புதுச்சேரி மாநில பா.ம.க-வின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ``புதுச்சேரியில் முழு பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும். புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் இருந்து மதுக்கடைகளை அகற்ற வேண்டும். சுற்றுலா என்ற பெயரில் கலாசார சீரழிவை தடுக்க வேண்டும். பணியாளர் தேர்வு வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பாரதி, சுதேசி மில், லிங்கா ரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையை மீண்டும் திறந்து, நவீனப்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காரைக்காலில் விவசாயத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”| போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் பேசிய ராமதாஸ், ``புதுச்சேரியில் 8, காரைக்காலில் 2 என 10 எம்.எல்.ஏக்களையும், ஒரு எம்.பியையும் நாம் பெற்றுவிட்டாலே புதுச்சேரியில் ஆட்சியை பிடித்துவிட முடியும். கடந்த காலங்களில் புதுச்சேரியின் நகரம் மற்றும் கிராமங்களில் தெரு தெருவாக, வீடு வீடாகச் சென்று நான் பிரசாரம் செய்துள்ளேன். ஆனாலும் நாம் ஆட்சியைப் பிடிக்கவில்லை. எனது பிரசாரத்தின் பயனை யாரோ அனுபவித்தார்கள். இந்த கூட்டத்தில் நாம் போடும் தீர்மானங்கள் நிறைவேற பா.ம.க-வின் ஆட்சி புதுச்சேரியில் அமைய வேண்டும். அளவிட முடியாத இளைஞர்களின் சக்தியை ஒருங்கிணைத்தால் நம்மால் ஆட்சி அமைக்க முடியும். குறிப்பாக பெண்களிடம் பேசினால் அந்த குடும்பத்தின் அனைத்து வாக்குகளும் நமக்கு கிடைக்கும். தற்போது கட்சி என்றால் அதற்கு கொள்கை ஏதும் தேவையில்லை.
ஒரு கட்சியிலிருந்து சமயம் பார்த்து அடுத்த கட்சிக்கோ அல்லது ஆட்சிக்கு வரும் கட்சிக்கோ மாறி விட வேண்டும் என்பதுதான் கட்சிகளின் கொள்கையாக உள்ளது. ஆனால் பா.ம.கவின் கொள்கை உலக நாடுகளுக்கு வழங்கும் கொள்கையாக உள்ளது. அதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மதுவை விட கொடியது கஞ்சா. அதனை ஒழிக்க தீர்மானம் போட்டால் மட்டும் போதாது. கஞ்சாவை ஒழிக்க மாதம் ஒரு போராட்டத்தை பா.ம.க முன்னெடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்காக போராடத் தயங்காதீர்கள். புதுச்சேரி மாநிலத்தில் பா.ம.க ஆட்சி அமைத்து, பா.ம.கவின் முதல்வர் போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதற்குத்தான். அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, ஜிப்மரை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தற்போது ஜிப்மர் மருத்துவமனை போதிய மருந்துகளின்றி மோசமான நிலையில் உள்ளது. மக்கள் பா.ம.கவை வேறு மாதிரி பார்க்கிறார்கள்.
கொள்கையுடைய கட்சி, சாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் பாடுபடும் ஒரே கட்சி பா.ம.கதான். புதுச்சேரி மாநிலத்தை தனி மாநில அந்தஸ்து பெற்ற சிறந்த மாநிலமாக நாங்கள் உருவாக்குவோம். அதற்கு மக்களின் ஆதரவு தேவை. திரும்ப திரும்ப இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பதால் ஒரு பயனும் இல்லை. மக்கள் அதனை உணர்ந்து பா.ம.கவுக்கு வாக்களிக்க வேண்டும். நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும் நாணயமான, வெகுஜன கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உடைய நல்ல கட்சி பா.ம.க மட்டுமே. அதனை எண்ணி செயல்பட வேண்டும்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/pmk-party-is-the-only-one-that-works-for-the-people-irrespective-of-caste-and-religion-said-by-ramadoss
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக