Ad

வியாழன், 30 ஜூன், 2022

``திராவிட மாடல் என் முகம்... ஒன்றியம் என் குரல்; நான் விளம்பரப் பிரியரா?’’ - ஸ்டாலின் விளக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் புதிய கட்டடத்தை இன்று காலை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு விழாவிலும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘‘பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக நினைப்பதைபோல சிலர் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். ‘ஸ்டாலின் விளம்பரப் பிரியராக இருக்கிறார்’ என்று சொல்கிறார்கள். எனக்கு, எதற்கு விளம்பரம்... 55 ஆண்டுக்காலமாக அரசியலில் இருக்கிறேன். இனிமேலும், எனக்கு விளம்பரம் தேவையா... ‘நாடோடி இனத்தவர் வீட்டுக்குப் போனார். பழங்குடியினர்வீட்டுக்குப் போனார். அங்கேபோய் சாப்பிட்டார்’ என்று வரும் செய்திகளைவைத்து, அவர்கள் சொல்கிறார்கள். அந்தச் சந்திப்புக்குப் பின்னால் எத்தனை நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நாடோடி இனத்தவர் வீட்டுக்கும், பழங்குடியினர் வீட்டுக்கும் சென்றதன் மூலமாக, ‘இது நமது அரசு’ என்பதை அவர்கள் மனதில் ஆழமாக விதைத்திருக்கிறோம். அதுதான் முக்கியமானது. ஏதோ, ஒருநாள் அவர்கள் வீட்டுக்குச் சென்றதன் மூலமாக என்னுடைய கடமை முடிந்துவிட்டது என்று நினைத்து, சும்மா இருந்துவிட்டேனா?

முதலமைச்சர் ஸ்டாலின்

இதே ராணிப்பேட்டையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியின் மூலமாக உங்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றேன். சிலரைப் பேசவைத்தேன். அப்போது, நாடோடி இனப் பெண்கள் சிலர் மேடைக்கு வந்து, ‘நாங்களும் பேசணும்’ என்று கேட்டார்கள். பேசவைத்தோம். அவர்களின் கோரிக்கையை கவனமாகக் கேட்டேன். ஆட்சிக்கு வந்ததும், அதையெல்லாம் மறந்துவிடவில்லை என்பதன் அடையாளமாகத்தான் பல்வேறு திட்டங்களை செய்துகொண்டிருக்கிறோம். இன்றைக்கும் 291 நரிக்குறவ இன மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இருளர் பழங்குடியின மக்களுக்கு அரசினுடைய அனைத்து நலத் திட்டங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. விளிம்புநிலை மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்க்கிறோம்.

இன்றைக்கு நலத்திட்ட உதவிகளைப் பெறக்கூடிய 60,795 நபர்களில் 5,767 பேர் இருளர் இனமக்கள். அதேபோல், திருநங்கைகள் 20 பேருக்கும், 9,522 மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன. 101 மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்புக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு மின்மோட்டாருடன்கூடிய தையல் இயந்திரம் வழங்கி, அவர்கள் மூலமாக குறைந்த விலையில் மஞ்சள் பைகளை தயாரித்து விநியோகிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இந்த அரசாங்கத்தினுடைய ‘இதயம்’ என்பது இத்தகைய விளிம்புநிலை மக்களின் மகிழ்ச்சியில்தான் இருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு ஓர் அடையாள அட்டை கொடுப்பது என்பது பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை உருவாக்குவதற்கு இணையானது. இது, விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது அல்ல. பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் புத்தகப் பைகளில், கடந்த ஆட்சியைப்போல முதலமைச்சரான நான் என்னுடைய படத்தையும் போட்டுக்கொண்டால் விளம்பரம் என்று சொல்லலாம். கடந்த ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் படத்தை அச்சிட்டு தயாரிக்கப்பட்ட பைகள் மிச்சம் இருந்தன. ‘அதைப் பயன்படுத்த வேண்டாம்’ என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் என்னிடம் சொன்னார்கள். அதைப் பயன்படுத்தாமல் போனால், 17 கோடி ரூபாய் அரசுக்கு வீண் இழப்பு ஏற்படும். பணம் வீணாகும். பரவாயில்லை. முன்னாள் முதலமைச்சர்களின் படமே இருக்கட்டும் என்று சொல்லி, அந்தப் பைகளை கொடுக்கச் சொன்னவன்தான் இந்த ஸ்டாலின்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

விளம்பரம் எனக்குத் தேவையில்லை. ஏற்கெனவே கிடைத்த பெருமையையும் புகழையும் காலமெல்லாம் கரையாமல் காப்பாற்றினாலே போதும் என்று நினைப்பவன் நான். ‘திராவிட மாடல்’ என்று சொன்னால் காலமெல்லாம் இந்த ஸ்டாலின் முகம்தான் நினைவுக்கு வரும். ‘இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்’ என்று சொன்னால் போதும், என் குரல்தான் நினைவுக்கு வரும். ‘21 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது யார்?’ என்றால், என் முகம்தான் நினைவுக்கு வரும். ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்பது யார் ஆட்சிக்காலத்தில் அமலானது?’ என்று கேட்டால், அப்போதும் என் முகம்தான் நினைவுக்கு வரும். ‘தமிழ்நாட்டின் அம்பேத்கரான பெரியார், இந்தியாவின் பெரியாரான அம்பேத்கர் ஆகியோரின் பிறந்தநாள்களை சமூகநீதி நாளாகவும், சமுத்துவ நாளாகவும் அறிவித்தது யாரென்றால்?’ என் பெயர்தான் நினைவுக்கு வரும்.

கையில் காசு இல்லை என்றாலும் போகவேண்டிய இடத்துக்கு போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையோடு பேருந்துகளில் ஏறும் பெண்களுக்கு என்னாளும் என் முகம்தான் நினைவுக்கு வரும். ‘நான்’ என்று சொல்வதை தனிப்பட்ட ஸ்டாலின் என்று நினைக்க வேண்டாம். நாம் அனைவரும் சேர்ந்த கூட்டுக் கலவைதான் நான். என்றும் உங்களில் ஒருவன்தான். நமக்கான ஆட்சி இது. இந்த ஆட்சியானது, கடந்த 10 ஆண்டுக்காலமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கக்கூடிய பள்ளங்களை நிரப்பிவருகிறது. துன்பங்களைப் போக்கிவருகிறது. தொய்வைத் துடைத்துவருகிறது. அதேசமயத்தில், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க எந்நாளும் உழைத்துவருகிறது. என் சக்தியை மீறி உங்களுக்காக உழைப்பேன்’’ என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ranipet-government-ceremony-chief-minister-stalins-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக