சின்னத்திரையில் நமக்குப் பிடித்தமான பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஐஸ்வர்யா. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா, 'செம்பருத்தி' பார்வதி, 'தமிழும் சரஸ்வதியும்' வசுந்தரா, 'அன்பே வா' பூமிகா எனச் சின்னத்திரையில் அவர் பேசும் நாயகிகளின் பட்டியல் நீள்கிறது. கீதா கோவிந்தம் தமிழ் வெர்ஷனில் நடிகை ராஷ்மிகாவுக்குக் குரல் கொடுத்தவர் இவர்தான் என்பது கூடுதல் தகவல். அப்படிச் சின்னத்திரை, வெள்ளித்திரை என வலம் வந்து கொண்டிருப்பவரை ஒரு மாலை நேரத்தில் சந்தித்தோம்.
"சின்ன வயசில இருந்தே டப்பிங் பேச ஆரம்பிச்சிட்டேன். அம்மா மூலமாகத்தான் டப்பிங் எனக்கு அறிமுகமாச்சு. அவங்க சொல்லிக் கொடுத்துதான் இப்ப இந்தத் துறையில் நிற்கிறேன். என் அம்மா ஶ்ரீமதி. நடிகையாக அவங்களைப் பலருக்கும் தெரிந்திருக்கும். 'காதலர் தினம்' படத்துல அவங்களைப் பார்த்து நாங்க சின்ன வயசில கிண்டல் எல்லாம் பண்ணியிருக்கோம். மடிப்பாக்கம் மாதவன், லொள்ளு சபா போன்ற காமெடி தொடர்களில் நடிச்சிருக்காங்க. அவங்களுடைய கரியரும் ரொம்பவே போராட்டமாகத்தான் இருந்திருக்கு. இப்ப பல மீம்ஸ்களில் அம்மா போட்டோ வரும். அதைப் பார்த்துட்டு இப்ப பலர் அவங்களை அடையாளம் கண்டு என்கிட்ட நலம் விசாரிக்கிறாங்க. அப்ப அவங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கல. இப்ப சோசியல் மீடியா மூலமா கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. அவங்க ரொம்ப சந்தோஷமா இருந்த நாள்கள்னா அதுதான்! அம்மா இதய நோயாளிங்கிறதனால இப்ப எந்த வேலையும் பண்றதில்லை.
டப்பிங் எனக்கு பிடிச்ச துறை ஆயிடுச்சு. எத்தனை சீரியல்களுக்கு டப்பிங் பேசியிருந்தாலும் 'செம்பருத்தி' தொடர் மூலமாகத்தான் பயங்கர ரீச் கிடைச்சது. அந்தத் தொடரில் 'மாமா'ன்னு கூப்பிடுற டயலாக் செம வைரல். அதிலிருந்து பல தொடர்களில் மாமான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. பல ஆர்ட்டிஸ்ட் எனக்கான கிரெடிட்டை தவறாம கொடுத்திருக்காங்க. அந்த வகையில் செம்பருத்தி தொடருடைய 500வது எபிசோடின் போது ஷபானா என்னுடைய டப்பிங் ஆர்ட்டிஸ்ட்னு சொல்லி எனக்கு கிஃப்ட் கொடுத்தாங்க. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா அவங்களுடைய யூடியூப் லைவ்ல என் பெயரைச் சொல்லி எனக்கான கிரெடிட் கொடுத்தாங்க.
ஆரம்பத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனாவிற்குப் பேச கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. ஹேமா ஆங்கர் என்பதால் அவங்க துறுதுறுன்னு கடகடன்னு பேசுவாங்க. அவங்க அளவுக்கு ஈடு கொடுத்து பேசணும். ஆரம்பத்தில் அது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. பிறகு செட் ஆகிடுச்சு. அதே மாதிரி, 'திருமணம்' தொடரில் ஸ்ரேயாவுக்காக பேசினேன். அந்த சீரியலில் நிறைய லவ் சீன்ஸ் வரும். அந்தத் தொடரும் பயங்கர ரீச் கொடுத்துச்சு" என்றவரிடம் திரைப்படங்கள் டப்பிங் குறித்துக் கேட்டோம்.
வெள்ளித்திரை, சின்னத்திரை ரெண்டிலும்தான் கவனம் செலுத்திட்டு இருக்கேன். 'கீதா கோவிந்தம்' படத்திற்காக ராஷ்மிகாவுக்கு டப்பிங் பேசினேன். அதே மாதிரி 'எம்ஜிஆர் மகன்' படத்திற்காக மிருனாளினிக்கும் பேசியிருக்கேன். சில படங்களில் பாதி படத்திற்கு டப்பிங் பேசியிருப்பேன். அடுத்து கூப்பிடவே மாட்டாங்க... பார்த்தா படம் ரிலீஸ் ஆகியிருக்கும். என்ன காரணம்னே சொல்லாம நம்மளைத் தூக்கியிருப்பாங்க. அப்படியும் எனக்கு நடந்திருக்கு. நம்மளுடைய தவற்றை சுட்டிக் காட்டிட்டு தூக்கியிருந்தால் கூட என்ன காரணம்னு தெரிஞ்சு அதை சரிசெய்துக்கலாம். எதுவுமே சொல்லாம தூக்குறது ரொம்பவே கஷ்டமா இருக்கும். சீரியலிலும் இந்த மாதிரி பல விஷயங்கள் நடக்கும்.
இன்னும் சொல்லணும்னா அவார்டு கொடுக்கிறதா சொல்லி ஃபங்ஷனுக்குக் கூப்பிட்டு அவார்டு கொடுக்காம அவமானப்படுத்தி அனுப்புவாங்க. இந்த மாதிரி அவமானங்கள், புறக்கணிப்புகள் எல்லாத்தையும் சந்திச்சிருக்கேன். 'கீதா கோவிந்தம்' வந்தப்ப பலர் தெலுங்கில் பார்த்துட்டு தமிழில் பார்த்தாங்க. அது கண்டிப்பா அவங்களுக்கு வித்தியாசமா தெரிஞ்சிருக்கலாம். அதனால சிலர் தெலுங்குதான் பெஸ்ட் ஆக இருந்துச்சுன்னு சொன்னாங்க. சிலர், க்ளைமாக்ஸ் சீன்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க. பாசிட்டிவ், நெகட்டிவ் ரெண்டையும் எடுத்துக்கிறேன்.
நான் தளபதியோட தீவிரமான ரசிகை. படத்தில் யாராவது அவரைத் திட்டினா, அடிச்சா அழுதுடுவேன்" என்றவரிடம் அவருடைய நிச்சயதார்த்தம் குறித்துக் கேட்டோம்.
"எனக்கும் அர்ஜூன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கு. இது பக்கா லவ் மேரேஜ். கோவிட் லாக்டௌன் சமயத்தில் மலர்ந்த காதல் இது! எங்க வீட்ல பயங்கரமா எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ரெண்டு வருஷம் காதலில் உறுதியா இருந்து போராடி சம்மதமும் வாங்கியாச்சு. ஆகஸ்ட் 31-ம் தேதி எங்களுக்குத் திருமணம் உறுதியாகி இருக்கு!" என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து ஐஸ்வர்யா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
source https://cinema.vikatan.com/celebrity/serial-dubbing-artist-ishwarya-talks-about-her-dubbing-journey
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக