சென்னை சோழபுரம் ஸ்ரீதர் அவன்யூவை சேர்ந்தவர் பிரதீப்குமார். இவர் சென்னையிலிருந்து தனது குடும்பத்தினர், நண்பர் குடும்பத்தினருடன் மதுரையில் நடந்த காதணி விழாவுக்காக காரில் சென்றுவிட்டு, மீண்டும் சென்னைக்கு இரவு நேரத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பிரதீப் குமார் இரவு இரண்டு மணியளவில் கண் அசந்திருக்கிறார்.
இதனால், கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துவிட்டு செல்வதற்காக அவர்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வல்லாபுரம் பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்திவிட்டு, காற்றுக்காக காரின் கண்ணாடியைக் கொஞ்சமாக இறங்கிவிட்டு காருக்குள் தூங்கியிருக்கிறார்கள்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் காரில் தூங்கிய பெண்களிடம் இருந்து 5 பவுன் நகை, காரின் டேஷ்போர்டில் வைத்திருந்த இரண்டு செல்போன் இருந்த கைப்பை ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக பிரதீப்குமார் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி மர்மநபரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கார்த்தியிடம் பேசினோம். "பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், காரை நிறுத்திவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தவர்களிடம் கைவரிசை காட்டியிருக்கிறார்கள் என்றால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இம்மாவட்டத்தில் கொள்ளையர்களுக்கு போலீஸார் மீது கொஞ்சம் கூட பயம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு யார் காரணம். இம்மாவட்டத்தில் முகமுடி மற்றும் டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை.
கடந்த இரண்டு வாரத்தில் இரண்டு மூன்று கொள்ளைச் சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால், நிம்மதி இழந்து நிற்கிறார்கள். ஊருக்கு வெளியேவும், நகரின் மையப்பகுதியிலும் உள்ள வீடுகளில் `சொந்தக்காரங்க வந்திருக்கிறோம், பக்கத்துல ஒரு விபத்து நடந்துவிட்டது’ என்று சொல்லி கதவைத் தட்டித் திறக்கவைத்து, வீட்டிலுள்ள பெண்களைத் தாக்கி நகைகளைப் பறித்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவமும் அவர்களின் கைவரிசையாக தான் இருக்கமுடியும். எனவே மக்கள் அமைதியாக நிம்மதியாகவும் வாழவேண்டும் என்றால் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது இது சாத்தியம்" என்கிறார்.
source https://www.vikatan.com/news/crime/cell-phone-jewel-theft-in-trichy-chennai-high-way
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக