Ad

திங்கள், 14 நவம்பர், 2022

சென்னை: `ஆசையே துன்பத்துக்கு காரணம்' - காவலர்களையே ஏமாற்றிய போலீஸ்காரர்கள்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருபவர் பூம்பாண்டி. இவர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் கடந்த 10.11.2022-ம் தேதி ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``காவலர் ரமேஷ் என்பவர் மூலம் சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றும் தர்மன் என்பவர் அறிமுகமானார். நாங்கள் அனைவரும் காவல்துறையில் பணியாற்றியதால் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். இந்தச் சமயத்தில் மலேசியாவில் உள்ள ஆயில் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என தர்மன், ரமேஷ் ஆகியோர் என்னிடம் கூறினர்.

காவலர் தர்மன்

அதை நம்பி நானும் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தேன். அதற்கு மாதந்தோறும் 15,000 ரூபாய் லாபமாக கிடைத்தது. இதையடுத்து கடந்த 22.7.2022-ம் தேதி 5 லட்சம் ரூபாயை முதலீடு செய்தேன். அதற்கு மாதம் 75,000 ரூபாய் லாபமாக வந்தது. அதன்பிறகு இந்த முதலீடு திட்டத்தில் மேலும் சிலரை சேர்த்துவிடும்படி காவலர் தர்மன் கூறினார். அதனால், எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களிடம் முதலீடு திட்டம் குறித்து விவரித்து 12 லட்சம் ரூபாய் வரை காவலர்கள் தர்மன், ரமேஷ் ஆகியோர் மூலம் முதலீடு செய்தேன். ஆனால் அவர்களுக்கு பணம் வரவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். எனவே, என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி மேற்பார்வையில் துணை கமிஷனர் பெருமாள் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் காவலர்கள் தர்மன், ரமேஷ் உள்பட சிலர், காவலர்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து காவலர் தர்மனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம். ``சென்னை கீழ்பாக்கத்தில் செயல்பட்ட ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் மாதம் 15,000 ரூபாய் வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தைகளைக் கூறி ஏராளமானவர்களை ஏமாற்றியதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளிக்கப்பட்டது. அதே நிறுவனம்தான் ஆவடி ஆயுதப்படையில் பணியாற்றிய காவலர்களை காவலர்கள் மூலம் ஏமாற்றியிருக்கிறது. கைதான தர்மன், காவல்துறையில் பணிக்கு சேருவதற்கு முன்பு கூரியர் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்திருக்கிறார். அங்கு பணியாற்றிய நண்பர்கள் மூலம்தான் காவலர் தர்மனுக்கு இந்த முதலீடு திட்டம் குறித்த தகவல் கிடைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் காவலர் தர்மன், மூன்று லட்சம் ரூபாயை முதலீடு செய்திருக்கிறார். மாதந்தோறும் அவருக்கு 45,000 ரூபாய் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தர்மன் மூலம் ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்கள் இந்த முதலீடு திட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு லாபம், வட்டித் தொகை கிடைத்து வந்திருக்கிறது. அதனால் இந்த முதலீடு திட்டத்தில் காவலர்கள் போட்டி போட்டி சேர்ந்திருக்கிறார்கள். மேலும் ஒருவர், இந்தத்திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்ய வைத்தால் அதற்கு கமிஷனாக 2,000 ரூபாயையும் இந்த நிறுவனம் கொடுத்திருக்கிறது. அதனால் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு சிலர் அதிகளவில் முதலீடுகளை பெற்றியிருக்கிறார்கள்.

கைது

இதுவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு மட்டும் 14 பேர் புகாரளித்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த விவரங்கள் அடிப்படையில் ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் வரை மலேசிய ஆயில் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த முறைகேடு குறித்து ஏற்கெனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவில் ஒப்படைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கைதான தர்மன், இந்த முதலீடு திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மூன்று காவலர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/avadi-armed-police-arrested-in-cheating-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக