`இந்த வாழ்க்கையில் உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தன்னம்பிக்கை மட்டும்தான். அது இருந்தால் போதும், வெற்றி நிச்சயம்.’ - எழுத்தாளர் மார்க் ட்வைன்.
தன்னம்பிக்கை என்கிற ஒற்றைச் சொல் சாதாரணமானது கிடையாது. பலருக்கு வெற்றி தள்ளிப்போவதற்கும், சிலருக்குத் தொடர் தோல்வி கிடைப்பதற்கும் இது இல்லாததுதான் காரணம். பலருக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை வாய்த்துவிடும். பலருக்கு அதை யாராவது எடுத்துச் சொல்லி புரியவைக்கவேண்டியிருக்கும்.
2012-ம் ஆண்டு. கேரளாவிலுள்ள பரவூர் கிராமம். அங்கே `சாஸ்ராயன்’ என்கிற அறிவியல் பரப்புரை திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காகச் சென்றிருந்தார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அந்தத் திட்டத்தின் அடிப்படை மாணவர்களின் தகுதியை வளர்ப்பதற்குப் பயிற்சியளிப்பது. சுமார் 2,000 மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது. மாணவர்கள் மருத்துவர், விஞ்ஞானி, பொறியியலாளர், அரசு அதிகாரி என எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அதற்கேற்ப பயிற்சி கொடுப்பது.
அந்தப் பயிற்சி அரங்கில், `ஒரு நாட்டை பலப்படுத்த அறிவியல் எப்படி உதவும்?’ என்கிற தலைப்பில் உரையாற்றினார் அப்துல் கலாம். உரை முடிந்ததும் மாணவர்களின் கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார். மாணவர்களுக்கு ஏதேதோ சந்தேகங்கள்... அத்தனைக்கும் பொறுமையாக, அவர்களுக்குப் புரியும்படி பதில் சொல்லிக்கொண்டிருந்தார் கலாம்.
ஒரு மாணவன் தயங்கித் தயங்கி அப்துல் கலாமுக்கு அருகே வந்தான். வெகு தூரத்திலிருக்கும் கிராமத்தில் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவன் அவன். ``சார், என் பெயர் விஷ்ணு. எனக்கு என்ன கேள்வி கேட்குறதுன்னே தெரியலை. ரொம்ப பதற்றமா இருக்கு. இதுவரைக்கும் என் கிளாஸ்லகூட ஆசிரியர்கள்கிட்ட எந்தக் கேள்வியும் கேட்டது கிடையாது. ஆசிரியர்கள்கிட்ட பேசுறதுக்கு பயம். கூடப் படிக்கிற மாணவர்களோட பேசுறதுக்கு பயம். கொஞ்சம் திறமைசாலியான பசங்களைப் பார்த்தா `என்னால அவங்க மாதிரி ஆக முடியுமா’ன்னு பயம் வந்துடுது. இந்தத் தாழ்வு மனப்பான்மை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது. எனக்கு கப்பல் இன்ஜினீயர் ஆகணும்னு ஆசை. என்னால ஆக முடியுமா... அதுக்கு நான் என்ன செய்யணும்?’’
அரங்கமே ஒரு கணம் மௌனதில் ஆழ்ந்தது. அப்துல் கலாம் அவர்கள் அந்த மாணவனுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தது.
``விஷ்ணு... நீ மட்டுமில்லை. லட்சக்கணக்கான மாணவர்கள் உன்னை மாதிரிதான் இருக்காங்க. நான் ஒரு பாடம் சொல்லப்போறேன். அதை வரிக்கு வரி அப்படியே திருப்பிச் சொல்றியா?’’
மாணவன் விஷ்ணு தலையசைத்தான்.
கலாம் அழுத்தம் திருத்தமாக ஒரு கவிதையைச் சொல்ல ஆரம்பித்தார். அன்றைக்கு அந்த மாணவன் மட்டுமல்ல... அரங்கிலிருந்த அத்தனை மாணவர்களும் கலாம் சொன்ன கவிதையை திருப்பிச் சொன்னார்கள்.
`நான் பறந்துகொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் கனவுடன்
நான் வளர்ந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களைச் செயல்படுத்த
நான் வளர்ந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் வளர்ந்தேன் என்னால் முடியும் என்ற
நம்பிக்கையுடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன், வாழ்வில் பறந்துகொண்டேயிருப்பேன்.’
அப்துல் கலாம், அந்த மாணவனைப் பார்த்தார். அவன் முகத்தில் ஒரு தெளிவு, பூரிப்பு. `சார், எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. நான் நிச்சயம் கப்பல் இன்ஜினீயர் ஆவேன்’ என்று சொல்லிவிட்டு தான் அமர்ந்திருந்த இடத்துக்குப் போனான்.
மிக மிகச் சாதாரணமான எளிய வரிகள்தான். ஆனால், நம்பிக்கை ஏற்படுத்தும் வரிகள். ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கும் `வளர்ந்த பாரதத்தில் வாழ்வோம்’ என்கிற நூலில் இந்தச் சம்பவம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்துல் கலாம் ஆற்றிய சில முக்கியமான உரைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் சுவாமி விமூர்த்தானந்தர். நம்பிக்கை என்பது ஒரு சாவி. அது நமக்குக் கிடைத்துவிட்டால் எந்த சிக்கலான பூட்டையும் எளிதாகத் திறந்துவிடலாம். நம்பிக்கையைக்கூடச் சிலரால்தான் அழகாக ஊட்ட முடியும். அந்த அரிய காரியத்தை அழகாகச் செய்தவர் கலாம்!
source https://www.vikatan.com/spiritual/literature/motivation-story-from-the-life-of-abdul-kalam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக