Ad

சனி, 18 ஜூன், 2022

ஆண்டிபட்டி கனவாய்: அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து; ஓட்டுநர் பலி, 47 பேர் காயம்!

தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளியில் இருந்து மாலை 4 மணியளவில் புறப்பட்ட அரசு பேருந்து ஆண்டிபட்டி வழியாக நாகர்கோவில் நோக்கி சென்றது. இந்தப் பேருந்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். மாலை 6.30 மணியளவில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கனவாய் மலைச்சாலையில் சென்றபோது, எதிரே திருச்செந்தூரில் இருந்து குமுளி நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

விபத்து

இதில் இரண்டு பேருந்துகளின் முன்பக்கமும் முழுவதும் சுக்குநூறாக நொறுங்கியது. பேருந்துக்குள் ஓட்டுநருக்கு பின்னே இருந்த நான்கைந்து இருக்கைகள் உடைந்து சிதறின. இதில் இரு பஸ்களிலும் பயணம் செய்த 47 பயணிகள் காயம் அடைந்தனர். தகவலறிந்த போலீஸார் பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

காயமடைந்த பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருச்செந்தூர் அரசு பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேர் பலத்த காயம் அடைந்ததால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். நிகழ்விடத்திலேயே நாகர்கோவில் அரசு பேருந்து ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல்(50) உயிரிழந்தார்.

பஸ் விபத்து

திருச்செந்தூர் பேருந்து டிரைவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சேரந்தையன்(47), கண்டக்டர் திருச்சுழியைச் சேர்ந்த மதுரைவீரன்(51), நாகர்கோவில் பேருந்து கண்டக்டர் கன்னியாகுமரி மாவட்டம் கோவிலபுரம் மகேஷ்(48), பயணிகள் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரியம்மாள்(51), தேனியைச் சேர்ந்த கணபதி(48) ஆகியோர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

விபத்து

ஆண்டிபட்டி கனவாய் மலைப்பாதையில் தொடர்ந்து விபத்துகள் நடந்தவண்ணம் இருக்கிறது. இந்தப் பாதையைக் கடக்கும் வாகனங்களின் வேகத்தை குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கனவாய் மலைப்பாதையின் இருபுறத்திலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே இப்பகுதியில் நடக்கும் தொடர் விபத்தை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/accident/government-buses-accident-driver-died-47-injured

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக