Ad

வியாழன், 23 ஜூன், 2022

பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்ப பெற ரூ.50 லட்சம்... பேரம் பேசிய குடும்பத்தினரை சிக்க வைத்த முதியவர்

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் முதியவர் ஒருவர் வசித்துவந்துள்ளார். இவருடன் அந்த பகுதியில் வசித்த சிறுமி ஒருவர் பழகியுள்ளார். இந்த நிலையில், வசதியாக வாழ்ந்து வந்த முதியவரிடமிருந்து பணம் பறிக்கச் சிறுமியின் குடும்பம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த திட்டத்தின் படி அந்த முதியவர் மீது மகிளா காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.

மேலும், இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரிப்பதற்கு இடையில் அந்த முதியவரிடம், ரூ. 50 லட்சம் கொடுத்தால் புகாரை வாபஸ் பெறுவதாகக் கூறி பேரம் பேசியுள்ளனர். இந்த பேரம் இறுதியில் 30 லட்சமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அந்த முதியவர் ரகசியமாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் மீது புகார் அளித்துள்ளார். மேலும், குற்றவாளிகளைச் சிக்கவைக்கச் சிறுமியின் தாயிடம் பணம் தருவதாக ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார்.

காவல்துறை

அந்த சிறுமியின் தாயும், சகோதரனும் அந்த ஹோட்டலுக்கு வந்தவுடன் அவர்களிடம் சிறு தொகையை முதியவர் வழங்கியுள்ளார். அதே ஹோட்டலில் அப்போது மஃப்டியில் இருந்த காவலர்கள் சிறுமியின் தாயையும், சகோதரனையும் கையும் களவுமாகப் பிடித்தனர். விசாரணையில் குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், சிறுமியின் தாயிடமிருந்து 1 லட்சம் ரூபாயை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

குற்றத்துக்கு உதவியாக இருந்த சிறுமியை காவல்துறை விசாரித்து வருகின்றனர். அந்த முதியவரின் புகாரின் அடிப்படையில் ​​சிறுமியின் தாயார், அவரின் சகோதரர் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது பொய் பாலியல் வழக்கு பதிவு, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.



source https://www.vikatan.com/news/crime/mother-daughter-duo-demand-rs-50-lakh-to-withdraw-rape-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக