மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா தலைமைக்கு எதிராக 50 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு ஆதரவாக பிரிந்து சென்றனர். இதில் 40 பேர் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஆவர். அவர்கள் அனைவரும் குஜராத் வழியாக அஸ்ஸாம் அழைத்து செல்லப்பட்டு கவுகாத்தியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை மீண்டும் கட்சிக்கு இழுக்க உத்தவ் தாக்கரே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அவர்களில் 16 பேருக்கு கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று துணை சபாநாயகர் நர்ஹரி நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து துணை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.
ஆனால் அந்த நோட்டீஸ் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று கோரி 16 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஜூலை 12-ம் தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து சட்டமன்றத்தில் 30-ம் தேதி காலை 11 மணிக்கு பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டும் படி உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷாரியா உத்தரவிட்டார். இதை எதிர்த்து சிவசேனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இம்மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், பி.பார்த்திவாலா அடங்கிய அமர்வு, வியாழக்கிழமை சட்டமன்றத்தில் நடக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே சமயம் நம்பிக்கையில்லா தீர்மானம் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஒளரங்காபாத் நகரத்திற்கு சாம்பாஜி நகர் என்றும், ஒஸ்மனாபாத் நகரத்திற்கு தாராசிவ் என்றும் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று அமைச்சர் அனில் பரப் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் உரையாற்றினார்.
அதில், `எனது முதல்வர் பதவி மற்றும் சட்டமேலவை உறுப்பினர் பதவி இரண்டையும் ராஜினாமா செய்கிறேன். நான் எதிர்பாராமல் ஆட்சிக்கு வந்தேன். அதே போன்று ஆட்சியில் இருந்து செல்கிறேன். நான் எங்கேயும் போய்விடவில்லை. இங்குதான் இருக்கிறேன். சிவசேனா பவனில் அமருவேன். எனது ஆட்களை கூட்டுவேன். எனக்கு ஆதரவளித்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பதவியை விட்டு விலகுவதற்காக நான் வருத்தப்படவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை திரும்ப சிவசேனா தொண்டர்கள் அனுமதிக்கவேண்டும். போராட்டம் எதுவும் நடத்தவேண்டாம். சிவசேனா மற்றும் பால் தாக்கரேயால் வளர்ச்சியடைந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கரேயின் மகனை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதற்காக மகிழ்ச்சியடையட்டும்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சூரத் அல்லது கவுகாத்தி செல்லாமல் நேரடியாக என்னிடம் வந்து உங்களது கருத்தை சொல்லி இருக்கலாம். சிவசேனா சாமானிய மக்களின் கட்சி. பல சவால்களை சந்தித்து வெற்றி பெற்றுள்ளது. சிவசேனாவை மீண்டும் புதிதாக உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே ஆளுநர் மாளிகைக்கு சென்று பகத்சிங் கோஷாரியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். உத்தவ் தாக்கரே பதவி விலகி இருப்பதால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக அரசு விரைவில்(நாளை) பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்ஸாமில் தங்கி இருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்றே கோவா வந்துவிட்டனர். அவர்கள் இன்று மும்பை திரும்புகின்றனர். முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
source https://www.vikatan.com/news/politics/supreme-court-refuses-to-ban-no-confidence-motion-uddhav-thackeray-resigns-from-cm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக