Ad

புதன், 23 நவம்பர், 2022

திருச்சி: வங்கிப் பணத்தில் மோசடி; ஷேர் மார்கெட்டில் முதலீடு! - ரூ.87 லட்சத்தை சுருட்டிய மேலாளர் கைது

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகனேரி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜா. இவர் திருச்சி மலைக்கோட்டை இந்தியன் வங்கி கிளையில் மேலாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் மேலாளராகப் பணியாற்றிய காலங்களில் வங்கிப் பணத்தை எடுத்து பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதன்பேரில் இந்தியன் வங்கி மண்டல மேலாளரான ஸ்ரீமதி, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

வங்கி மோசடி

அந்தப் புகார் மனுவில், ``இந்தியன் வங்கி மலைக்கோட்டை கிளையில் சண்முகராஜா மேலாளராகப் பணியாற்றிய போது, ஓய்வூதியம் பெறாத ஆறுமுகம் என்பவரின் பெயரில் ஓய்வூதியத்தில் முன் கடனாகப் பெற்றதாக ரூ.1.50 லட்சத்தை கையாடல் செய்திருக்கிறார். அதேபோல நகையே இல்லாமல் 420 கிராம் நகைகளை அடகு வைத்ததாக, 10 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுத்திருக்கிறார். மேலும், பொன்னம்மாள் என்பவர் பெயரில் டெபாசிட் கடனாக 76 லட்ச ரூபாயை எடுத்திருக்கிறார். அந்தவகையில், சண்முகராஜா வங்கியிலிருந்து ரூ.87,50,000-ஐ கையாடல் செய்திருக்கிறார். எனவே, சண்முகராஜா மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, வங்கிக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையினை மீட்டுத் தரவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்து, சண்முகராஜா மீது வழக்குப் பதிந்ததோடு கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். என்ன நடந்ததென விஷயமறிந்த போலீஸார் சிலரிடம் பேசினோம். “சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையில் அக்கவுண்ட் இல்லாத நபர்கள், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கிட்டத்தட்ட 15 நபர்களின் பெயரில், அவர்களுக்குத் தெரியாமலேயே சண்முகராஜா லோன் போட்டு பணத்தை எடுத்திருக்கிறார்.

கைதான சண்முகராஜா

அப்படி முறைகேடாக வங்கியிலிருந்து எடுத்த பணத்தை வைத்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருக்கிறார். அதில் சுமார் 4 லட்ச ரூபாய் வரை அவருக்கு லாபமும் கிடைத்திருக்கிறது. சண்முகராஜாவின் இந்த லோன் மோசடியும், வங்கியிலிருந்து முறைகேடாக பணம் எடுத்ததும் உயரதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதாவது சண்முகராஜா போலியாக லோன் எடுத்த அக்கவுண்டுகளில் இருந்து, இ.எம்.ஐ கட்டப்படாமல் ஓவர் டியூவில் இருந்திருக்கிறது. இதுகுறித்து உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதை அறிந்த சண்முகராஜா, உடனே புதிதாக 3 வாடிக்கையாளர்கள் பெயரில் மீண்டும் மோசடியாக லோன் எடுத்து, பழைய கடன்களை அடைத்திருக்கிறார். இதெல்லாம் உயரதிகாரிகளின் ஆய்விலும், எங்களுடைய விசாரணையிலும் தெரியவந்தது. இதுகுறித்து சண்முகராஜாவிடம் நாங்கள் விசாரிக்கையில், ``பணத்தை ஷேர் மார்க்கெட்ல போட்டா நிறைய லாபம் கிடைக்கும்னு இப்படி செஞ்சிட்டேன். அதுக்காக பேங்க் பணத்தை எடுத்தது தப்பு தான். டிசம்பர் மாசம் தான் ஷேர் மார்க்கெட்ல போட்ட பணம் திரும்பக் கிடைக்குமுன்னு சொல்லியிருக்காங்க’ என்றார். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சண்முகராஜா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வங்கியிலிருந்து அவர் கையாடல் செய்த பணத்தை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன’ என்றனர்.

 வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களுடைய பெயரில், வங்கி மேலாளர் லட்சக்கணக்கில் லோன் வாங்கி முறைகேடு செய்திருக்கும் இந்த விவகாரம் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/a-bank-manager-who-stole-bank-money-in-the-name-of-customers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக