Ad

புதன், 1 ஜூன், 2022

சென்னை நகை வியாபாரியிடம் 6 கிலோ தங்க நகை திருட்டு! - தஞ்சாவூர் போலீஸார் விசாரணை

தஞ்சாவூரில் சென்னையை சேர்ந்த நகை வியாபாரி விற்பனை செய்வதற்காக பேக்கில் கொண்டு வந்த சுமார் 6 கிலோ தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமாராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகை திருடு போன கடையில் போலீஸ் விசாரணை

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணி (55). சென்னையில் உள்ள மொத்த நகை வியாபாரியிடம் வேலை செய்து வருகிறார். அவர் கொடுக்கும் நகைகளை ஒவ்வொரு ஊராக எடுத்து சென்று நகை கடைகளில் விற்பனை செய்து வருகிறார். அப்படி வரும் போது தான் கொடுத்த நகைகளை விற்பனை ஆகாமல் இருந்தால் அதனை திருப்பி பெற்று கொள்வதும், விற்பனை ஆன நகைகளுக்கு பணத்தை வசூல் செய்து தன் உரிமையாளரிடம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு நகைகள் விற்பதற்காக சென்றுள்ளார். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே சென்றவர், அங்கிருந்த பிரபல ஸ்வீட் கடை ஒன்றில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் கொண்டு வந்த பேக்கில் 6 கிலோ தங்க நகை இருந்ததாக சொல்லப்படுகிறது.

தான் ஸ்வீட் சாப்பிட்டு விட்டு தேவையானவற்றை வாங்கி கொண்டு அதற்கான பணத்தை கொடுப்பதற்காக நகை இருந்த பேகை கீழே வைத்து விட்டு பில்லை கொடுத்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து தன் பேக்கை பார்த்துள்ளார். ஆனால் பேக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், `என்னோட பேக் எங்கே அதுல கிலோ கணக்குல தங்க நகையும், பணமும் இருந்துச்சு’ என கத்தியுள்ளார்.

இதனால் அந்த இடமே பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. பின்னர் இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் மணி புகார் அளித்தார். அதில் காணாமல் போன பேக்கில் 5 கிலோ புதிய நகைகள்,1.2 கிலோ உருக்கப்பட்ட நகைகள் மற்றும் ரூ. 14 லட்சம் பணமும் இருந்தது. அதிலிருந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீஸார் நகை இருந்த பேக் திருடு போனது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக கருணாகரன், ஸ்ரீதர், சந்திரா என மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் மேலும் எஸ்.பி-யின் நேரடி கண்காணிப்பில் உள்ள 2 தனிப்படைகள் என மொத்தம் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிப்படை போலீஸ் டீம், ஸ்வீட் கடை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வெள்ளை நிற சட்டை அணிந்துள்ள சுமார் எட்டு பேர் கொண்ட கும்பல் நகை இருந்த பேக்கை எடுத்து செல்வது தெரியவந்துள்ளது. அதை அடிப்படையாக வைத்து கொண்டு பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை

நகை திருட்டில் ஈடுப்பட்டவர்கள் நகை வியாபாரி மணி மொத்தமாக நகை கொண்டு வருவதை அறிந்து கொண்டு அவரை பின் தொடர்ந்து வந்து திருடி சென்றிருக்க வாய்ப்புள்ளதாக கருதும் போலீஸார், குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தஞ்சாவூரில் 6 கிலோ தங்க நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/gold-theft-in-tanjore-from-chennai-man-police-investigating-with-cctv-footages

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக