண்டினாலும் ஷிவின் மேக்கப் போட்டுக் கொள்வதைப் பற்றி கதிரவன் கிண்டலடிக்க, ‘இவர் பத்து மணி டாக்டர். நைட்டுக்கு மேலதான் அறிவுரை சொல்ல ஆரம்பிப்பாரு. மைக் பாட்டரி மாத்தறது தவிர வேற வேலை செஞ்சதில்ல” என்று பதிலுக்கு கதிரவனின் காலை வாரினார் ஷிவின். என்றாலும் சிறப்பாக கிண்டலடித்த கதிரவன் இதில் வென்றார்.
அடுத்து வந்த ஜனனி “நீங்க என்ன சுற்றுலா தளத்திற்கு வந்திருக்கீங்களா.. தெலுங்குப் பட வில்லன் மாதிரி இருந்தாலும் தெய்வக் குழந்தை நீங்க’ என்று பாராட்டுகிறாரா அல்லது கலாயக்கிறாரா என்றே புரியாமல் பேச, அதற்கு கூட எதிர் பாயிண்ட் இல்லாமல் தடுமாறினார் ராபர்ட். “புரியற மாதிரி எப்ப தமிழ் பேசப் போறீங்க?” என்று ராபர்ட் கேட்டது அநியாயம். தமிழில் இன்னமும் பல சொற்கள் அருகிப் போகாமல் நடைமுறை உபயோகத்தில் இருப்பது இலங்கைத் தமிழில்தான். ‘வழமை’ என்கிற சொல்லை ஒருமுறை ஜனனி பேச்சில் உபயோகித்த போது புல்லரிப்பாக இருந்தது.
ராஜகுடும்பத்தில் சேர அனைவருக்குமே ஆசை
இந்த வாரத்தின் டாஸ்க். ‘ரா’ஜ பரம்பரை அருங்காட்சியகமாம்’ ‘ரூம் போட்டு யோசித்த ஐடியாவை’ எடுத்துக் கொண்டு வந்திருந்தார் பிக் பாஸ். இதற்காக வீடு மூன்று அணிகளாகப் பிரிய வேண்டுமாம். ராஜ குடும்பம், அருங்காட்சியகப் பணியாளர்கள், சேவகர்கள். அனைவரும் செந்தமிழில்தான் பேச வேண்டுமாம்.
பெரும்பாலோனோர்க்கு பணியாளர்களாக இருக்க விருப்பமில்லை. ராஜ வம்சமாகவே இருக்க ஆசைப்பட்டார்கள். அந்தப் பதவிக்காக அடித்துக் கொண்டார்கள். (எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதி சொன்னதை இவ்வாறு மெய்ப்பிக்கிறார்கள் போல!). ‘நான் படைத்தளபதி’ என்று அசிம் அப்போதே கர்ச்சீப் போட்டு இடம் பிடிக்க, இளவரசி பட்டத்திற்காக ஆயிஷாவும் ஜனனியும் ஒருவரையொருவர் தள்ளி ஜாலியாக அடித்துக் கொண்டார்கள். ‘நான் சேவகன்’ என்று முன்பே பணிவாக சொல்லி விட்டார் அமுதவாணன். விக்ரமன் அதிகம் ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருந்தார்.
“நீங்களே கூடிப் பேசி முடிவெடுங்க” என்று ஓலையை அவர்களிடமே தள்ளி விட்டார் பிக் பாஸ். வாக்கெடுப்பின் மூலம் தேர்வு ஆரம்பமானது. இதன் படி ராஜாவாக ராபர்ட்டும் ராணியாக ரச்சிதாவும் தேர்வானார்கள். (ராபர்ட்டின் ஜென்மம் சாபல்யம் அடைந்திருக்கும்!). இளவரசராக மணிகண்டனும் இளவரசியாக ஜனனியும் ராஜகுருவாக விக்ரமனும் தேர்வானார்கள்.
அருங்காட்சியகப் பணியாளர்களில் தலைவராக ஏடிகே, பார்வை சரியாக தெரியாத நபராக ராம், அருங்காட்சியகப் பொருட்களைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் அடித்து விடும் நபராக தனலஷ்மி, தூங்கி வழிபவராக ஆயிஷா, இரண்டு பாதுகாவலர்களாக குயின்சி மற்றும் நிவாஷிணி தேர்வு செய்யப்பட்டார்கள். சேவகர்களில் காது கேட்காத நபராக மைனா தேர்வு செய்யப்பட்டார்.
தனலஷ்மி செய்த காரியத்தால் மனமுடைந்த குயின்சி
இந்த வாக்கெடுப்பில் பல மனத்தாங்கல்கள் சிரிப்பிற்குப் பின்னால் மறைக்கப்பட்டன. இளவரசன் முதற்கொண்டு அனைத்துப் பிரிவிலும் போட்டியிட்ட மைனாவிற்கு வாக்குகளே கிடைக்காததால் ஜாலியாக கோபித்துக் கொண்டாலும் உண்மையான வருத்தம் அவரது முகத்தில் தெரிந்தது. இளவரசி பதவிக்கு ஒருவர் கூட தனக்கு வாக்களிக்காததால் நொந்து போன நிவாஷிணி, பிறகு தயக்கத்திலேயே இருந்தார். ‘குயின்சி இளவரசியாக சம்மதமா?’ என்கிற வாக்கெடுப்பில் விக்ரமன் தூக்கிய கையை தனலஷ்மி அமுக்கி இறக்கி விட்டார். இதை குயின்சி கவனித்து விட்டார்.
‘வறுவல் காமெடி’ மீண்டும் தொடர்ந்தது. மணிகண்டனை விதம் விதமாக கலாய்த்து தள்ளினார் அமுதவாணன். மணியும் அதற்கு ஈடு கொடுத்தாலும் வெற்றி பெற முடியவில்லை. ‘நான் என்ன ஜெயிக்கவா.. பிக் பாஸ் வந்தேன். எனக்கொரு உறவு கிடைச்சது’ என்று குயின்சியைப் பார்த்து நெகிழ்ந்தார் ராபர்ட். (ஆனா டார்கெட் வேற ஆள் மாதிரி தெரியுதே மாஸ்டர்!).
விக்ரமன் சும்மா இருந்திருக்கலாம். ‘இளவரசி பாத்திரத்திற்கு நீதான் பொருத்தமா இருப்பே” என்று குயின்சியிடம் சொல்லி நோண்டி விட்டார். எனில் தனலஷ்மி அமுக்கிய கையை விடுவித்து அவர் தனது வாக்கை செலுத்தியிருக்கலாம். “பார்த்தேன்.. நீங்க எனக்குத்தான் கை தூக்கினீங்க.. அதை யாரு இறக்கி விட்டதுன்றதையும் பார்த்தேன்.. இது தனியா ஆடற கேம்தானே? ஏன் இப்படில்லாம் பண்றாங்க.. எனக்கு தலை சுத்துது’ என்று நொந்து போய் சொன்ன குயின்சியிடம் ‘அப்படித்தான் இருக்கும்’ என்று ஆறுதல் சொன்னார் விக்ரமன்.
ராஜபரம்பரையின் அருங்காட்சியமாக மாறிய வீடு
மக்களை நீண்ட நேரம் வெளியில் காக்க வைத்த பிறகு கதவைத் திறந்து விட்டார் பிக் பாஸ். வீடு அருங்காட்சியகமாக உருமாறியிருந்தது. ‘செம.. சூப்பர்.. பிக் பாஸ் கலக்கிட்டீங்க.. அருமையா இருக்கு’ என்று பாராட்டு மழை பொழிந்தது. குறைந்த அவகாசத்தில் வீட்டை தலைகீழாக மாற்றியமைத்த பிக் பாஸ் டீமின் பணியாளர்களையும் வடிவமைப்பாளர்களையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அத்தனை அசத்தலான செட்டிங்.
“ஓ.. பெட்ரூம்ல ராஜா குடும்பம் மட்டும்தான் படுக்க முடியும் போல.. ஆனா ராஜாவுக்கும் ராணிக்கும் தனித்தனி படுக்கையைப் போட்டுட்டாங்களேப்பா” என்று வில்லங்கமான காமெடியை அசிம் சொல்ல, அவரை ஜாலியாக ஆட்சேபித்தார் ரச்சிதா. கத்தியை எடுத்துக் கொண்ட அசிம் பாகுபலி வசனத்தைப் பேச, நகைகளை அணிந்து கொண்ட தனலஷ்மி “நான் ராணியா இருந்திருக்கலாம்” என்று தன் ஆசையை கண்ணாடி முன்பு வெளியிட்டார். ராபர்ட்டும் ரச்சிதாவும் வாளை எடுத்துக் கொண்டு ஜாலியாக சண்டை போட்டார்கள். (இவர் வாள் எடுக்கற ஸ்டைலையும் அந்தம்மா அதை தடுக்கற லாவகத்தையும் பார்த்தா. பிரபாஸ், அனுஷ்கா மாதிரியே இல்ல?!).
கதிரவனுக்கும் ஷிவினுக்கும் இடையில் ஒரு விநோதமான டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது. விரலில் அடிபட்ட நிலையில் கதிரவன் பாத்திரம் கழுவ போராடிக் கொண்டிருக்க, அவருக்கு உதவி செய்ய முன்வந்தார் ஷிவின். ஆனால் அதை கதிரவன் மறுக்க ஷிவினுக்கு கோபம் வந்தது. அங்கு இருக்கும் பல பாத்திரங்களையும் ஒழித்துப் போட்டு ‘இதையும் கழுவுங்க” என்கிற மாதிரி சிங்க்கில் குவித்தது சுவாரசியமான காட்சி.
குயின்சிக்கு ஆறுதல் சொன்ன பிக் பாஸ்
பிக் பாஸிற்கு போரடித்தால் யாரையாவது கூப்பிட்டு ஆறுதல் சொல்வார் போல. இந்த முறை குயின்சியை அழைத்தார். அடாவடியாக செயல்படும் மனிதர்களுக்கு இடையில் அப்படி போராட முடியாத குணாதிசயம் கொண்ட நபர்களின் மனப்புழுக்கம் குயின்சியின் அழுகைப் பேச்சில் வெளிப்பட்டது.
“I lost somewhere.. என் கிட்ட இருந்த fun போச்சு.. ஆட்டத்தில இருந்து வெளியேறிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்.. இங்க க்ரூப்பிஸம் வந்துடுச்சு.. I can’t play it ugly… சுயமரியாதைக்காக அமைதியா இருக்கேன்.. ஒருத்தருக்கு நல்லது நெனச்சா கூட அவங்களே நம்மை அமுக்கறாங்க..” என்றெல்லாம் கண்ணீர் வடிய புலம்பிய குயின்சிக்கு ஆறுதல் சொன்னார் பிக் பாஸ்.
“பல நபர்களைக் கொண்ட கேம் இது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாழ்க்கைப் பின்னணியில இருந்து வந்திருக்காங்க. நீங்கள் இந்தப் போட்டியை எப்படி அணுகுகிறீர்கள் என்பதுதான் விஷயம். அது உங்க கைலதான் இருக்கு. நீங்க தமிழில் பேசினது நல்லா இருந்தது..” என்று பிக் பாஸ் சொல்லும் போதே கட்டுப்படுத்த முடியாமல் அழுத குயின்சி “மிக்க நன்றி.. அது மட்டும்தான் எனக்கு நல்லா வருது.. மத்த டாஸ்க்ல எனக்கு ஸ்பேஸ் கிடைக்கலை. எனக்கான தேர்வில் கையைப் பிடிச்சு அமுக்கி அதைத் தடுக்கறாங்க.. என்னால அப்படி பண்ண முடியாது” என்று கலங்கினார்.
‘உங்க அம்மா இப்ப கூட இருந்தா என்ன அட்வைஸ் பண்ணயிருப்பாங்க?” என்று சொல்லி சென்டியை மேலும் கூட்டினார் பிக் பாஸ். ஆனால் அதற்கு குயின்சி சொன்ன பதில் வேடிக்கை. “அவங்க என்னை விடவும் அதிக குழந்தைத்தனமாத்தான் அட்வைஸ் பண்ணியிருப்பாங்க” என்கிற பதிலை பிக் பாஸ் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். “ஓகே.. நீங்க நெனக்கறதை துணிச்சலா வெளிப்படுத்துங்க” என்று சொன்ன பிக் பாஸிடம் “இப்பத்தான் கொஞ்சம் தெளிவு வந்திருக்கு. நன்றி” என்று விடைபெற்றார் குயின்சி.
தனலஷ்மியின் உருட்டு காமெடி
ராஜகுடும்பத்தின் ஆலோசகராக தான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற கோபம் ஷிவினிடம் இருக்கிறது. எனவே அதை ஜாலியான தோரணையில் ரச்சிதாவிடம் வெளிப்படுத்தினார். “உங்க ராஜா குடும்பத்திற்கு வடிச்சுக் கொட்டறேன். தின்னுத் தொலையுங்க..” என்றெல்லாம் அனத்திய ஷிவினை கட்டியணைத்து ஆறுதல் படுத்தினார் ரச்சிதா. (இந்தக் காட்சியின் இடையே வந்த ஒரு தொழில்நுட்ப தடங்கல் தற்செயலானது போல் தெரியவில்லை. ஷவின் பேசிய ஆட்சேப வார்த்தைகளை டெக்னிக்காக தடுத்து விட்டார்கள் போல!).
‘கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாத’ என்று ஒரு படத்தில் சொல்வார் சந்தானம். காமிரா முன்பு தனலஷ்மி செய்த காரியமும் அப்படித்தான் இருந்தது. அதென்னமோ அம்மணி காமிரா முன்பு வரும் போதெல்லாம் ‘என்னை வெளிய அனுப்பிடுங்க பிக் பாஸ்’ என்று சொல்லி அழுது விடுவாரோ என்று நமக்குத்தான் திகிலாக இருக்கிறது.
“பிக் பாஸ். நான் இப்ப ஒரு உருட்டு உருட்டப் போறேன்.. பாருங்களேன்.. ஜாலியா இருக்கும்” என்று குறளி வித்தை போல் ஆரம்பித்த தனலஷ்மி, ராஜாவின் வீரதிர பராக்கிரமங்களைப் பற்றி எழுதிய வாசகங்களின் இடையில் தன்னுடைய பெயரை செருகி வாசித்து விட்டு ‘எப்படியிருக்கு?’ என்கிற மாதிரி காமிராவைப் பார்த்தார். அத்தோடு நிகழ்ச்சியை சட்டென்று முடித்த பிக் பாஸ் டீமின் எடிட்டிங் ரூமில் எவரோ ஒரு புத்திசாலி நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-season-6-day-37-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக