Ad

வெள்ளி, 18 நவம்பர், 2022

Doctor Vikatan: காலங்காலமாக ஒரே சோப், ஷாம்பூ, காஸ்மெட்டிக்ஸ் உபயோகிப்பது சரியா?

Doctor Vikatan: சிலருக்கு குறிப்பிட்ட சோப், ஷாம்பூ, காஸ்மெட்டிக்ஸ் என எல்லாமே செட் ஆகிவிடும். பல வருடங்களாக அவற்றையே உபயோகிப்பார்கள். சோப், பவுடர் உள்ளிட்ட காஸ்மெட்டிக்ஸ் என எல்லாவற்றையும் வருடக் கணக்கில் மாற்றாமல் உபயோகிப்பது சரியா அல்லது அவ்வப்போது அவற்றை மாற்ற வேண்டுமா? மாற்ற வேண்டும் என்றால் எத்தனை மாதங்களுக்கொரு முறை மாற்றலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

நாம் நம் சருமத்துக்கு உபயோகிக்கும் பொருள்களானது, பல விஷயங்களைப் பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டியது. அந்த வகையில் முதலில் கவனிக்கப்பட வேண்டியது, ஒருவருடைய சருமத்தின் தன்மை. சிலருக்கு சருமத்தில் செபேஷியஸ் சுரப்பிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கலாம். அதன் விளைவாக அவர்களுடைய சருமம் எண்ணெய்ப்பசை தன்மை கொண்டதாக இருக்கலாம்.

சிலருக்கு, T zone எனப்படும் மூக்கு மற்றும் நெற்றிப் பகுதியில் மட்டும் எண்ணெய்ப்பசை இருக்கலாம். இன்னும் சிலருக்கு வறண்ட சருமம் இருக்கலாம். வேறு சிலருக்கு சருமம் சென்சிட்டிவ்வாக இருக்கலாம். அவர்களுக்கு சூரிய வெளிச்சம் பட்டாலே சருமம் சிவந்து போகும். இன்னும் சிலருக்கு சாதாரண சருமம் இருக்கலாம். இப்படி சருமத்தின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்கான அழகு சாதனங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

அடுத்து கவனிக்க வேண்டியது அந்த நபரின் வயது. மிக இள வயது என்றால் மைல்டான அழகு சாதனங்கள் போதுமானவையாக இருக்கும். சிறுவயதில் செபேஷியஸ் சுரப்பிகள் அந்த அளவுக்கு ஆக்டிவ்வாக இருக்காது என்பதால் மைல்டான அழகு சாதனங்களே போதுமானவையாக இருக்கும்.

அதுவே அவர்கள் டீன் ஏஜில் அடி எடுத்து வைத்ததும் செபேஷியஸ் சுரப்பிகள் ஆக்டிவ்வாக வேலை செய்யத் தொடங்கும். அதன் விளைவாக அவர்களுக்கு ப்ளாக் ஹிட்ஸ் , வொயிட் ஹெட்ஸ் மற்றும் பருக்கள் போன்றவை உருவாகத் தொடங்கும். எண்ணெய்ப்பசை சருமம் இருப்பதாக உணர்ந்தால் குழந்தைகளுக்கு உபயோகிக்கும் அழகு சாதனங்களை உபயோகிப்பதைத் தவிர்த்து வேறு வகைக்கு மாற வேண்டும்.

shampoo

க்ரீம்களைப் போலவே தலைமுடிக்கு உபயோகிக்கும் ஷாம்பூவையும் அவர்கள் மாற்ற வேண்டி இருக்கும். பொடுகுத்தொல்லை இருப்பதாக உணர்ந்தால் அதற்கேற்ற பிரத்யேக ஷாம்பூ உபயோகிக்க வேண்டும். வயதாக ஆக ஆக ஒருவரின் சருமம் அதிக வறட்சி அடையும். எனவே அவர்கள் மாய்ஸ்ஸரைசிங் தன்மையுள்ள அழகு சாதனங்களை உபயோகிக்க வேண்டி இருக்கும்.

மூன்றாவதாக கவனிக்க வேண்டிய விஷயம் தட்பவெப்ப நிலை. மாறும் தட்பவெப்ப நிலைக்கேற்ப அழகு சாதனங்கள் மாற்றப்பட வேண்டும். உதாரணத்துக்கு குளிர்காலத்தில் சருமம் அதிக வறட்சி அடையும். அந்த நாள்களில் அவர்கள் சருமத்தை வறட்சி அடையச் செய்யாத அழகு சாதனங்களைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். குளிர்காலத்தில் இயல்பாகவே நாம் வெந்நீரில் குளிக்கவே விரும்புவோம். இப்படிக் குளிப்பதால் சருமம் இன்னும் வறட்சியடையும்.அந்த வறட்சியையும் சரியாக்கும் வகையிலான அழகு சாதனங்களாகத் தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும்.

அதுவே கோடைக்காலம் என்றால், சருமத்தில் எண்ணெய்ச்சுரப்பு அதிகரிக்கும். அந்த நிலையில் கோடையின் தாக்கத்திலிருந்து சருமத்தைக் காக்கும் அழகு சாதனங்களுக்கு மாற வேண்டும். அடுத்தபடியாக சூழல் மாசுக்கு ஏற்ப அழகு சாதனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஒருவர் அதிகபட்ச தூசு மற்றும் சூழல் மாசுக்கு உள்ளாகும் வாழ்க்கை முறையில் இருந்தால் அவற்றின் தாக்கத்திலிருந்து சருமத்தைக் காக்கும் பிரத்யேக அழகு சாதனங்களை உபயோகிக்க வேண்டும். இவர்களுக்கு சருமம் அதிக வறட்சி அடைய வாய்ப்பு உள்ளதால் தரமான மாய்ஸ்ஸரைசர் உபயோகிக்க வேண்டும். கூடியவரை வாசனை சேர்க்காத அழகு சாதனங்களை உபயோகிப்பது சிறந்தது.

சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் சந்தனம் மற்றும் மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் அழகு சாதனங்களை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உள்ளவர்கள் அடிக்கடி கூந்தலை அலச வேண்டியது முக்கியம். வியர்வை மற்றும் பிசுபிசுப்பிலிருந்து கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்கும் மைல்டான ஷாம்பூ மற்றும் பாடி வாஷ் போன்றவற்றை உபயோகிக்கலாம்.

சோப்

ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்பவும் அழகு சாதனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். உதாரணத்துக்கு பீரியட்ஸ் தொடங்குவதற்கு முன்பு சருமம் அதிக எண்ணெய்ப்பசையுடன் காணப்படும். அதற்கேற்ப அழகு சாதனங்களை உபயோகிக்க வேண்டும். கடைசியாக ஸ்ட்ரெஸ் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாவோர், சரும மருத்துவரின் ஆலோசனையுடன் அதற்கேற்ற சரியான அழகு சாதனங்களைத் தேர்வு செய்து உபயோகிக்க வேண்டியதும் அவசியம் ஆகிறது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-is-it-okay-to-use-the-same-soap-shampoo-cosmetics-for-again-and-again

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக