Ad

ஞாயிறு, 13 நவம்பர், 2022

`இன்னும் 356 காகிதக்கொக்குகள்; உயிர்பிழைக்கலாம்!’- சிறுமி சடாகோவின் உருக வைக்கும் கதை #VisualStory

origami

ஆண்டுதோறும் நவம்பர் 11, தேசிய ஓரிகாமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஓரிகாமி என்றதும் நினைவுகளில் வந்து ஒட்டிக்கொள்கிறாள் சடாகோ சசாகி... தன் உருக்கமான கதையுடன்.  

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு வெடித்தபோது, அந்த நகரத்தில் அப்போது வசித்தவள் சடாகோ சசாகி என்கிற இரண்டு வயது சிறுமி.

குண்டு வெடித்தபோது, எந்தக் காயமும் அவளுக்கு ஏற்படவில்லை. அதன் பிறகு 10 வருடங்கள் கழித்து, தன்னுடைய 12வது வயதில் கழுத்து மற்றும் காதுகளில் வீக்கங்கள் ஏற்பட்டன சடாகோவுக்கு.

அணுகுண்டு வீச்சின் விளைவு, ரத்த புற்றுநோயை அவளுக்குள் ஏற்படுத்தியிருந்தது.    

சடாகோவின் தோழி சிஜுகோ அவளைப் பார்க்க வந்தபோது, ஆயிரம் கொக்குகளை ஒரிகாமி முறையில் செய்து முடித்தால் கடவுள் நினைப்பதை தருவார் என்ற ஜப்பானிய நம்பிக்கையை அவளிடம் கூறிச் சென்றாள். 

ஆயிரம் கொக்குகளை ஒரிகாமி முறையில் செய்து முடித்தால், தான் பிழைத்துவிடுவோம் என்கிற நம்பிக்கை சடாகோவுக்கு ஏற்பட்டது.

சுற்றிலும் இருந்த தாள்கள் எல்லாம் தீர்ந்து போனபின்னும், மருந்து தாள்களில் கூட கொக்குகளை உருவாக்கி வந்தாள் சடாகோ. 

644 ஓரிகாமி கொக்குகளை தன் கைப்படவே செய்து வைத்திருந்தாள். இன்னும் 356 கொக்குகள் மட்டுமே செய்து முடிக்க வேண்டும்.

ஆனால் அவளின் நிலைமை மோசமானது. இடது கால் வீங்கி ஊதா நிறத்தில் மாறியது. டீயில் அரிசி சேர்த்துச் சாப்பிட்டுவிட்டு `நன்றாக  இருக்கிறது’ என அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு கண்களை மூடினாள். 

சடாகோவின் உயிர், அக்டோபர் 25-ம் தேதி காலை, 1955-ம் ஆண்டு பிரிந்தது. மீதமுள்ள கொக்குகளைச் செய்து அவளின் நண்பர்கள் சடாகோவுக்கு பிரியா விடை கொடுத்தார்கள்.

ஹிரோஷிமா அமைதி நினைவுப்பூங்காவில் அவளின் சிலைக்குக் கீழே  நெஞ்சை உருக்கும் வாசகம் ஒன்று உண்டு. ``உலகில் அமைதி வேண்டும். இதுவே எங்களின் பிரார்த்தனை. இதுவே எங்களின் கதறல்!" 

ஆண்டுதோறும் அவளின் நினைவிடத்தில் அணுகுண்டு வீசப்பட்ட தினத்தன்று கூடி ஆயிரம் கொக்குகளைச் செய்து பறக்கவிடுகிறார்கள் மக்கள்.



source https://www.vikatan.com/ampstories/government-and-politics/the-story-of-sadako-sasaki-visual-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக