சீனாவில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக தங்களின் பாஸ்ப்போர்ட்டை மாற்றிக்கொண்ட இரட்டைச் சகோதரிகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து சீனாவின் ஹார்பின் டெய்லி ஊடகம், ``இரட்டைச் சகோதரிகளான ஹாங், வெய் ஆகியோரில், ஹாங் என்பவர் தன் கணவருடன் வெளிநாடு செல்ல முயன்றபோது, தன் சகோதரியின் பாஸ்போர்ட்டை மாற்றிக்கொண்டது தெரியவந்தது" என போலீஸார் கூறியதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஹாங், தன் கணவருடன் ஜப்பான் செல்ல நினைத்திருக்கிறார். ஆனால், அவருக்கு விசா மறுக்கப்படவே, அவர் தன் சகோதரி வெய்-ன் பாஸ்போர்ட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவர்மீது சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை மடக்கி விசாரித்தனர். அதில், சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு குறைந்தது 30 முறை பயணம் செய்ய ஹாங், தன் சகோதரியின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.
இதே போல், மறுபுறம் வெய்-யும், தன் சகோதரியின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நான்கு முறை தாய்லாந்துக்குச் சென்று வந்திருக்கிறார். இருப்பினும், போலீஸ் தரப்பிலிருந்து இரட்டைச் சகோதரிகளின் அடையாளம், வயது குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய குடியேற்ற நிர்வாகத்துறைச் (Immigration Management Department) சேர்ந்த உள்ளூர் போலீஸ் அதிகாரி வாங் சியாடோங், ``இது போன்று பயணங்களுக்கு டி.என்.ஏ-வைப் பயன்படுத்திக்கொள்வதென்பது, சட்டவிரோதமானது. பாஸ்போர்ட் பிரச்னைகள் குறித்து குடியேற்ற நிர்வாகத்துறை அதிகாரிகளிடம் நீங்கள் விசாரிக்கலாம். ஆனால் அதற்காக வேறொருவரின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முடியாது. இது தண்டனைக்குரிய குற்றமாகும்" எனத் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/international/in-china-twin-sisters-illegally-exchange-their-passports-for-foreign-journey
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக