Ad

ஞாயிறு, 26 ஜூன், 2022

`அதிமுக சட்டத்துக்கு புறம்பான கூட்டம்; முடிவுகள் எடுத்தாலும் கட்டுப்படுத்தாது’ - ஓ.பி.எஸ் காட்டம்

`அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. `அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெறும்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், `பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது சட்டவிரோதமானது’ என்று பன்னீர்செல்வம் தரப்பினரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக தலைமை கழக அறிவிப்பாக நேற்று ஒரு அறிக்கை வெளியானது.

அந்த அறிக்கையில், ``அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்காக 27-6-2022 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தலைமை கழக, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை கூட்டரங்கில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தது. ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊரான தேனிக்கு சென்றிருக்கும் நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அவைத்தலைவர் என யாருடைய கையெழுத்தும் இல்லாமல் தலைமை கழக அறிவிப்பு என்று இந்த அறிக்கை வெளியானது அதிமுக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியது.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ``அதிமுக சட்டதிட்ட விதிகளின்படி கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடமே உள்ளது. அதன்படி இருவரின் ஒப்புதல் பெற்று தான் எந்தவிதமான கூட்டம் கூட்டப்பட வேண்டும். ஆனால் இருவருடைய ஒப்புதலும் இன்றி, கையொப்பம் இல்லாமல் `கழக தலைமை நிலைய செயலாளர், தலைமை கழகம்’ என்ற பெயரில் கழக சட்டதிட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 27-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் விதியை மீறி கூறப்பட்டுள்ள மேற்படி கூட்டம் கழக சட்டம் மட்டும் விதிகளுக்கு புறம்பானது ஆகும். கழக சட்டத்திற்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப் பட்டால் அது கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும் தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை கழக தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் சென்னையில் இல்லாத நிலையில் சென்னையில் நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது சர்ச்சையானது. இந்த கூட்டம் செல்லத்தக்கது அல்ல அதில் எடுக்கப்படும் முடிவுகள் கழகத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து இருப்பது அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் மீண்டும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ops-statement-after-meeting-announcement-in-the-name-of-admk-office

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக