தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியைச் சேர்ந்த சிறுவன் சாக்லேட் சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் சிங்க் என்ற 9 வயதுச் சிறுவன், ஷர்தா உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். அவன் தந்தை ஆஸ்திரேலியாவில் இருந்து சாக்லேட்கள் வாங்கி வந்துள்ளார். தினமும் இந்த சாக்லேட்களை பள்ளிக்கு எடுத்துச் சென்று சாப்பிட்டு வந்திருக்கிறான் சிறுவன்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று காலை சுமார் 10 மணியளவில் சிறுவன் சாக்லேட் சாப்பிட்ட நிலையில், திடீரென தொண்டையில் சாக்லேட் வசமாகச் சிக்கியுள்ளது. விழுங்க முடியாமல் நீண்ட நேரமாக சிறுவன் திணறி வந்துள்ளான்.
உடனடியாகப் பள்ளி நிர்வாகம் சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, வாரங்கல் பகுதியில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்குச் சிறுவனை விரைந்து அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சாக்லேட் சாப்பிட்ட சிறுவனின் தொண்டையில் அது எதிர்பாராதவிதமாக சிக்கி, சிறுவன் மூச்சுத் திணறி இறந்த சம்பவம், மாநிலம் தாண்டியும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் இறந்த நிலையில் இதுவரை குடும்பத்தினர் தரப்பில் இருந்து, எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் குழந்தைகளுக்கு உணவுப் பொருள்களை சாப்பிடக் கொடுக்கும்போது, தொண்டையில் சிக்காத வகையில் அதை சிறு துண்டுகளாக்கிக் கொடுப்பது நல்லது. அதோடு உணவுகளை அப்படியே விழுங்காமல், நன்றாக மென்று திண்ணும் பழக்கத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
source https://www.vikatan.com/health/kids/a-9-year-old-boy-died-after-choking-on-chocolate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக