Ad

வியாழன், 16 ஜூன், 2022

புதுச்சேரி: ``அரசுக்கு ரூ.700 கோடி இழப்பு!" - மதுபானக் கடை லைசென்ஸ் விவகாரத்தில் அதிமுக தகவல்

புதுச்சேரியில் மதுபானக் கடை லைசென்ஸ் விவகாரத்தில் அரசுக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக, புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் தகவல் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அன்பழகன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மதுபானக் கொள்கையைப் பொறுத்தவரை புதுச்சேரியை ஆட்சிசெய்த அரசுகளும், தற்போது ஆளும் அரசும் சரியான கொள்கை முடிவை எடுக்காததால் மதுபான விற்பனை உரிமை வருவாயில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் அரசுக்கு வரவேண்டிய இந்த வருவாய், இந்தத் தொழிலில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்குச் சென்றுகொண்டிருப்பது உண்மை. ஆனாலும் அதைத் தடுப்பதற்கு அரசு எந்த முயற்சியையும் எடுக்காதது சட்டப்படி குற்றம். புதுச்சேரி மாநிலத்தில் கள்ளுக்கடை மற்றும் சாராயக் கடைகளின் ஏலம் இன்று நடைபெறுகிறது. அரசின் வருவாயைப் பெருக்கவும், தொழிலில் போட்டி உண்டாக்கவும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஏலம்விடப்படுகிறது.

புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன்

ஆனால் மதுபான சில்லறை விற்பனை உரிமங்கள் பரம்பரைச் சொத்துகள்போல் ஆண்டுதோறும் ஒரே நபருக்கு மட்டும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் 381-க்கும் மேற்பட்ட FL2 விற்பனை உரிமங்கள் உள்ளன. அதே போன்று 86 FL1 மொத்த விற்பனை உரிமங்கள் உள்ளன. சுற்றுலா உரிமங்களைத் தவிர அனைத்து உரிமங்களும் 1989-ம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்டவை. அவ்வாறு வழங்கப்பட்ட மதுபான சில்லறை விற்பனை உரிமத்துக்கு ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய், மொத்த மதுபான உரிமத்துக்கு ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் என மிகக் குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலம் காலமாக வாரிசு உரிமை போன்று சுமார் 50 நபர்களே ஒன்றுக்கு மேற்பட்ட கடைகளை நடத்திவருகின்றனர்.

பங்குதாரர்கள் (Partnership) என்ற பெயரில் ஒரு மதுபானக் கடை நான்கைந்து கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆகையால் மதுபானக் கடைகளை ஏலம்விட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகிறோம். ஆனால், எந்த அரசும் இதற்கு செவி சாய்க்கவில்லை. நிதிப் பற்றாக்குறை காரணமாக பாதிப்பட்டிருக்கும் அரசு, சாராயக்கடை, கள்ளுக்கடைகளைப்போல மதுபானக் கடைகளையும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம்விட்டால் 700 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். விற்பனை உரிமம் என்பது அரசின் சொத்து. ஆனால் உரிமைதாரர் இறந்துவிட்டாலும் அவர்களுடைய வாரிசுகள் தொடர்ந்து கடையை நடத்த அனுமதிப்பது தவறான ஒன்று. அரசுக்குச் சொந்தமான விற்பனை உரிமத்தை பலர் 4 கோடி ரூபாய், 5 கோடி ரூபாய் என வாங்கிக்கொண்டு அவர்களைப் பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்வதும் சட்டவிரோதமான செயல்.

மதுபானக் கடைகள்

தற்போது உள்ள நிலையில் ஒரு தனியாரிடமிருந்து வேறு ஒருவர் மாதம் ரூபாய் 2 லட்சம், 3 லட்சம் அளவுக்கு வாடகைக்கு எடுப்பதற்கு முன்பணமாக சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் பணம் செலுத்துவதும் சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. ஏறத்தாழ முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் புதிய உரிமங்கள் யாருக்கும் வழங்காமல், ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமங்களுக்கும் ஏலம்விடாமல் ஏதோ குறிப்பிட்ட ஒருசிலரின் சொத்து போன்று மதுபான விற்பனை உரிமங்கள் உள்ளன. எனவே மாநிலத்தின் வருவாயைக் கருத்தில்கொண்டு கள்ளுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகளைப் போன்று மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மதுபான விற்பனைக் கடைகளையும் அரசு பொது ஏலத்துக்குக் கொண்டுவர வேண்டும். இதில் உள்ள உண்மைநிலையை உணர்ந்து மாண்புமிகு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-puducherry-admk-informed-that-700-crores-loss-to-the-government-on-liquor-shop-licenses

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக