Ad

செவ்வாய், 28 ஜூன், 2022

கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறும் கிரகமாலிகா யோகம் - ஜூலை 2 - 12 வரை ஜோதிடர்கள் சொல்லும் பலன் என்ன?

ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சிகளைப் போலவே சில யோகங்களும் முக்கியமாகக் கருதப்படுவன. மனித வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரக்கூடிய பல யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று கிரக மாலிகா யோகம்.

‘கிரகம்’ என்றால் நவகிரகங்களைக் குறிக்கும். ‘மாலிகா’ என்றால் ‘மாலை’ என்று பொருள். கிரங்கள் மாலை தொடுப்பதைப் போல வரிசையாக ராசி வீடுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் (அமர்ந்திருந்தால்) அது, ‘கிரகமாலிகா யோகம்’ எனப்படும். அப்படி அபூர்வ நிகழ்வு வரும் ஜூலை மாதம் 2 - ம் தேதி சனிக்கிழமை நிகழ இருக்கிறது. இந்த நாளில் ஆறு கிரகங்கள் ஆட்சி பெற்றும் அதன்பின் ஒன்பது நாள்கள் ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்றும் கிரக மாலிகா யோகம் ஏற்பட இருக்கிறது. இந்த யோகம் குறித்து ஜோதிடர் ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

ஆதித்ய குருஜி

சொந்த வீட்டில் கிரகங்கள் தரும் பலன் என்ன?

“மனிதர்களாகிய நமக்கு எப்படிச் சொந்த வீட்டில் இருந்தால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகாரமும் ஏற்படுமோ அதேபோன்று கிரகங்கள் அவற்றுக்குரிய சொந்த வீட்டில் அமைவது மகிழ்ச்சியான விஷயம். அவை சொந்த வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று அமர்கின்றன. நவ கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே சொந்த வீடு உண்டு. அவற்றில் ஆறு கிரகங்கள் தம் சொந்த வீட்டில் அமைந்திருக்கும் நிலை வரும் நாள்களில் ஏற்பட இருக்கிறது. வானியல் ரீதியாக கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன என்றும் சொல்லலாம். இதைத்தான் ‘கிரகமாலிகா யோகம்’ என்று சொல்கிறார்கள்.

இதில் ஜூலை 2 -ம் தேதி மட்டும் (காலை 9:45 முதல் மறுநாள் 3.7.22 -ம் தேதி காலை 6.30 மணி வரை) ஆறு கிரகங்கள் வரிசையாகத் தத்தமது சொந்த ஆட்சி வீட்டில் அமையப் போகின்றன.

சனி - கும்பத்திலும், குரு - மீனத்திலும் செவ்வாய் - மேஷத்திலும் சுக்கிரன் - ரிஷபத்திலும் புதன் - மிதுனத்திலும் சந்திரன் - கடகத்திலும் என ஆறு கிரகங்களும் ஆட்சி உச்சம் பெற்று அபூர்வ கிரக மாலிகா யோகமாக அமைந்திருக்கிறது. அதன் பின் அடுத்த பத்து நாள்களுக்கு சந்திரன் தவிர்த்து பிற ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று கிரக மாலிகா யோகத்தில் அமைந்திருக்கின்றன.

இத்தகைய யோகத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்தக் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் இந்த யோகம் பிரதிபலிக்கும். அது அந்தக் குழந்தை பிறக்கும் லக்னத்தைப் பொறுத்து யோக ஜாதகமாக மாறும். காரணம் ஒரு ஜாதகத்தில் முக்கியமான ஒரு கிரகமோ அல்லது இரண்டு கிரகமோ உச்சமும் ஆட்சியும் பெற்றிருந்தாலே சிறப்பு என்று சொல்கிற நிலையில் இந்த யோகத்தில் குறைந்த பட்சம் ஐந்து கிரகங்கள் ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருக்கும். அது இந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட லக்னங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் பிரதிபலிக்கும். அவர்கள் வாழ்க்கை மிளிரும். இது ஒரு முக்கியமான அமைப்பு என்று சொல்லலாம். இந்த அற்புதமான காலகட்டத்தில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் அமைய இருக்கின்றன. அதற்கு இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். எல்லோரும் நன்றாக இருப்பீர்கள்” என்று கூறினார் ஆதித்ய குருஜி.

நவகிரகங்கள்

12 ராசிகளுக்கும் இந்த கிரகமாலிகா யோகம் எப்படி ?

அனைத்து ராசிக்காரர்களுக்கும் இந்த கிரகமாலிகா யோகம் நற்பலன் தருமா என்றால் பொதுவாக ராசிக்கட்டங்களின் அமைப்பைப் பார்த்தால் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். நவகிரகங்களும் 12 ராசிக்கட்டங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகளைத் தம் ஆட்சி வீடாகக் கொண்டிருக்கின்றன. பொதுவாக மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளை செவ்வாய் பகவானும், ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளை சுக்கிரபகவானும் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளை புத பகவானும், கடக ராசியை சந்திரபகவானும் சிம்ம ராசியை சூரியபகவானும், தனுசு, மீனம் ராசிகளை குருபகவானும் மகரம், கும்பம் ராசிகளை சனிபகவானும் ஆட்சி செய்கின்றன. இவற்றில் சூரியனைத் தவிர்த்த பிற ஆறு கிரகங்களும் ஆட்சி பலம் பெற்று அமர்கின்றன என்னும்போது பன்னிரெண்டு ராசிக்காரர்களுக்குமே நற்பலன்கள் அதிகரிக்கும். இந்த நாள்களில் சந்திராஷ்டமம் இல்லை என்றால் அந்த ராசிக்காரர் தங்கள் ஜனன கால தசாபுத்திகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் புதிய முயற்சிகளில் துணிந்து இறங்கலாம். அது அற்புதமான பலனைக் கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் பயன் தரும். ஆரோக்கியம் மேன்மையுறும். பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.

புதாதித்ய யோகம் - நற்பலன்கள் பெருக என்ன செய்யலாம்?

சூரியன் மிதுனத்தில் புதனுடன் இணைந்துள்ளார். இதனை ‘புதாதித்யயோகம்’ என்பார்கள். சந்திரனுக்குக் குரு பார்வை. ஆட்சிபலம் பெற்ற செவ்வாயுடன் ராகு இணைந்திருக்கிறார். ஆக, இந்த இரண்டு தினங்களிலும் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் நற்பலன்களைப் பெறலாம். குறிப்பாக சூரிய வழிபாடும் புதபகவானுக்குரிய பெருமாள் வழிபாடும் செய்வது சிறப்பு. ஸ்ரீரங்கநாதர், மதுரை மீனாட்சி, துர்கை, முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும்.

புதன் கிரகம்

இந்த நாள்களில் வீட்டில் தினமும் காலையில் நீராடி விளக்கேற்றி இஷ்டதெய்வத்தை வழிபட்டு ஒரு நைவேத்தியம் செய்து அதன்பிறகு சாப்பிடுவது உத்தமம். இந்த கிரகமாலிகா யோகம் அமைந்திருக்கும் பன்னிரண்டு நாள்களில் ஏதேனும் ஒரு நாள் ஆலய தரிசனம் செய்வதும் இறைவனுக்கு நடைபெறும் அபிஷேகத்துக்கான திரவியங்கள் வாங்கிக்கொடுப்பதும் நல்ல பலன்களை அதிகப்படுத்தும். குறிப்பாக கன்னி, துலாம், மகரம், கும்பம், மேஷம் ஆகிய ராசியைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் செய்வது புண்ணியபலன்களை அதிகரிக்கச் செய்து நற்பலன்கள் உண்டாகும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.



source https://www.vikatan.com/spiritual/astrology/rare-astrology-event-graha-malika-yoga-what-the-astrologers-predicts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக