Ad

ஞாயிறு, 19 ஜூன், 2022

``கட்சிக்காக விட்டுக்கொடுத்தார்; அனுபவிக்கிறார்" - வருந்தும் ஒ.ராஜா; பண்ணை வீட்டில் நடந்தது என்ன?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஒற்றைத் தலைமைக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்த நிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தலைமையில் நேற்று மாலை அதிமுக நிர்வாகிகளுடன் திடீர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ.பி.எஸ்-ன் பண்ணை வீட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தேனி மாவட்ட நகர், பேரூர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 61 பேரில் 59 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் பேசிய மாவட்ட செயலாளர் சையதுகான், ``தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். இந்தக் கூட்டம் வருகிற ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்பது எவ்வாறு நடந்து கொள்வது என்பதற்காக வழக்கமாக நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டம் தான். இது அவசரக் கூட்டம் அல்ல.

தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவர்களில் இருவர் மட்டும் நிர்வாகிகள் மற்ற அனைவரும் கட்சியில் நீக்கப்பட்டவர்கள் என்பதால் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை.

தேனி மாவட்ட செயலாளர் சையதுகான்

நடைபெறவுள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குபிறகு நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் தேர்வான நிர்வாகிகள் தேர்வு ஒப்புதல் பெறுவதற்காக தான். இதில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது. ஒற்றைத்தலைமை தீர்மானம் கொண்டுவந்தால் அதை தேனி மாவட்ட நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதேபோல எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்தவர்கள், தற்போது விலகியிருப்பவர்கள் என அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக்கொள்பவர்கள் அதிமுகவில் இணையலாம்” என்றார்.

இதற்கிடையே ஒபிஎஸ் சகோதரர் ஒ.ராஜா திடீரென பண்ணை வீட்டிற்கு வந்தார். அவருக்கு ஆலோனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பிறகு ஒ.ராஜா வீட்டிற்குள் சென்று சில நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். கூட்டம் முடியும்போது வெளியே வந்தவர் கட்சியினரிடம் பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். அவர் சென்ற பிறகு, நிர்வாகிகள் ஒபிஎஸ்-ஐ வாழ்த்தியும் இபிஎஸ்-ஐ வசைபாடியும் நீண்டநேரம் கோஷமிட்டு கொண்டிருந்தனர்.

ஒ.ராஜா

இதுகுறித்து ஒ.ராஜாவிடம் பேசினோம். ``நான் மாலை வேளையில் வாக்கிங் வருவது வழக்கம். கூட்டம் நடப்பது கேள்விப்பட்டு என்னவென்று விசாரிக்கலாம் என வந்தேன். கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஒபிஎஸ் கட்சிக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்தார். அதற்கு தற்போது அனுபவித்து வருகிறார். இந்தக் குழப்பங்கள் நீங்கிய பிறகு சசிகலாவின் தலைமையிலேயே கட்சி நடக்கும்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/oraja-talks-regarding-admk-current-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக