Ad

செவ்வாய், 21 ஜூன், 2022

ராமநாதபுரம்: ``அக்னிபத் திட்டம் தேச துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டது" - இயக்குநர் பேரரசு

சர்வதேச யோகா தினத்தையொட்டி ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் பாஜக சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர், ``இந்தியா என்பது பொதுவானது. இதில் இன்று ஒரு கட்சி ஆளும், நாளை மற்றொரு கட்சி ஆளும், கட்சியை விமர்சனம் செய்யலாம், கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது.

அக்னிபத் திட்டம் மதம் சார்ந்த திட்டமோ அல்லது கட்சி சார்ந்த திட்டமோ கிடையாது. இது இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த திட்டம். எந்த திட்டம் வந்தாலும் எதிர்க்கும் தீயசக்தி கும்பலை மோடி களை எடுக்க வேண்டும். இளைஞர்கள் ரயிலை கொளுத்தும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது. அவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் நபர்களை கண்டறிய வேண்டும். இதுபோன்ற இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேசத் துரோகிகள் தான். அக்னிபத் திட்டம் இதுபோன்றவர்களை அடையாளம் காட்டிவிட்டது. வன்முறையை தூண்டி விட்டு இந்துத்துவாவை வளர்க்கிறார்கள் என்ற அயோக்கிய தனமான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். அக்னிபத் திட்டம் இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என வேறுபாடு கிடையாது, விருப்பம் இருக்கும் இந்தியர்கள் யாராக இருந்தாலும் அதில் சேர்ந்து கொள்ளலாம் என்று தான் மத்திய அரசு கூறிவருகிறது.

யோகா நிகழ்ச்சியில் பேசிய பேரரசு

அதேபோல் இந்தி படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம் என்றுதான் மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இந்தியை திணிப்பதாக கூறி மொழியை வைத்து மத்திய அரசை விமர்சிக்கின்றனர். அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் முறையான பயிற்சி கொடுத்து அவர்களுக்கு தேவையானவற்றை மத்திய அரசு செய்துகொடுக்கிறது. இளைஞர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. இதற்கு மேல் வேறு என்ன செய்ய வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் இந்தியாவை நாசமாக்கும் திட்டங்கள் என கூறுகிறார்கள்.

இங்குள்ள டாஸ்மாக் கடையால்தான் இளைஞர்கள் நாசமாய் போய் கொண்டிருக்கிறார்கள். அதனை முதலில் இழுத்து மூடுங்கள். இந்தியாவுக்கு நல்லது நடந்து விடக்கூடாது என ஒரு கும்பல் இது போன்ற வேலைகளை செய்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் தேசப் பற்று உள்ளவர்கள் இருக்கிறதே அபூர்வம், அப்படி தேசப்பற்றுடன் இருப்பவர்களையும் கெடுக்கும் நபர்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர். அவர்களை பிரதமர் மோடி இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

நான் வ்ரும் செப்டம்பர் மாதத்தில் ஒரு படத்தை இயக்க உள்ளேன், அது பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சினிமாவைப் பொருத்தவரை அனைத்து வகையான படங்களையும் பொதுமக்களை திரையரங்கிற்கு வந்து ரசிக்க வைக்க வேண்டும். அப்போது இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாலச்சந்தர், மகேந்திரன் ஆகியோர் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த திரைப்படங்களை இயக்கினர். முத்துராமன் மசாலா படங்களை எடுத்து கமர்ஷியலாக வெற்றி கண்டவர்.

நிருபர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் பேரரசு

இதுபோல் அனைத்து வகையான படங்களையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். தற்போது துப்பாக்கிகள் சுடும் படங்களுக்கு மக்கள் அதிகமாக வரவேற்பு கொடுக்கின்றனர். அதனால் அதுபோன்ற இயக்குநர்களை தயாரிப்பாளர்கள் நாடி செல்கின்றனர். நடிகர் சங்கம் முடங்கிப்போய் கிடந்தது. விஷால் நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற பிறகும் அப்போது இருந்த நடிகர் சங்கம் போல் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.

நடிகர் சங்க கட்டடம் கட்ட வேண்டும் என கூறி வருகிறார். ஆனால் அதற்கான முயற்சிகள் பெரிதாக எடுத்ததாக தெரியவில்லை. ஒருவேளை எனக்கு தெரியவில்லையா என தெரியவில்லை” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/agneepath-project-film-director-perarasu-press-meet-in-ramanathapuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக