Ad

திங்கள், 21 நவம்பர், 2022

பிக் பாஸ் 6 நாள் 43: `வெளில அனுப்பிடுங்க பிக் பாஸ்!' நேற்றும் புலம்பிய தனலஷ்மி; தலைவரான மைனா!

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி / அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி / கொண்டு வந்தான் ஒரு தோண்டி / மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’ என்று ஒரு சித்தர் பாடல் உண்டு. (எழுதியவர்: கடுவெளிச்சித்தர்).
தனலஷ்மி

‘தலைவர் பதவிக்கு போட்டி’ என்பதை அறிந்த மறுகணமே தன்னை தலைவியாக தனலஷ்மி கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது. ‘அவ சந்திரமுகியாகவே தன்னை நெனக்க ஆரம்பிச்சிட்டா’ என்கிற வசனம் மாதிரி அது பற்றியே பல பகல் கற்பனைகள். ‘நான் கேப்டன் ஆயிட்டா.. என்னென்னலாம் செய்வேன் தெரியுமா?’ என்று முன்பே திட்டமிட ஆரம்பித்தார்.

‘அது நிகழவில்லை’ என்பதை அறிந்த மறுகணமே தனலஷ்மியின் மனம் பேதலித்து விட்டது. அந்த உண்மையை அவரது மனம் மூர்க்கமாக ஏற்க மறுத்து விட்டது. விளைவு, ‘மாத்தேன்.. போ...’ என்பது மாதிரி ஒரு பிடிவாதக் குழந்தையின் அத்தனை செயல்களையும் செய்தார்.

தங்களுடைய உணர்வுகளை கண்ணாடி மாதிரி அப்படியே வெளிப்படுத்தி விடும் தனலஷ்மியைப் போன்றவர்களைக் கையாள்வது எளிது. சற்று பொறுமையும் சகிப்புத்தன்மையும்தான் வேண்டும். மாறாக, முதுகிற்குப் பின்னால் கடப்பாறையை ஒளித்து வைத்துக் கொண்டு புன்னகைப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள்.

நாள் 43-ல் நடந்தது என்ன?

‘மன மன மன மெண்டல் மனதில்’ என்கிற ரகளையான ரஹ்மான் பாடலுடன் பொழுது விடிந்தது. அமுதவாணனை அமர வைத்து ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் ராம். தான் சிறப்பாக விளையாடவில்லையென்றாலும், மற்றவர்களுக்கு புத்தி சொல்வதில் ராம் சமயங்களில் சிறப்பாக செயல்படுகிறார்.

“பாட்டு விஷயத்துல ஜனனிதான் மத்தவங்க கிட்ட போய் கேட்டுட்டு இருந்தா. என்னை ‘க்ரூப்பிஸம்’ன்னு அவ சொல்றா.. நான் எந்த க்ரூப்புல இருக்கேன்?! நீ மத்தவங்களைப் பத்தில்லாம் ரொம்ப யோசிக்காத. ஏழாவது வாரத்துல இருக்கோம். டாஸ்க்லாம் பயங்கரமா இருக்கும். வந்த வேலைல ஃபோகஸ் பண்ணு” என்று அமுதுவிற்கு ராம் சொன்ன அட்வைஸ் நன்று.

சந்திரமுகியாகவே மாறி விட்ட தனலஷ்மி

தலைவர் போட்டிக்கான நாள். ‘ஏற்கெனவே மனதில் தலைவராக பதவி ஏற்று விட்ட’ தனலஷ்மி, அந்த விழாவிற்கான கற்பனைகளில் இருந்தார். இருந்தாலும் ‘ரெண்டு விரல்ல ஒண்ணு தொடு’ என்று மற்றவர்களிடம் கேட்டு ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தார். ‘நீ தலைவி இல்ல.. தலைவலி’ என்பது ராபர்ட் அடித்த ஜாலியான கமெண்ட்.

“ரச்சிதாவ கிச்சன் டீம்ல இருந்து தூக்கிடுவேன். ராம் வெசல் வாஷிங்லேயே இருக்கான். அதை மாத்தணும். அசிம், ஏடிகே, விக்ரமன் மூணு பேரும் பாத்திரம் கழுவும் டீம்ல போடணும்.. நான் நேத்தே முடிவு பண்ணிட்டேன்..’ என்று அப்போதே அமைச்சர் பொறுப்புகளை பிரித்துத் தரும் முதலமைச்சராக தன்னை கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார் தனலஷ்மி. இதற்கான ஆலோசனைகளை ஜனனியும் அமுதவாணனும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மினி கால்பந்து டாஸ்க்

தலைவர் போட்டிக்கான விதிகள் சொல்லப்பட்டன. மினி கால்பந்து மாதிரியான போட்டி. தலைவர் போட்டியில் பங்குபெறும் கதிரவன், மைனா, தனலஷ்மி ஆகிய மூவரும் கோல் கீப்பர்களாக இருப்பார்கள். ஒவ்வொருவரும் தலா இரண்டு ஆதரவாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவர்கள்தான் களத்தில் ஆடி கோல் போடுவார்கள்.

அசிம் மற்றும் விக்ரமனை கதிரவன் தேர்ந்தெடுத்தார். அமுதவாணன் மற்றும் மணிகண்டனை தனம் தேர்ந்தெடுத்தார். ஆயிஷா மற்றும் ராம் என்பது மைனாவின் சாய்ஸ். பந்தை தரையில் வைத்த அடுத்த கணமே அதை ஆடத் துவங்கும் வகையில் ஆவேசமாக இருந்தார் மணிகண்டன். இதனால் முதல் கோலை அவர் அடித்தார். கதிரவன் வெளியேறினார். தனலஷ்மிக்கு உற்சாகம் தாங்கவில்லை. அவரது கனவு.. இதோ.. இதோ.. நிறைவேறப் போகிறது.

நொறுங்கிப் போன தனலஷ்மியின் கனவு

அடுத்த சுற்றில் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை ஒன்றாக குறைத்தார் பிக் பாஸ். மணிகண்டன் அடித்த பந்து வேகமாகப் பட்டதில் மைனா தடுமாறி கீழே விழுந்தார். ஏறத்தாழ அதே நேரத்தில் பந்தை தனலஷ்மியின் பக்கம் தள்ளி கோல் ஆக்கினார் ராம். இதனால் மைனா தலைவர் ஆவார் என்று தெரிந்தது.

தலைவர் கனவு மாளிகை தன் கண் எதிரேயே தூள் தூளாக நொறுங்கிப் போனதை தனலஷ்மியால் ஏற்கவே முடியவில்லை. எனவே, அழப்போகும் சினிமா ஹீரோயின்கள் வேகமாக ஓடிச் சென்று படுக்கையில் சரியாக விழுவதைப் போல, வேகமாக ஓடிச் சென்று படுக்கையில் படுத்து ‘என்னை வெளில அனுப்பிடுங்க பிக் பாஸ்’ என்கிற புராணத்தை நூற்று பதினெட்டாவது தடவையாக மறுபடியும் ஆரம்பித்து விட்டார். ‘வெளில அனுப்பிடுங்க’ என்கிற இந்தப் புலம்பல் இந்த சீசனில்தான் அதிகமாக ஒலித்திருக்கும் போல.

மைனா

ரச்சிதா அறிவித்த முடிவை ஏற்றுக் கொண்ட பிக் பாஸ், ‘மைனா இந்த வாரத்தின் தலைவர்’ என்று அறிவித்தவுடன் தனலஷ்மியின் உக்கிரம் இன்னமும் கூடிற்று. கண்ணீரும் கம்பலையுமாக புலம்பிக் கொண்டே இருந்தார். ‘மைனா கீழே விழுந்ததால் ராம் கோல் அடித்திருக்கக்கூடாது’ என்பது அவரின் எதிர்பார்ப்பு. தனலஷ்மி எதிர்பார்ப்பது போங்காட்டம். எதிர் தரப்பு கோல் கீப்பர் கீழே விழுந்தால், கோல் அடிக்கும் வாய்ப்பை ஒருவர் தவற விடுவாரா என்ன?!

‘போன முறை தள்ளி விட்டுத் தலைவியான மைனா, இந்த முறை தானே விழுந்து தலைவியாகி விட்டார்’ என்கிற கிண்டல்கள் எழ, மைனாவின் பதவியேற்பு விழா நடந்தது. ‘அணிகளை நீங்களே முடிவு செய்து அறிவியுங்கள்’ என்று கறாராக சொல்லி தனலஷ்மியின் கோபத்தில் பெட்ரோலை ஊற்றினார் பிக் பாஸ். (என்னா மனுஷன்?!).

தனலஷ்மியின் தலைவர் அட்ராசிட்டி

‘நான் முதல் அமைச்சரானால்’ என்கிற கட்டுரையை பத்து பக்கத்திற்கு எழுதி வைத்து தனது அமைச்சரவையை எப்படியெல்லாம் விரிவுபடுத்தி அழகு பார்க்கலாம், எதிரிகளின் கொட்டத்தை அழிக்கலாம்’ என்கிற கற்பனையில் இருந்த தனலஷ்மிக்கு பேரிடியாக அமையவே ‘அணி பிரிப்பிற்கு நான் வரமாட்டேன்.. மைனாவை தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது. நான் வெளில போறேன்..’ என்றெல்லாம் அழுது அழிச்சாட்டியம் செய்தார். இது மட்டுமல்லாமல், தன்னிடம் சமாதானம் சொல்ல வந்தவர்களையும் ‘நீங்க பேசாதீங்க. போங்க..’ என்று எரிந்து விழுந்தார். குறிப்பாக ரச்சிதாவைப் பார்த்ததும் கொலைவெறி அடைந்தார். ஆயிஷாவால் மட்டுமே நெருங்கி சில வார்த்தைகளை துணிச்சலாக சொல்ல முடிந்தது.

தனலஷ்மி, ஆயிஷா

தனலஷ்மியின் அட்ராசிட்டி அதிகமாக இருந்தாலும் ஏறத்தாழ அனைவருமே அவரை பொறுமையாக கையாண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சரியான அறிவுரையை முன்வைத்த ஷிவின், விக்கிரமன் போன்றவர்களையும் துரத்தியடித்தார் தனலஷ்மி.

கடந்த வாரங்களில் அணி பிரிக்கப்பட்டதில் நிறைய ‘பாலிட்டிக்ஸ்’ இருந்தது என்பது தனலஷ்மியின் கருத்து. மேலும் கிச்சன் டீமைத்தவிர, இதர டீம்களுக்குத்தான் ‘Worst Performer’ தண்டனை கிடைக்கிறது என்பதும் அவர் அபிப்ராயம். எனவே இந்த வாரத்தில் கிச்சன் டீமை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது. தனலஷ்மியின் கருத்துக்கள் சரியோ அல்லது கற்பனையோ, ஆனால் இதையேல்லாம் அவர் போராடி, வாதிட்டுத்தான் நிரூபிக்க முடியும். அழுது, ஆர்ப்பாட்டம் செய்தல்ல.

மைனாவின் பெருந்தன்மை

‘எதிர் அணியினர் ஏற்கெனவே இந்த வாரத்திற்கான அணிகளை தீர்மானித்து விட்டனர்’ என்கிற நினைப்பும் தனலஷ்மியின் கோபத்திற்கு காரணம். தலைவியாவதற்கு முன்னாலேயே இவர் பல யோசனைகளைச் செய்தது போல், மற்றவர்களும் அதைச் செய்ய மாட்டார்களா என்ன?!

மைனா அழைத்தும் வராத தனலஷ்மி, பிறகு ஆயிஷா உள்ளிட்டவர்கள் வருந்தி வருந்தி அழைத்ததால் ‘உங்களுக்காக வரேன்’ என்று வெட்டி வீறாப்புடன் வெளியில் வந்தார். கிச்சன் டீமில் ரச்சிதாவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் ஆத்திரம் கொண்டு மீண்டும் புயலென வீட்டிற்குள் புகுந்தார். வேறென்ன? அதே படுக்கை. அதே புலம்பல். ‘என்னை வெளில அனுப்பிடுங்க’ என்கிற கதறல். (முடியலை... மக்களே..!).

ரச்சிதா

‘ரச்சிதா கிச்சன் டீம்ல மறுபடியும் வந்ததுதான் தனலஷ்மியின் கோபம்’ என்கிற ரகசியத்தை மைனாவின் காதில் சொன்னார் ஆயிஷா. எனவே விக்ரமனை தூக்கி விட்டு அதில் அமுதவாணனை இணைத்தார் மைனா. ஆனால் ரச்சிதாவை நீக்கவில்லை. (தலைவர் கெத்தை காண்பிக்க வேண்டாமா?!). தனலஷ்மியின் சிறுபிள்ளைத்தனமான செய்கையைப் பற்றி மக்கள் ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்தச் சமயத்தில் மைனா செய்த காரியம் பாராட்டத்தக்கது. பெருந்தன்மை கொண்டது. தனலஷ்மியை நெருங்கி அவரை கட்டியணைத்து ஆறுதல் சொன்ன விதத்திற்கு பெயர்தான் ‘ஸ்போர்டிவ்னஸ்’. தனலஷ்மி அத்தனை அழிச்சாட்டியம் செய்தாலும், ஒரு பிடிவாதக் குழந்தையை சமாதானப்படுத்தும் தாயின் நிலைக்குச் சென்றார் மைனா. (ஆனால் பிடிவாதக் குழந்தைகளை ஊக்குவிக்கக் கூடாது என்பதும் ஒரு பாடம்!).

தனலஷ்மியின் அழுகைப் போராட்டம் முடிந்த கையோடு, அடுத்த அதிர்ச்சியைத் தந்தார் பிக் பாஸ். இந்த சீசனின் முதல் Open Nomination. மக்கள் திகைத்துப் போய் வாய் பிளந்தார்கள். குறிப்பாக இது போன்ற சமயங்களில் ஆயிஷா வெளிப்படுத்தும் எக்ஸ்பிரஷன்களையெல்லாம் தொகுத்தால், ஒரு கார்ட்டூன் வீடியோ பார்த்த திருப்தி ஏற்படும்.

இந்த சீசனின் முதல் OPEN NOMINATION

‘விளையாட்டில் மணிகண்டன் காட்டும் ஆவேசம் அச்சம் தருகிறது. அவர் ஒரு ஸ்ட்ராங் பிளேயர்’, ‘ஆரம்ப வாரங்களில் காமெடியாகத் திரிந்த அமுதவாணன் இப்போதெல்லாம் சீரியசாகி விட்டார்’, ‘தனலஷ்மிக்கு மரியாதை தெரியவில்லை’, ‘அசிம் நட்பை உடைத்து விட்டார்’ ‘ராபர்ட் மாஸ்டர் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறார்’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டு நாமினேஷன் முத்திரைகள் விழுந்தன. ராபர்ட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஒருபக்கம் இருக்கட்டும். ‘அவர் எப்போது விளையாடினார்?! என்பது ஆதாரமான சந்தேகம்.

ஆயிஷா, மணிகண்டன், தனலஷ்மி, ராபர்ட்

நாமினேஷன் முடிவுகள்: தனலஷ்மி, அசிம், ராம், மணிகண்டன், அமுதவாணன், கதிரவன் மற்றும் ராபர்ட்.

அமுதவாணன், ஏடிகே, விக்ரமன் ஆகிய மூவரும் அமர்ந்து ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘ஜனனியுடன் தனக்கு கூட்டணி இல்லை’ என்பதை நிரூபிக்க அமுதவாணன் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்க பாவமாக இருக்கிறது. “நீ இலங்கைல இருந்து வந்திருக்கே.. நீ விளையாடறது அவங்களுக்கு பிடிக்கலைன்னு சொன்னீங்க. எனக்கு நல்லா கேட்டுச்சு. எதை வெச்சு அதை சொன்னீங்க?” என்று அமுதவாணனிடம் சந்கேத்தை தெளிவுப்படுத்திக் கொண்டிருந்தார் விக்ரமன். “கடந்த வாரத்துல யாரோ சொன்னாங்க. ஜனனிக்கு வாக்கு வங்கி இருக்கறதால அவளைப் பயன்படுத்திக்கறாங்கன்னு சொன்னாங்க” என்பது அமுதவாணனின் விளக்கம்.

அமுதவாணன்
ஸ்கிராட்ச் கார்டிற்கான போட்டி நடந்தது. ஸ்நோ பவுலிங் விளையாட்டு. இதில் அமுதவாணன் வெற்றி பெற்றார். ‘ஒரு நாள் முழுவதும் வீட்டு வேலைகளைச் செய்யாமல் இருக்கலாம்’ என்பது அவருக்கு கிடைத்த பரிசு. வீட்டின் விளக்குகள் வழக்கத்திற்கு முன்பாகவே அணைக்கப்பட “என்னதிது.. சீக்கிரம் லைட்டை ஆஃப் பண்ணிட்டாங்க. அப்படின்னா நாளைக்கு டாஸ்க்ல பிக் பாஸ் வெச்சு செய்யப் போறார் போல” என்கிற திகிலான யூகத்துடன் மக்கள் உறங்கச் சென்றார்கள்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-season-6-day-43-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக