Ad

புதன், 16 நவம்பர், 2022

திருக்கார்த்திகை, சோமவார பிரதோஷம், வாஸ்துநாள் - வாழ்வில் வளம் சேர்க்கும் கார்த்திகை மாத விசேஷங்கள்!

கார்த்திகை மாதம் ஆன்மிக சிறப்புகள் நிறைந்த மாதம். மாதங்களில் நான் மார்கழி என்கிறார் விஷ்ணுபகவான். கார்த்திகையோ சிவ வழிபாட்டுக்கு உகந்த மாதம். கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகள் அனைத்துத்திலும் நடைபெறும் சிவவழிபாடும் சங்காபிஷேகங்களும் மிகவும் விசேஷம். அதேபோன்று சோழிங்கர் நரசிம்மப் பெருமான் கண் திறக்கும் மாதம் கார்த்திகை. அந்த மாதத்தில் நரசிம்மரை வழிபாடு செய்தால் சகல தொல்லைகளும் நீங்கி வழிபாட்டுக்கு உதவும் என்பது நம்பிக்கை.

கார்த்திகையில்தான் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். முருகப்பெருமானை வழிபடவும் கார்த்திகை மிகவும் ஏற்ற மாதம். கார்த்திகை மாதத்தில்தான் துளசி மாதா அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே கார்த்திகை வெள்ளிக்கிழமைகளில் செய்யப்படும் துளசி வழிபாடும் முக்கியமானது. இத்தனை சிறப்புகள் மிக்க இந்தக் கார்த்திகை மாதத்தில் இந்த ஆண்டு வரும் விழாக்கள் மற்றும் விசேஷங்களை அறிந்துகொள்வோம்.

நந்தி

20.11.22 & 4.12.22 - சர்வ ஏகாதசி

பெருமாளை வழிபட உகந்த திதி ஏகாதசி. இந்த மாதம் நவம்பர் 20-ம் தேதி வரும் ஏகாதசி, 'உத்பன்ன ஏகாதசி' என்று போற்றப்படுகிறது. அதேபோன்று டிசம்பர் 4-ம் தேதி வரும் ஏகாதசி, 'மோக்‌ஷதா ஏகாதசி' என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் பெருமாளை வழிபடுவதன் மூலம் அவர் அருளைப் பெறுவதோடு சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்கின்றன ஞானநூல்கள்.

21.11.22 & 5.12.22 சகல வரங்களும் தரும் சோமவார பிரதோஷம்

சோமன் என்றால் சந்திரன். சந்திரனுக்குரிய தினம் திங்கட்கிழமை. பொதுவாகவே திங்கட்கிழமைகள் சிவ வழிபாட்டுக்கு உரியவை. சிவபெருமானுக்கு சந்திரமௌலீஸ்வரர் என்கிற திருநாமமும் உண்டு. பிறைசூடிய பெரியோனாக சிவபெருமானை வணங்கினால் மனதில் இருக்கும் துன்பங்கள் எல்லாம் விலகும். வாழ்வில் அமைதி உண்டாகும். அதுவும் கார்த்திகை மாதத் திங்கட்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அப்படிப்பட்ட திங்கட்கிழமைகளோடு பிரதோஷமும் சேர்ந்துவரும் என்றால் அதன் மகிமை அளவிடுவதற்கு அரியது. சோமவார பிரதோஷ தினத்தில் செய்யும் நந்தி வழிபாடும் சிவ வழிபாடும் சகல செல்வங்களையும் பெற்றுத்தரும். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் இரண்டு சோமவாரப் பிரதோஷங்கள் வருகின்றன. இந்த நாள்களில் தவறாமல் சிவவழிபாடு செய்து சகல வளங்களையும் பெறுவோம்.

23.11.22 அமாவாசை

முன்னோரை வழிபட உகந்த தினம் அமாவாசை திதி. கார்த்திகை அமாவசை மிகவும் சிறப்புவாய்ந்தது. கார்த்திகை அமாவாசை தினத்தில்தான் தன் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கையைப் பொங்கச் செய்தார் ஶ்ரீதர அய்யாவாள். இன்று திருவிசநல்லூரில் ஶ்ரீதர அய்யாவாள் வீட்டில் கார்த்திகை அமாவாசை தினத்தில் கிணற்று நீர் பொங்கும் அற்புதம் நடைபெறுகிறது. இத்தகைய சிறப்புகளை உடைய கார்த்திகை அமாவாசை தினத்தில் நம் முன்னோரை வழிபாடு செய்து நலங்களைப் பெறலாம்.

24.11.22 வாஸ்து நாள்

இந்த ஆண்டின் கடைசி வாஸ்துநாள் 24.11.22. இந்த நாளில் பகல் 11.29 முதல் 12.05 வரை வாஸ்துபூஜை செய்ய ஏற்ற நேரம். அவரவர் தங்களின் ஜோதிடர்களைக் கலந்தாலோசித்து பூமிபூஜை முதலான காரியங்களைத் தொடங்கலாம்.

'இங்கேயே வருவாள் கங்கை!' திருவிசநல்லூர் சிவபெருமானின் அருளாடல்

27.11.22 & 11.12.22 - சதுர்த்தி விரதம்

விநாயகப்பெருமானை வழிபட உகந்த திதி சதுர்த்தி. இந்த நாளில் காலைவேளையில் விநாயகப்பெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்தக் கார்த்திகை மாதத்தில் 27.11.22 அன்று வளர்பிறை சஷ்டி விரதமும் 11.12.22 அன்று தேய்பிறை சஷ்டி விரதமும் வருகிறது. தேய்பிறை சஷ்டி விரத தினம் சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து மாலையில் விநாயகரை வழிபட்டு சந்திர தரிசனம் செய்தால் நம் துன்பங்கள் எல்லாம் தீரும் என்பார்கள். எனவே தவறவிடக்கூடாத இந்த சதுர்த்தி திஅங்களில் விநாயகரைக் கட்டாயம் வழிபடுவோம்.

5.12.22 - பரணி தீபம்

கார்த்திகை மாதத்தின் சிறப்புகளில் ஒன்று பரணி தீபம். திருவண்னாமலை தீபம் ஏற்றப்படுவதற்கு முன்புவரும் பரணி நட்சத்திர நாளின் அதிகாலையில் அண்ணாமலையார் ஆலயத்தில் ஏறப்படுவது பரணி தீபம். இந்த பரணி தீபத்தை தரிசனம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. நாமும் நம் வீட்டில் இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி நிறைந்த பக்தியோடு நமசிவாய மந்திரம் சொல்லி வழிபட்டால் அதேபலன் கிடைக்கும்.

பரணி தீபம்

6.12.22 - திருக்கார்த்திகை

கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வைக்கும் வழக்கம் நம் மரபில் உள்ளது. திருக்கார்த்திகை அன்று வீட்டின் வாசலில் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபாடு செய்வோம். திருக்கார்த்திகை அன்றுதான் சிவபெருமான் அடிமுடி அறியமுடியாத அண்ணாமலையாக ஜோதி வடிவாக நின்றருளினார் என்கிறது புராணம். எனவே இன்று தீபம் ஏற்றி ஜோதி வடிவில் இறைவனை தரிசனம் செய்து வழிபட்டால் நம் மன இருள் அகலும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு 6.12.22 அன்று திருக்கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் நம் இல்லத்தில் தீபம் ஏற்றி நம் உள்ளத்தில் ஒளி பெருக்குவோம்.



source https://www.vikatan.com/spiritual/functions/important-festivals-and-occasions-in-karthigai-month

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக