Ad

வெள்ளி, 17 ஜூன், 2022

புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட 57 எம்.பி-க்களில் 23 பேர் மீது கிரிமினல் வழக்கு; ஆய்வில் தகவல்!

அண்மையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 57 ராஜ்ய சபா எம்.பி-க்களில், கிட்டத்தட்ட 40 சதவிகித எம்.பி-க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக, அவர்கள் தாக்கல் செய்த தேர்தல் பிராமணப் பத்திர ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இது குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 57 ராஜ்ய சபா எம்.பி-க்களில், 23 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த எம்.பி-க்களில், 6 பேர் உத்தரப்பிரதேசம், தலா 4 பேர் மகாராஷ்டிரா மற்றும் பீகார், 3 பேர் தமிழ்நாடு, 2 பேர் தெலங்கானா மற்றும் ஆந்திரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்களில் தலா ஒருவர் என மொத்தம் 23 பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிடப்படிருக்கிறது.

பாஜக , காங்கிரஸ்

கட்சிவாரியாகப் பார்க்கும்போது, பா.ஜ.க-விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 22 எம்.பி-க்களில் 9 பேர், காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 எம்.பி-க்களில் 4 பேர், டி.ஆர்.எஸ் மற்றும் ஆர்.ஜே.டி-யில் தலா 2 பேர் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி, தி.மு.க, அ.தி.மு.க, சமாஜ்வாதி, சிவசேனா கட்சிகளிலிருந்து தலா ஒரு எம்.பி என 23 பேர் இதில் உள்ளனர். மேலும் இவர்களில், 12 பேர் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த 57 எம்.பி-க்களின் சொத்துமதிப்பை ஆய்வுசெய்ததில், 53 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மேலும், இந்த 57 எம்.பி-க்களின் சராசரி சொத்துமதிப்பு 154.27 கோடி என்று அறிக்கை கூறுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/newly-elected-rajya-sabha-mps-23-out-57-have-criminal-cases

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக