Doctor Vikatan: என் நண்பனுக்கு வயது 38. அவனுக்கு மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அலோபதி மருத்துவரை அணுக வேண்டுமா அல்லது மூலிகை மருத்துவம் பார்ப்பது சரியா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா.
மஞ்சள் காமாலையில் மருத்துவம் சார்ந்தது, அறுவைசிகிச்சை தேவைப்படுவது என இரண்டு வகை உண்டு. மருத்துவம் சார்ந்த மஞ்சள் காமாலை என்பது ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி,டி, இ என எந்த வைரஸ் தொற்றினாலும் வரலாம்.
மஞ்சள் காமாலை என்பது பெரும்பாலும் தானாகவே குணமாகிவிடும். ஆனாலும் பலரும் அதற்கு மூலிகை மருத்துவம்தான் உதவுவதாக நம்புகிறார்கள். ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு மருந்து சாப்பிட்டால் 7 நாள்களில் சரியாகும், மருந்து எடுத்துக்கொள்ளாவிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும் என்று நகைச்சுவையாகச் சொல்வதுதான் மஞ்சள் காமாலை விஷயத்துக்கும் பொருந்தும்.
இது எல்லாவகையான மஞ்சள் காமாலைக்கும் பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புற்றுநோய் காரணமாக வரும் மஞ்சள் காமாலையை இப்படி அதுவாக குணமாகும் என்று அலட்சியப்படுத்த முடியாது. அந்த வகை மஞ்சள் காமாலை அறிகுறிகளைக் காட்டாது என்பதால் நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவர்களிடம் வருவார்கள்.
எனவே கண்கள் மஞ்சளாக மாறுவது, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது, உடலில் அரிப்பு என மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகளை உணர்ந்ததும் மருத்துவரை அணுகுவதுதான் சரி. அவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, பாதிப்பின் தீவிரத்தை ஆராய்ந்து, சிகிச்சை தேவையா இல்லையா என்று முடிவு செய்வார். ஒருவேளை நோய் பாதிப்பு தீவிரமாக இருந்தால் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-does-herbal-medicine-work-for-jaundice
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக